மாத்தரை: ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தை கவிழ்க்க கட்சி ஒன்றை உருவாக்குவார்களாயின் அவர்கள் தொடர்பில் இதுவரை மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளியிடப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருக்கிறார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேசிய ஆட்சியை அமைத்த ஒரு வருட நிறைவை முன்னிட்டு மாத்தரையில் நடந்த வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்த வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அரசு பற்றி புரிதல் இல்லாதவர்கள் அதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த ஜனாபதி மைத்ரிபால சிறிசேன, முந்தைய அரசு நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடனுக்குள் நாட்டை தள்ளியதாக குற்றஞ்சாட்டினார்.
சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதே சமயம், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அரசு தாயராக இருப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த ஐந்து வருடங்களில் தேசிய அரசாங்கம் மேலும் வலுவடையும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மோசடி, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நல்லாட்சியில் இடம் கிடையாது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே கட்சிப் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தருணம் இதுவென இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
போர் முடிவடைந்த நாட்டில், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய முக்கிய கடமையை தாம் செய்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
Published by

Leave a comment