டெல்லி: தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இலங்கையில் தமிழின இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ. க்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 256-ன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டும். ஜெயலலிதாவின் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் ப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
(OIT)
Leave a comment