பழுளுல்லாஹ் பர்ஹான்
கிளிநொச்சி: கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திடீரென இனம்தெரியாத கூலிப்படையினர்
கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், சி. சிறிதரன், எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது இந்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி அடாவடித்தனமான தாக்குதலைக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சம்வம் தொடர்பாக அவர் தமது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனநாயக நாடு என கூறும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக செயற்பாட்டை ஒழித்துக்கட்டுவதற்காகவும். அவர்களை தமிழ் மக்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்காகவும் பல விதமான திட்டமிட்ட செயற்பாடுகளையும், அட்டூழியங்களையும் கடந்த சிலகாலமாக மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்புக்கு விடப்பட்டவர்களும் இவ்விடயம் சார்பாக கவனம் செலுத்தாமல் இருந்தமை. இந்நாட்டில் எதிர்கட்சிகளில் அமர்ந்துள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எதுவித பாதுகாப்பும் நியாயமான முறையில் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு தொடர்ந்து சர்வதேசத்தால் மனிதஉரிமை மீறல் குற்றசாட்டை தாங்கிவரும் இவ்வரசாங்கம் தம்மையும், தமது ஒட்டுக் குழுக்களையும் திருத்தி ஜனநாய வழிக்கு கொண்டு வராவிட்டால் இந்நாடு சர்வதேச நாடுகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதை எப்போதும் மாற்ற முடியாது.
எனவே, இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளும் தமது சகாக்களுக்கு இச்செயற்பாட்டை நிறுத்துமாறு அரசாங்கம் கட்டளை பிறப்பதுடன், சகல கட்சிகளும் ஜனநாயக முறையில் ஒன்று கூடவும், கருத்துரைக்கவும், செயற்படவும், கட்சிசார்பாக குழுக்களை எற்படுத்தவும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் மக்கள் பிரதிகளுக்கு பாதுகாப்புக்கு அமர்த்தும் படையிரையும் நியாயமாக தமது கடமைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தற்போது நடைபெற்ற இக்காட்டு மிராண்டித் தனமாக செயற்பாட்டை நியாயமாக விசாரிக்கவும், இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.
Leave a comment