பதிலமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவிப்பு!
தற்போதைய சூழலில் முஸ்லிம்கள் எவரும் வீணாக அச்சமடையத் தேவை இல்லை என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை பதிலமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் நேற்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களையும் பிரச்சினைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்த்து வைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி இந்நாட்டில் வாழும் சகல இன, மத மக்களினதும் ஜனாதிபதியாவார். அவர் ஒருபோதும் இன, மத, மொழி பேதம் பார்ப்பதில்லை. அவர் எல்லா மக்களுடனும் அன்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்ற மனிதாபிமானம் மிக்க தேசத் தலைவர்.
அவரது தலைமையின் கீழ் நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருப்பதில் பொறாமை கொண்டுள்ளவர்களும், அவரது தலைமையில் நாடு துரித அபிவிருத்தியைக் கண்டு வருவதையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களும் சதி, சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
அவற்றின் ஊடாக நாட்டில் மீண்டும் குழப்ப நிலையையும், இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒருபோதும் பலனளிக்காது.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட எல்லா இன, மத மக்களினதும் ஐக்கியத்திற்கும் பாதுகாப்புக்கும் அபிலாஷைகளுக்கும் எந்த விதப் பாதிப்பும் ஏற்பட எமது ஜனாதிபதி ஒருபோதுமே இடமளிக்க மாட்டார்.
அதனால் முஸ்லிம்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவை இல்லை. நான் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர் என்ற வகையில் இதனை உறுதிபடக் கூறுகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment