முஸ்லிம்களை நசுக்க முயலும் மதத்தீவிரவாதமும் சமூக உணர்வுகளுக்கு எதிரான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும்

PMGG நகர சபை உறுப்பினர்களின் கண்டன தீர்மானத்தை காத்தான்குடி நகரசபை மறுப்பு

PMGG ஊடகப் பிரிவு:

pmggகாத்தான்குடி: இந்நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வு மற்றும் இனவாத பிரச்சார நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாக முஸ்லிம்களின் மத கலாச்சார உரிமைகள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களின் தனித்துவ மத கலாசார அம்சங்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளாகவே இந்த இனவாத வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் அமைந்திருப்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது. இந்த நிலைபற்றி முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்நாட்டின் மீது அக்கறையும்இ பற்றுங்கொண்ட அத்தனை பேருமே ஆழ்ந்த  கவலை கொண்டுள்ளனர்.
 
ஜனநாயத்திற்கும் சுதந்திர மனித உரிமைகளுக்குமான  உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு  அமைப்புகளும் சர்வதேச சமூகமும் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய இனவாத நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் தேசப்பற்றுடன் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக ஏனையவர்களுடன் தோளோடு தோள்நின்று பாடுபட்ட ஒரு சமூகமாகும்.  இந்நாட்டின் உயற்சிக்காக எல்லாவகையான பங்களிப்புகளையும் செய்து தேசிய ஒருமைப்பாட்டிற்காக எப்போதுமே துணிவுடன் குரல் கொடுத்த சமூகமாகும். இப்படியான முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இனவாத அச்சுறுத்தல்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான எவ்வித தீர்க்கமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அரசாங்கம் மௌனம் காக்கிறது.

முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துத் தருவதாகக் கூறி அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட அத்தனை பேருமே உருப்படியாக இதுவரை எதனையும் செய்ய முடியாமல் அடங்கிக் கிடக்கின்றனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி ஜூம்ஆ தினத்தன்று இதே இனவாத கும்பலினால் தம்புள்ளை பள்ளிவாயல் மீதான அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நடாத்திய கூட்டத்தில் ஏகமனதான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற இனவாத வன்முறைகளை சட்டரீதியாக கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் சட்டபூர்வமான மத கலாசார உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தைக்  கோருகின்ற கடிதம் ஒன்றினை  சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு  ஜனாதிபதிக்கு உடனடியாக வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதற்கான கடிதப் பிரதியொன்றும் ஜம்இய்யதுல் உலமாவினால் உடனடியாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனாலும் தம்புள்ள சம்பவம் நிகழ்ந்து ஏறத்தாள ஒருவருடம் கடந்து விட்ட நிலையிலும் கூட இதுவரை அந்தக் கடிதம் ஜனாதிபதியிடம் வழங்கப்படவில்லையென்பது அதிர்ச்சியளிக்கின்றது.

கடந்த 26ம் திகதி கொழும்பில்  முஸ்லிம் புத்தி ஜீவிகள் கலந்து கொண்ட விஷேட உயர்மட்ட கூட்டமொன்றில் இதுபற்றி வினவப்பட்ட போது அதற்கான கடிதமானது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிரேஷ்ட அமைச்சரின் சட்டப்பைக்குள் பத்திரமாக இருப்பதாக பதிலளிக்கப்பட்டது.

நமது வாக்குகளைப் பெற்று அத்தனை வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நமது அரசியல் வாதிகளுக்கு நமது சமூகத்தின் மீது இருக்கும் அக்கறையினையும் அதே போன்று நமது மதிப்பிற்குரிய உலமா சபையின் மீதிருக்கும் மரியாதையினையும் புரிந்து கொள்வதற்கு இந்த சம்பவம் ஒன்றே போதுமானதாகும்.   

உண்மையில் தம்புள்ளை சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்குமானால் இப்போது தோற்றம் பெற்றிருக்கின்ற இந்த இனவாத சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்க முடியாது என நாம் உறுதியாகக் கூறலாம்.

