இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பலத்த வாதங்களையும் எதிர்ப்புக்களையும் வெளிக்காட்டி, அவற்றை மும்முரமாக செயல்படுத்திவரும் பொது பல சேனா இயக்கத்தின் பின்னணியில் சில இலங்கை முஸ்லிம்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அரசியல் இலாபத்துக்காக முஸ்லிம்களை சிதைப்பதற்கு பொது பல சேனாவுடன் சில முஸ்லிம்கள் செயற்பட்டு வருவது உண்மையானதாக இருக்குமா என்ற கேள்விகள் எம் மத்தியில் எழுந்தாலும், அவற்றை நம்ப முடியாமலும் இலகுவாக விட்டுவிடவும் முடியாத நிலையிலும் இருந்தாலும், பொது பல சேனாவின் கருத்துக்களில் அவை தெட்டத்தெளிவாக வெளிக்காட்டி வருகின்றது.
இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அதிகமான முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதேபோல் தென் இலங்கையில் வகிக்கும் அதிகமான முஸ்லீம்களும் சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கைகைய பின்பற்றி வருகின்றனர். இக்கொள்கை இலங்கை முஸ்லிம்களில் அரைவாசிக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வந்தாலும், மேற்கூறப்பட்ட இரு அடிப்படைகளை வைத்து பல ஊகங்கள் தெட்டத்தெளிவாகின்றன.
இதுவரை ஹலால் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டி வந்த பொது பல சேனா அமைப்பு, தற்பொழுது ‘வஹாபிஸம்’ பற்றி குரல் கொடுத்திருக்கின்றது.
‘வஹாபிஸம்’ என்பது சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கப்ர் வணக்கம், கந்தூரி, கொடியேற்றல், பிறந்த நாள், மீலாது விழாக்கள், சீதனம்…இது போன்ற விடயங்களை எதிர்த்து அவற்றை தடுப்பதற்காக போராடும் கொள்கை என்பதாக சுன்னத்-வல்-ஜமாத்தினர் குற்றம் சாட்டுவது நடை முறையில் இருந்து வருகின்றது.
இந்த ‘வஹாபிஸம்’ சவூதியில் இருந்து அப்துல் வஹ்ஹாப் என்பவரது இஸ்லாமிய மறுமலர்ச்சியில் இருந்து உதயம் பெற்றது என்பதும் மேற்படி சுன்னத்-வல்-ஜமாத்தினர் தெரிவிக்கும் விடயமாகவும் இருக்கின்றது.
இந்நிலையில், ‘வஹ்ஹாபிஸம்’ பற்றி பொது பல சேனா அமைப்புக்கு சொல்லிக் கொடுத்தது யார்? என்ற கேள்வி இன்று தெட்டத்தெளிவாக எமக்குள் எழுகின்றது.
முன்னர் இலங்கைக்கு வந்த தொஹீத் அமைப்பைச் சார்ந்த தென் இந்திய மார்க்க பிரச்சாரகர் பி. ஜெய்னுலாப்தீன் அவர்களை நாடு கடத்தும் அளவுக்கு இலங்கையில் முஸ்லிம் அரசியல் செல்வாக்குச் செலுத்தி இருந்ததையும் இச்செய்திக்கு மேற்கோள் காட்டலாம்.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முஸ்லிம்கள் மறைக்க முற்பட்டாலும், இவ்விடயத்தில் தீர்க்கமான ஓர் விடயத்தை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஹலால் என்பது முஸ்லிம் குழுக்களுக்குள் இருந்து வந்த வேறுபாட்டுடன் சம்பந்தப்பட்டதல்ல! உலக முஸ்லிம்கள் அனைவராலும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விடயம்.
இன்று ‘வஹ்ஹாபிஸம்’ பற்றி பேசும் பொது பல சேனா கடந்த வருடம் அனுராதபுரத்தில் ஓர் சியாரத்தை உடைத்தெறிந்திருந்ததும் ஞாபகம் இருக்கலாம்.
எனவே பொது பல சேனாவை சொற்ப அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தி முஸ்லீம்களுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தி துண்டாட நினைக்கும் நயவஞ்சகர்கள் இறைவனை முதலில் பயப்பட வேண்டும்.
பலத்த பலத்துடன் வெளிக்கிளம்பி, முஸ்லிம்களை திட்டமிட்டு வேட்டையாட வெளிக்கிளம்பி இருக்கும் இவ் இயக்கத்துக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஓர் அரணியில் திரளவேண்டும்.
முஸ்லிம்கள் பிளவு பட்டதால்தான் ஈராக்கில் அமெரிக்காவுக்கு இலகுவாக காலடி எடுத்து வைக்க முடிந்தது என்பதையும், முஸ்லிம்கள் ஓரணியில் நிற்பதால்தான் ஈராணில் தன் மூக்கைக்கூட அமெரிக்காவுக்கு நுழைக்க முடியாமல் இருக்கின்றது என்பதையும், ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் உணர்ந்து சிந்திக்க வேண்டும்.
எனவே விஸ்வரூபத்திற்கு எதிராக குரல் கொடுத்து இன்று குரல் வளை பிடுங்கப்பட்டிருக்கும் தௌஹீத் இயக்கங்கள், சுன்னத்-வல்-ஜமாஅத் அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியலுக்கு அப்பால் நின்று முகம் பார்த்து பேசி, இலங்கை முஸ்லிம்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை ஏற்படுத்த வழிசமைக்க வேண்டும். இதுதான் இன்றைய காலத்தின் தேவை!

Leave a comment