சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்படும் இலவச தொலைத்தொடர்பு மென்பொருட்களும் அவற்றுக்கான காரணங்களும்…

BY: MJ
BY: MJ

-MJ

றியாத்: உலகப் புகழ்வாய்ந்த சமூக வலைத்தளங்களில் இன்று பிரதானமாகத் திகழும் ஸ்கைப் (Skype), வைபர் (Viber) மற்றும் வட்ஸ்அப் (Whatsapp)  ஆகிய இலவச தொடர்பாடல் மென்பொருட்களின் சேவைகளை சவூதி அரேபியா ஒரு வாரத்துக்குள் தடைசெய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அனைத்து இலவச மென்பொருட்களின் பின்னணியில் செயற்படும் நிறுவனங்களுக்கு சவூதி அரேபியா ஒருவாரம் சந்தர்ப்பம் அளித்திருக்கின்றது. இந்த ஒரு வாரத்துக்குள் மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தள மென்பொருட்களை சவூதியில் இருந்து அகற்றுவதற்கு அல்லது பொதுமக்களின் பாவனையில் இருந்து முற்றாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது.

‘ரியாத் பியுரோ’ எனும் வலைத்தளத்தின் இயக்குனரான அகமட் ஒம்ரான் கூறுகையில் ‘ சவூதி அரேபியாவின் டெலிகொம் நிறுவனத்தின் உந்துதல் காரணமாகவே இத்தகைய தடையை அரசாங்கம் அமுல்படுத்த முன்வந்திருக்கின்றது. இவ்வாறான இலவச மென்பொருட் சேவைகளால் குறித்த நிறுவனத்திற்கு பாதிய இழப்பீடுகள் ஏற்பட்டிருக்கின்றது. எனினும் மக்களின் அதிருப்தியை அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்’ எனவும் கவலை தெரிவித்திருந்தார்’.

பெயர் குறிப்பிட விரும்பாத சவூதி அரேபியவாசி ஒருவர் கூறுகையில், ‘ சவூதிப் பெண்கள் அவர்களது உறவினர்களுடன் மேற்படி சமூக வலைத்தளங்கள் ஊடாக உரையாடும் போது தங்களது ஹிஜாபை அணிவதில்லை. இதன் காரணமாக ஒருபெண்ணை  பிற ஆண்கள் பகிர்ந்து இரசிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இஸ்லாத்துக்கு விரோதமான செயற்பாடுகளும் ஆபாசங்களும் தாராளமாக பகிர்ந்தளிக்கப்பட சந்தர்ப்பம் அதிகமாகவும் இருக்கின்றன. எனவே பெயரளவில் டெலிகொம் நிறுவனத்தை மேற்கோள் காட்டினாலும் உண்மை இதுவே’ என்பதாக கூறினார்.

இதற்கிடையில் சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இச்செய்தியைப் பிரசுரித்த அச்சு ஊடகங்களுக்கும், இலத்திரணியல் ஊடகங்களுக்கும் குறுந்தகவல், மின்னஞ்சல் ஊடாக மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களைத் தடைசெய்யவேண்டாம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சவூதி அரேபியாவின் 2011 சனத்தொகைக் கணிப்பீட்டின்படி 25,731,776 சவூதி அரேபிய மக்கள் தொகையில் 5,570,076 வெளிநாட்டினர்கள் வாழ்கின்றனர். இவர்களுள் 1.3 மில்லியன் இந்தியர்கள், 900,000 பாகிஸ்தான், எகிப்து800,000, பங்களாதேஸ் 500,000, பிலிப்பைன்ஸ் 500,000, ஜோர்டான் மற்றும் பலஸ்தீன் 260,000, இந்தோனேஸியா 250,000,  இலங்கை 350,000, சூடான் 250,000, சிரியா மற்றும் துருக்கி தலா 100,000 மற்றும் மேற்கத்தேயர் 100,000 என்ற அடிப்படையில் வெளிநாட்டினர்கள் சவூதியில் தொழில் நிமித்தம் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வெளிநாட்டு சனத்தொகையின் அதிகரிப்பின் காரணமாக மொத்த சனத்தொகையில் அஸல் சவூதி அரேபியர்களின் வீதம் ஆக 31% என்பது வியப்புக்குரியது!

சவூதி அரேபியா மேற்படி சமூக வலைத்தள இலவச மென்பொருட்களைத் தடை செய்யுமாயின் நிச்சயமாக அதிகமாக பாதிக்கப்படுவது வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது வேதனைக்குரியது.

சவூதி அரேபியா 2010 ல் பிளக் பெரி மற்றும் அவற்றின் ஊடான குறுந்தகவல்களை தடைசெய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment