சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் சிறையில் ‘மரணம்’

ramkumarசென்னை: கடந்த ஜூன் மாதம் சென்னையில் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் காலை நேரத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தபோது வெட்டிக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் ஜூலை 1ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் காவல்துறை கைது செய்தது. காவல்துறை ராம்குமார் வீட்டை சுற்றி வளைத்ததும் அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் காவல்துறை கூறியது.

சுவாதியை நீண்ட காலமாகப் பின்தொடர்ந்த ராம்குமார், இந்தக் கொலையைச் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. அவர் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை நான்கே முக்கால் மணியளவில் சிறையில் சமையல் செய்யும் பகுதியில் உள்ள மின்சாரக் கம்பியைக் கடித்ததால் ஆபத்தான நிலையில் இருந்த ராம்குமார் முதலில் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதன் பிறகு அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.

அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை, அங்கிருந்த யாரும் பார்த்தார்களா என்பது இதுவரை தெளிவாகவில்லை. இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்திருக்கிறது. அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ramkumar

ராம்குமார் நீதிமன்றக் காவலில் இறந்திருப்பதால் இது குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராம்குமாரின் உடலைப் பார்க்க அவரது வழக்கறிஞர் ராம்ராஜுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவரது தரப்பினர் ராயப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊடகங்களிடம் பேசிய ராம்ராஜ், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணை நடத்த வேண்டுமெனக் கூறினார். தன்னுடைய மகன் இறந்ததை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ள அவரது தந்தை பரமசிவம், இது திட்டமிட்ட படுகொலை என்று கூறியிருக்கிறார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை கோரியுள்ளன.

Published by

Leave a comment