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட சமூகத்திற்காக உயர்மட்டங்களில் பேசவேண்டிய கடமைப்பாட்டினை கொண்ட அத்தனை பேருமே மௌனம் காக்கின்ற நிலையில் நமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்தது. அதன் முதற் கட்டமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் ஏனையவர்களுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் இனவாத சூழ்நிலையின் பாரதூரத்தினையும் அதன் பின்னனிகளையும் தெளிவூட்டுகின்ற பிரசுரம் ஒன்றினை ‘அதிகரித்துச் செல்லும் இனவாதம் – எதிர்காலம் என்ன?’ என்ற தலைப்பில் PMGG இம்மாத ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது. இணைய ஊடகங்கள் பலவற்றிலும் அது  பிரசுரமாகியிருந்தன. இதனை பின்வரும் இணைய முகவரியில்  பார்வையிட முடியும்.  http://pmgg.org/?p=17769

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நடவடிக்கையாக காத்தான்குடி நகர சபையில், தீவிரமடைந்து செல்லும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் கண்டன பிரேரணையொன்றினை நிறைவேற்றுவதன் மூலமாக நமது மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் கடந்த  21.03.2013 ம் திகதி இடம்பெற்ற நகர சபையின் மாதாந்த அமர்வின் போது பின்வரும் அவசரப் பிரேரணையினை PMGG யின் நகர சபை உறுப்பினர்கள் நகர சபையின் அங்கீகாரத்திற்காக முன்வைத்தனர்.

சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புகளினால் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாத செயற்பாடுகளுக்கெதிராக காத்தான்குடி நகர சபையினால் கண்டனத் தீர்மானம்

இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற நாடு. பல்வகை மதங்களையும் கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்ட பல்வேறு இனங்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்கின்ற வரலாற்றை நம் நாடு கொண்டிருக்கின்றது. தாம் சார்ந்துள்ள மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார  தனித்துவங்களின் அடிப்படையில் இலங்கையின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையினை ஒவ்வொரு தனி நபரும் கொண்டிருக்கின்றான். நமது நாட்டில் அடிப்படை சட்ட ஏற்பாடாக நாம் அனைவரும்  அங்கீகரித்துள்ள 1978ம் ஆண்டின் யாப்பின் அத்தியாயம் iii உறுப்புரிமை 10 இன் ஷரத்துக்கள் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனினதும் கலாச்சார மதரீதியான  தனித்துவமான வாழ்வுரிமையினை உறுதிப்படுத்துகின்றது.

இந்த வாழ்வுரிமையினை சுதந்திரமாக அனுபவிப்பதனை உறுதிப் படுத்துவதற்கான சகல சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும்இ அதனை உறுதிப் படுத்துவதும் இலங்கை அரசின் அடிப்படைக் கடமையாகும். அது போலவே எந்தவொரு தனி நபரினதும் அல்லது இன குழுக்களினதும் இந்த உரிமையினை அச்சுறுத்தும் வகையில் அல்லது தலையீடு செய்யும் வகையில் எவரும் நடந்து கொள்வதானது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த காலங்களில் தம்மை சிங்கள பௌத்த அமைப்புக்களாக இனங்காட்டிக் கொள்ளும் சில குழுக்களின் இனவாத மற்றும் மொழிவாத தீவிர நடவடிக்கைகள் இன்று எல்லோரையும் கடும் கவலை கொள்ளச் செய்திருக்கின்றது. இந்த சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் இந்த நாட்டில் வாழும் பௌத்தர்கள் அல்லாத ஏனைய மத குழுக்கள் அத்தனையையும் இலக்குவைத்து அவர்களின் சட்ட ரீதியான மத கலாச்சார உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் வேகமாக செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில்இ இந்நாட்டில் வாழும் முஸ்லீம்களை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் பொது பல சேனாஇ சிங்கள ராவய மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களையும் இலக்குவைத்து அவர்களின் மத கலாச்சார உரிமைகளை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.

