வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அவர்கள் தற்போது இருக்கும் நாட்டின் பிரஜாவுரிமையுடன் இலங்கை பிரஜாவுரிமையையும் வழங்கும் இரட்டை பிரஜாவுரிமை செயற்றிட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இலங்கை பிரஜாவுரிமை சட்டத்தையும் குடிவரவு குடியகல்வு சட்டத்தையும் ஏக காலத்தில் திருத்தக்கூடிய ஒரு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிய பின்னர் இந்த இரட்டை பிரஜாவுரிமை திட்டம் அமுலாக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை 1988க்கு முன்னர் இலங்கையில் அமுலில் இருந்தது. ஆயினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தோன்றிய காரணத்தினால் அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்தை 1988ம் ஆண்டு முதல் இடை நிறுத்தி இருந்தது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சூலாநந்த பெரேரா இது பற்றி தகவல் தருகையில், இரட்டை பிரஜாவுரிமை சலுகையை பயன்படுத்தி சிலர் வடக்கில் மிகவும் தந்திரமாக காணிகளை வாங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்திருப்பதனால் அவை தொடர்பான சட்டத்திலுள்ள ஓட்டைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் தயாரிக் கப்படும் என்று கூறினார். கடந்த 18ம் திகதியன்று பாதுகாப்பு செயலாளருடன் தாம் நடத்திய ஆலோசனைக்கு பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
– தினகரன்
Leave a comment