ஏறாவூர்: ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்த்pல் பேரில் நான்குபேர் 17.09.2016 சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இதிலடங்குகின்றனர். விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பணம், நகைகள் கொள்ளையிட வந்தவேளை ஆட்கள் அடையாளங்காணப்பட்டதனால் கொலைசெய்ததாக முதற்கட்ட விசாரணையில் அறியவந்துள்ளது. ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த 11.09.2016 ஞாயிற்றுக்கிழமையன்று பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையங்களின் இரண்டு குழுக்கள் புலன்விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. இதன்போது கொலைசெய்யப்பட்ட ஜெனீராவின் கணவரின் தம்பி ஏற்கனவே விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர்.
பொதுமக்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கியதனாலேயே இவ்விடயம் வெற்றிகரமாகியுள்ளதாகவும் பொதுமக்களைப் பாராட்டுவதாகவும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சின்தக்க பீரிஸ் தெரிவித்தார்.
இக்கொலைச் சம்பவம் ஏறாவூர்ப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை மாத்திரமின்றி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதையடுத்து பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக்கோரி பொதுஅமைப்புக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதையடுத்து பொதுமக்கள் வெள்ளைக்கொடிகள் பதாதைகளைத் தொங்கவிட்டு அமைதிகாத்துடன் பொலிஸாருக்கு தகவல்களையும் வழங்கிவந்தனர்.
– ஊடகவியலாளர் நஸீர் (முகநூல்)
Published by


Leave a comment