அனாமோதய துண்டுப் பிரசுரங்களாகவும் அச்சுறுத்தல் கடிதங்களாகவும் ஆரம்பத்தில் தொடக்கிவைக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிறிஸ்தவ இந்து மக்களுக்கு எதிராக வெளிப்படையான தீவிரவாத செயற்பாடுகளாகவும் மாற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு வருடத்திற்கு முன்னால் ஆங்காங்கே நடைபெற்ற இந்நடவடிக்கைகள் இன்று நாளாந்தஇ நாடளாவிய நடவடிக்கைகளாக மாறியிருக்கின்றன. இதற்கு சில முக்கிய உதாரணங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்

அனுராதபுரத்தில் பல நூற்றாண்டு காலமாக அமைந்திருந்த முஸ்லிம்களின் பாரம்பரிய இருப்பினை நிரூபிக்கின்ற இடமாக அமைந்திருந்த சியாரம் ஒன்று பட்டப்பகலில் இந்த சிங்கள பௌத்த தீவிர வாதிகளால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக முஸ்லீம்களால் தொழுகை நடாத்தப்பட்டு வந்த  பள்ளிவாயல் ஒன்று வெள்ளிக்கிழமை தினம் ஒன்றில் தாக்கப்பட்டு அன்றைய தினம் ஜும்ஆத் தொழுகையும் தடுத்து நிறுத்தப்பட்டது.

முஸ்லிம்களின் கலாச்சார மத உரிமைகளை மாத்திரமன்றி பொருளாதார உரிமைகளையும் பகிரங்கமாக அச்சுறுத்தி முஸ்லிம் சமுகத்தை இந்நாட்டிலிருந்து கட்டம் கட்டமாக ஓரம் கட்டி இல்லாமல் செய்கின்ற இனவாத தீவிரவாத பிரச்சாரங்கள் பேரணிகளாகவும்இ கூட்டங்களாகவும் இலங்கையில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் மஹரகமயிலும்இ கண்டியிலும் நடாத்தப்பட்ட இனவாத பேரணிகள் இதற்கு நல்ல உதாரணங்;களாகும். இந்த இனவாத தீவிரவாத நடவடிக்கைகள் அத்தனையுமே பகிரங்கமாக நடாத்தப்பட்டது மாத்திரமின்றி பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் பாhத்துக் கொண்டிருக்கும் போதே இடம் பெற்றுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இந்த இனவாத நடவடிக்கைகளுக்கு பொலிசாரும் ஏனையோரும் பாதுகாப்பு வழங்குகின்றனர் எனவும் இதனை எடுத்துக் கொள்ளவும் முடியும். இந்த இனவாத குழுக்களின் விஷமத்தனமான பொய்ப்  பிரச்சாரங்களை அப்பாவிச் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலை படிப்படியாக ஏற்பட்டு வருவதானது இன்னும் நிலமையினை மோசமாக்கியிருக்கின்றது. இக்குழுக்களினால் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் இப்போது ஆங்காங்கே முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் மத உரிமைகளுள் ஒன்றான பெண்களுக்குரிய பிரத்தியேக ஆடை ஒழுங்குக்கெதிரான வன்முறைகள் இப்போது அதிகரித்திருக்கின்றது. அபாயா மற்றும் பர்தா ஆடை அணிந்த பெண்கள் இம்சிக்கப்படுகின்றஇ தாக்கப்படுகின்ற சம்பவங்கள் பல அதிகரித்துள்ளன. அதுபோலவே முஸ்லிம்களின் ஹலால் உணவு ஏற்பாடுகளும் இந்த தீவிரவாத பிரச்சாரங்களால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகள் கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தவர்களுக்கு எதிராகவும் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் நாவல பிரதேசத்திலும் வீர கெட்டிய பிரதேசத்திலும் கிறிஸ்தவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் இதற்கு உதாரணங்களாக சொல்ல முடியும்.
 
நிலமை இவ்வாறு மோசமாகிக் கொண்டிருக்கும் போது அரசாங்கமோஇ சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகின்ற தனது பொறுப்பினை செய்யாமல் தொடர்ந்து மௌனம் காத்துவருவது மாத்திரமன்றி அரசாங்கத்தில் மிக முக்கிய பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும்இ கருத்துக்களும் இந்த இனவாத நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாகவும் ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இவ்வாறான பயங்கரமான நிலைமைகளை இந் நாட்டு முஸ்லிம்கள் எதிர் கொண்டிருக்கின்ற நிலைமையில் எமது முஸ்லிம் அரசியல் பிரதி நிதிகள் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கிறார்கள். பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இதனை அவர்கள் உரிய அழுத்தங்களுடன் பேசுவதாக தெரியவில்லை. முஸ்லிம் பள்ளிவாயல்கள் எதுவும் இந்நாட்டில் தாக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தெரிவித்த போது அதனை அங்கீகரிக்கும் வகையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மௌனமாக இருந்தமையானது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

