சென்னையில் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது: முரளி

muraliபெங்களுர்: ஐ.பி.எல். போட்டிகளில் சென்னையில் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று எழுந்த குரலால் ஐ.பி.எல் நிர்வாகமும் சென்னை போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று அறிவித்துவிட்டது.

இதுபற்றி றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளரும் இந்திய வம்சாவளி தமிழருமான முத்தையா முரளிதரன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவின் ஒருபகுதியில் விளையாட அனுமதிக்காதது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சோகமான நாள். இது அரசின் முடிவு. அவர்களால் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாமல் போனால் சிக்கலாகிவிடும். இந்த விவகாரம் குறித்து றோயல் சலஞ்சர்ஸ் அணியினருடன் பேசினேன். அவர்கள் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர். சென்ன தவிர்த்த இதர போட்டிகளில் விளையாடுவேன்’.

‘இலங்கை அணிக்காக 20 ஆண்டுகாலம் விளையாடி வருகிறேன். ஒரு தமிழன் என்பதற்காக எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்தது இல்லை. இலங்கை கிரிக்கெட் வாரியம் எனக்கு முழு ஆதரவை அளிக்கிறது. எனக்கு நிறைய சிக்கல்கள் வந்த போதும் கூட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனக்கு முழு ஆதரவு அளித்தது. இலங்கையில் முன்புதான் தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் யுத்தம் நடைபெற்றது. இப்பொழுது பொதுமக்கள் அமைதியாக வாழ்கின்றனர். இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கை சென்று அங்கு கடந்த காலத்தை மறந்துவிட்டு தமிழர்கள் எப்படி வாழ்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். இன்னொரு யுத்த சூழலை நாங்கள் விரும்பவில்லை’.

‘அவர்கள் அனுமதித்தால் நிச்சயமாக நான் சென்னையில் விளையாடுவேன். சென்னை எனது 2-வது வீடாகும். என் மனைவி மதிமலர் கூட சென்னையைச் சேர்ந்தவர்தான். எனக்கு இது உணர்வுப்பூர்வமான பிரச்ச்சனை. இது அரசியலாகக் கூடாது. நாங்கள் ரசிகர்களை மகிழ்விக்கவே கிரிக்கெட் விளையாடுகிறோம்’ என்றார் அவர்.

ஐ.பி.எல். தொடர் அனைத்திலும் முத்தையா முரளீதரன் பங்கேற்றிருக்கிறார். 2 ஆண்டுகள் (2008-10) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பின்னர் கொச்சி டஸ்கர் கேரளா அணியிலும் இடம் பிடித்திருந்தார். றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த ஆண்டு விளையாடினார்.

(OIT)

Published by

Leave a comment