கொழும்பு: ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இனவாதத்தை தூண்டும் வகையில் குழப்பம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி அப்துல் ராசிக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது குறித்த நபரால் முன்வைக்கப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டதோடு, ஏற்கனவே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட இவ்வாறான வழக்கொன்றில், எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் மீண்டும் இவ்வாறான விடயத்தை மேற்கொள்ளக்கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பிணை நிபந்தனை மீறப்பட்டுள்ளதால் பிணையை நிராகரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
Leave a comment