சட்டத்தினையும் ஒழுங்கினையும் நிலைநாட்டி  சிங்கள இன வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற தனது அடிப்படைக் கடமையினை  அரசாங்கம்; செய்யத் தவறியிருக்கின்றது என்பதைக் கூட சுட்டிக் காட்டுகின்ற துணிச்சலுடன் முஸ்லிம் அரசியில் வாதிகள் எவரும் செயற்பட வில்லை.
எனவேஇ இந்த சூழ்நிலைகளின் பின்னனியில் இந்நாட்டின் எதிர்கால ஐக்கியத்தினையும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பாதுகாத்து நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அதே போன்று இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களினதும் சட்டரீதியான மத கலாசார உரிமைகளை பாதுகாக்கும் முகமாகவும் பின்வரும் பிரேரணைகளை நகர சபையின் அங்கீகாரத்திற்கு முன்வைக்கின்றோம்.

1)    சிங்கள பௌத்த தீவிரவாத குழுக்களின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான தீவிரவாத மற்றும் இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி அனைத்து மக்களும் தமது மத கலாசார உரிமைகளை அனுபவித்து வாழ்வதை உறுதி செய்ய வேண்டிய தனது அடிப்படை கடமையில் இருந்து அரசாங்கம் தவறியிருக்கிறது இது தொடர்பான ஆழ்ந்த வருத்தத்தையும் கண்டனத்தையும் எமது நகர சபை தெரிவிக்கிறது.
2)    இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கின்ற இந்த இனவாத அச்சுறுத்தல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதும் இந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான சகல முஸ்லிம் அரசியல் அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டியதும் சகல அரசியல் தலைவர்களினதும் கடமையாகும். குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அல்லது ஆதரவளிக்கின்ற முஸ்லிம் மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சர்கள் எல்லோருக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. இந்த கடமைகளை இவர்கள் எவருமே இதுவரை உரிய முக்கியத்துவத்துடன் நிறைவேற்ற தவறியிருக்கிறார்கள்.

இதனை நமது நகர சபை ஆழ்ந்த கவலையுடன் நோக்குவதுடன் இதற்கான வண்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. அத்தோடு அனைத்து முஸ்லிம்களும் அரசியல் வாதிகளும் ஒன்றுபட்டு இவ்விடயம் தொடர்பான பொது தீர்மானங்களை மேற்கொண்டு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலைமைகளை கட்டுப்படுத்தக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நமது நகர சபை வலியுறுத்துகிறது.
3)    இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லுறவிற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறிவரும் சகல இனவாத மதவாத  நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தி சட்டத்தினையும் ஒழுங்கினையும் நிலை நாட்டி சகல இன மக்களும் தமது மத கலாசார உரிமைகளை சுதந்திரமாக அனுபவித்து வாழ்கின்ற சூழ்நிலையினை உறுதிப்படுத்துகின்ற நமது அடிப்படைக் கடமையினை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டுமென இந்நகர சபை வலியுறுத்துகிறது.

மேலும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான வெறுப்புணர்வையும் தீவிரவாத கருத்துக்களையும் தூண்டுகின்ற மற்றும் பரப்புகின்ற சகல அமைப்பினர் தொடர்பிலும் அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இனவாத குழுக்களின் வெறுப்புணர்வு பிரச்சாரங்களை முறியடித்து இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் சகல அரச சார்பு ஊடகங்களுக்கு ஊடாகவும் உடனடியாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும எனவும் நமது நகர சபை வலியுறுத்துகிறது.  

(அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். ஸபீல் நளீமி மற்றும் எம்.எச்.எம். நசீர் – நகர சபை உறுப்பினர்கள்இ காத்தான்குடி)

இந்தப் பிரேரணையின் அவசியத்தினையும் முக்கியத்துவத்தினையும் நகர சபையின் ஏனைய உறுப்பினர்கள் பலரும் ஏற்றுக் கொண்ட போதிலும் அதனை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்வதற்கோ அல்லது அங்கீகாரமளிப்பதற்கோ தவிசாளர் இறுதிவரை இணங்கவில்லை. இது அன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டாக வேண்டும் என Pஆபுபு இன் பிரதிநிதிகள் தொடர்ந்து வாதாடிய போதும் அதனை நகர சபை தவிசாளர் வழமை போன்று தன்னிச்சையாக நிராகரித்துவிட்டார்.

