-
M.T. ஹைதர் அலி
காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக கடந்த 2016.04.19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வீதி விபத்தினை தடுப்பதற்கு பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டு ஒவ்வொன்றாக அவை செயற்படுத்தப்பட்ட வண்ணமுள்ளன. அந்த வகையில் இதன் தொடராக பிரதானமாக இனங்காணப்பட்ட நான்கு இடங்களான மீரா பாலிகா முன்பாகவுள்ள நான்கு மூலை சந்தியும், குட்வின் சந்தியிலுள்ள, மெத்தைப்பள்ளி சந்தி மற்றும் டெலிகொம் சந்தி ஆகிய சந்திகளிலும் வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்புக்களையும் அமுல்ப்படுத்துவதோடு, ஊருக்குல் இருந்து பிரதான வீதிக்கு வருகின்ற வீதிகளில் நிறுத்தல் கோடுகளை அமைப்பது சம்மந்தமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் 2016.08.10ஆந்திகதி (புதன்கிழமை) பிரதான வீதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு எந்தெந்த இடங்களில் வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட வேண்டுமோ அவ்விடங்கள் இணங்காணப்பட்டதோடு, எதிர்வரும் 2016.08.12ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) இவ்வேலைகளை ஆரம்பிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.
அதற்கமைவாக 2016.08.12ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட்டன. வேகத்தடுப்புக்களை சரியான இடங்களில் அமைப்பதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவதானிப்பதற்காகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்விடங்களுக்கு நேரில்சென்று அவதானித்தார்.




Leave a comment