சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் அதிரடி நடவடிக்கையும்! தீவிரமடையும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும்!!

  • ஹாசிப் யாஸீன்

sainthamaruthuசாய்ந்தமருது: சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வலியுறுத்தியும், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்கு முகமாக   வெள்ளிக்கிழமை (22) சாய்ந்தமருதிலுள்ள சகல ஜூம்ஆப் பள்ளிவாசலிலும் குத்பா பிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதுல் தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அக்கபர் ஜூம்ஆப் பள்ளிவாசல், மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் விதத்தில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டு தொழுகை முடிவடைந்தவுடன் இறைவனை மன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பால் பெற்றுத்தருவதாக வாக்குறுதி பகிரங்கமாக மக்கள் மத்தியில் வழங்கப்பட்டது.

sainthamaruthu

இதற்கு மேலாக கடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கல்முனை வந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலும் அவரது வாயாலும் ‘சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்’ என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல முஸ்தீபுகளை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் மேற்கொண்டாலும்; இதன் செயற்பாடுகள் இதுவரை சோபை இழந்த காணப்படுகின்றது. இதனால் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் இக்கோரிக்கை நிறைவேறுமா? என்ற சந்தேகப் பார்வை நாளுக்கு நாள் வலுவடைகின்றது.

தற்போது கல்முனை மாநகரசபை உட்பட ஏனைய உள்ளுராட்சி சபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையிலும்இ 2017 முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் இக்கோரிக்கையினை நிறைவேற்றிக் கொள்ளுமுகமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதனடிப்படையில் இதன் முதற்கட்டமே இன்றைய குத்பா பிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனையுமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Published by

Leave a comment