இதுபோலவே தம்புள்ளை சம்பவத்தின் போதும் கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் பேசாமல் இருந்த வேளையில் காத்தான்குடி நகர சபையில் ஒரு கண்டனத் தீர்மானத்தினை PMGG கொண்டு வந்த போது அதனையும் கூட தவிசாளர் நிராகரித்துவிட்டிருந்தார் என்பது இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்ற அச்சமான சூழல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து இந்நாட்டில் சகல சமூகங்களும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் அச்சுறுத்தல்கள் ஏதுமின்றி வாழ்வதனை உறுதிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கே இருக்கிறது. இக்கடமையினை அரசாங்கம் செய்யத் தவறுகின்ற போது அதனைச் சுட்டிக் காட்டி உரிய அழுத்தங்களை கொடுத்து மேற்கொண்டு எவ்வாறாயினும் அதனை செய்விக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிகாரத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் இருக்கிறது.

அந்தவகையில் நமது மக்களின் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய அதற்காக குரல் கொடுக்க  வேண்டியஇ உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய மிகப் பொருத்தமான இடமாக பாராளுமன்றமும் அமைச்சரவையுமே இருக்கிறது. அதற்கடுத்தபடியாக மாகாண சபைகள் குறிப்பாக கிழக்கு மாகாண சபை இதனை மேற்கொள்ள முடியும். ஆனால் இதுவரை இந்த இடங்களிலெல்லாம் முஸ்லிம் அரசியல் வாதிகள் உரிய முறைப்படி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் எதனையும் பேசவோ அல்லது காத்திரமான எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. குறிப்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுகின்ற போது அதுபற்றி சுட்டிக் காட்ட வேண்டியஇ குரல் கொடுக்க வேண்டியஇ அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய விஷேடமான பொறுப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கே இருக்கிறது.

அந்தவகையில் இதுவரை எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் உருப்படியான துணிச்சலான காத்திரமான எதனையும் செய்யவில்லை என்று நமது மக்கள் கடுமையாக விரக்தியடைந்திருக்கிறார்கள். கிழக்கு மாகாண சபையில்  ஆளுந்தரப்பின்  ஆட்சியென்பது முஸ்லிம்களின் அரசியல் பலத்திலேயே முழுக்க முழுக்க தங்கியிருக்கின்ற நிலையில் அதனையும் கூட சமூகத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் இதுவரை சிந்தித்ததாகவும் தெரியவில்லை. அபிவிருத்தி விழாக்களையும் கட்சிக் கொண்டாட்டங்களையும் அடிக்கடி நடாத்துகின்ற நமது முஸ்லிம் கட்சிகள்இ முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்? என்று தமக்கிடையில் ஒரு சந்திப்பைக் கூட செய்யவில்லை என்பது நமது அரசியல் பிரதிநிதிகளின் கையாலாகாத்ததைத்தினை நன்கு நிரூபிக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள Pஆபுபு மக்கள் சார்பான அந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறது. அந்தவகையிலேயே மேலுள்ள பிரேரணையை PMGG சமர்பித்த போதிலும் அது நகர சபை தவிசாளரினால் நிராகரிக்கபட்டிருக்கிறது. குறித்த தவிசாளர் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறார் என்பதையும் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காக இதனை நிராகரித்து இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமான காரியமல்ல.

இந்த நிலையில் பின்வரும் கேள்விகள் தொடர்பில் நமது மக்கள் உலமாக்கள் பொது நிறுவனங்கள் தஃவா அமைப்புகள் ஆகிய எல்லோருமே சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

Ø    நமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நகர சபையில் அந்த மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிப்பிக்கின்ற பிரேரணையொன்றையாவது நிறைவேற்ற முடியாதா? அதனை தடுத்து நிறுத்துகின்ற எதேச்சதிகாரத்தை தவிசாளருக்கு யார் வழங்கியது ? நமது மக்களுக்காக பேச வேண்டிய இக்கட்டான தருனங்களில் தமது சுயநலன்களை காத்துக் கொள்ளும் வகையில் மௌனம் காக்கும் ஆளுமையற்றவர்களின் போக்குகளை இனிமேலும் அங்கீகரிக்க முடியுமா?

