மதீனா: மதீனாவில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதலை மேற்கொண்டவர் அப்துல்லாஹ் கல்ஷா கான் எனும் பாகிஸ்தான் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் கடந்த 12 வருடங்களாக மதீனாவில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்திருந்தனர். இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்ட பள்ளிவாசலுக்கு அருகில், மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்திலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதல் குறிப்பாக பொலிஸாரை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது, சவூதி அரசாங்கத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரசாங்கம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை அழிப்பதற்கு உதவி வருகின்றமை அதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நோன்பு திறக்கும் நேரத்தில் இடம்பெற்ற குறித்த தாக்குதலின்போது, தாக்குதலை மேற்கொண்ட நபர், நோன்பு திறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொலிஸாரிடம் வந்து, தானும் உங்களுடன் இணையலாமா என கேட்டுள்ளார்.
பொலிஸார் அவரை வரவேற்றதை அடுத்து, அருகில் நெருங்கி வந்த அவர் தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a comment