Ø    நகர சபை என்பது அபிவிருத்தி என்ற பெயரில் கொந்தராத்து வியாபாரம் செய்து பொதுப் பணத்தினை கொள்ளையடிப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதா? அல்லது மக்களின் உரிமைகளுக்காகவும் பேச வேண்டிய கடமையும் தேவையும் இருக்கிறதா?

Ø    ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கெதிராக உருவாகி வரும் இந்த அச்சுறுத்தல் சூழ்நிலைகளில் அது தொடர்பில் குரல் கொடுக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அங்கமாக காத்தான்குடியும் அதன் சட்டபூர்வ பிரதிநிதிகளான  நகர சபையும் இருக்கக் கூடாதா?

Ø    நமது மக்களின் உணர்வுகளை நகர சபையின் மூலமாக வெளிப்படுத்துகின்ற உரிமையினை ஒரு சில சுயநல அரசியல் வாதிகள் முடக்க முயற்சிக்கின்ற நிலையில் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது கண்டனங்களையும் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் சுயமாக சொல்வதற்கு வழியேதும் கிடையாதா?
Ø    நமது அரசியல் வாதிகள் சமூகத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் தொழிற்படும் போது நாம் யாரைக் குற்றம் சொல்வது ? துரோகம் இழைக்கும் அரசியல் வாதிகளையா? அல்லது அரசியலைப் பிழைப்பாக்கிக் கொண்டு  சமூகத்தின் ;நலன்களை தாரை வார்த்துக் கொடுக்கும் இது போன்றவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவு செய்யும் மக்களையா?
Ø    இந்த இக்கட்டான கால கட்டத்திலாவது நமது சமூகம் மேற்கொண்ட பிழையான அரசியல் தீர்மானங்கள் பற்றி ஒரு சுய விசாரணை வேண்டாமா?

தேர்தல் காலங்களின் போது நமது எதிர்கால அரசயில் தலைவிதியை நாமேஎழுதுகின்ற வாய்ப்பு நமது கைகளுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் சமூகத்தின் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை மீட்டிப்பார்ப்பது பொருத்தமானது.

அல்லாஹ்வின் பெயரால் மிகவும் அமாநிதமான வகையில் அளிக்கப்படவேண்டிய வாக்கினை எவ்வாறான அர்ப்பத்தனமான காரணங்களுக்காகவெல்லாம் நாம் வழங்கியிருக்கின்றோம் என மீட்டிப்பார்ப்பதும் அவசியமாகும். ‘எனக்குத் தெரிந்தவன், என்னோடு சிரித்துப் பழகுபவன், எனது வீட்டுத் திருமணத்தில் முன்வரிசையில் அமர்ந்து கலந்துகொண்டவன்இ எனது சகோதரியின் வீட்டுக்கு முன்னால் ஒரு சிறு துண்டு கொங்கிறீட் வீதி அமைத்துத் தந்தவன், எனது குறிச்சிக்கு பிரதிநிதி வேண்டும், எனது ஊருக்கு பிரதிநிதி வேண்டும்’ போன்ற பல்வேறு அற்பத்தனமான காரணங்களுக்காக எல்லாம் நமது மக்களிள் பெரும்பான்மையானவர்கள் தேர்தல்களின் போது வாக்களித்ததன் விளைவுகளையே நமது சமூகம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த வகையில் தான் சமூகத்திற்கு விசுவாசமான ஒரு அரசியல் சக்தியை கட்டியெழுப்புவோம் என்ற அறைகூவலை கடந்த காலங்களில் ஒவ்வொரு தருணங்களிலும் PMGG விடுத்து வந்திருக்கிறது. பெரும் பெரும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டு இருந்தோர்கள் எல்லாம் முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுக்காமல் இருப்பது போலவே வாய்மூடி கிடந்த வேளைகளில் எல்லாம் தனக்கிருக்கும் நகரசபை பிரதிநிதித்துவம் என்ற சிறிய அதிகாரத்தினை வைத்துக்கொண்டு மக்களுக்காக செய்யவேண்டியதை PMGG செய்திருக்கிறது. உதாரணங்களுக்காக சில விடயங்களை சுட்டிக்காட்டலாம்.

இலங்கை முழுக்கச் சிதறிவாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் உள்ளூராட்சி திருத்தச் சட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடியது.

அம்பாறை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியை மீட்டு எடுப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை கடந்த ஆண்டு தொடக்கி வைத்ததன் விளைவாக அதற்கான தீர்வு கிடைக்கும் அறிகுறி தற்போது தென்படத்தொடங்கியுள்ளது.

இந்நாட்டின் ஜனநாயக நல்லாட்சி விழுமியங்களை இல்லாமல் செய்யக்கூடிய பதினெட்டவாது திருத்த சட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்துடன் சகல முஸ்லிம் கட்சிகளுக்கும் முடியுமான அழுத்தங்களையும் கொடுத்தது.
 
13வது திருத்தச் சட்டத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கலினை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தது.
    
 அரசியல் வாதிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல்மோசடிகள்இ மற்றும் பொதுமக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நகரசபையிலும், அதற்கு வெளியிலும், குரல் கொடுத்து வந்திருக்கின்றது.
    

தம்புள்ளை சவம்பவத்தின் போதும், கீறிஸ் மனிதன் தாக்குதல் சம்பவத்தின் போதும் அவற்றிற்கு ஏதிராக கடுமையாக குரல் கொடுத்ததுடன் அரசாங்கத்தின் பிழையான நிலைப்பாடுகளை பகிரங்கமாகவும் சுட்டிக்காட்டியது.
 
    ஊழல் மோசடிகள் பற்றி ஜனாதிபதிக்கும் ஏனைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் சட்டரீதியான முறைப்பாடுகளை செய்ததன் விளைவாக இன்று விசாரணைகள் குற்றம் இளைத்தோருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்படியாக முஸ்லிம்களினதும், ஒட்டுமொத்த நாட்டினதும் நலன்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒரு சிறிய அரசியல் இயக்கமாக இருந்தபோதிலும் கூட PMGG சிலவேளை தனது சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டு வந்திருக்கின்றதுஇ பெரும் பெரும் அரசியல் அதிகாரங்களை கொண்டோர் எல்லாம் மக்களின் நலன்களை புறக்கணித்து விட்டு அதற்கு துரோகம் இழைக்கும் வகையில் செயற்படுகின்ற போது சிறிய அரசியல் அதிகாரத்தை கொண்ட PMGG இவ்வாறு நேர்மையுடன் தொழில்பட்டதன் காரணமாக அது மக்களுக்கு விசுவாசமான ஒரு அரசியல் அமைப்பு என்பதனை நிரூபித்துள்ளது.
 
அந்த வகையில் இப்போது இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இனவாத சூழ்நிலைகளின் மத்தியில் தமக்கு இருக்கின்ற அரசியல் அதிகாரத்தினையும், ஏனைய வாய்ப்புக்களையும், பயன்படுத்தி  அல்லாஹ்வின் உதவியுடன் முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும்,  பங்களிப்புக்களையும், மேற்கொள்ளுவதற்கு PMGG தயாராகவே இருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பும் பங்குபற்றுதலும் இருந்தால் மாத்திரமே அந்த நடவடிக்கைகள் வெற்றியழிக்கும்.

இறுதியாகஇ தம்மை சூழ்ந்து வரும் நிலைமைகளுக்கான காரணிகளை புரிந்து கொண்டு அரசியல் விழிப்புணர்வு பெற்று சமூக நலன் சார்ந்ததாக அரசியல் தீர்மானங்களை ஒவ்வொருவரும் மேற்கொள்ளவதன் மூலம் மாத்திரமே நமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீவு சாத்தியமாகும்.

‘யா அல்லாஹ் எம்மையும் எமது நாட்டையும் இனவாத சக்திகளின் கைகளில் இருந்து பாதுகாப்பாயாக’

‘எமது பாதங்களை சத்தியப் பாதையில் என்றும் நிலைத்திருக்கச் செய்வாயாக’

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG)
காத்தான்குடி

Published by

Leave a comment