இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ‘பொது பல சேனா’ அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் ஹர்த்தால் ஏற்பாடுகள் பற்றி, சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களாலும், அரசியல் கட்சிகளாலும் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் காத்தான்குடியில் ஹர்த்தாலை அனுஸ்டிக்காமல் வழமையான நடடிவக்கைகளை இன்று முன்னெடுக்குமாறு பொதுமக்களை காத்தான்குடியின் முக்கிய இரு அமைப்புக்களான ஜம்மியத்துல் உலமாவும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் ஒருமித்து அறிவித்திருந்தன.
இதன் பின்னர் மக்களுக்கிடையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவியதையும், இவ் அமைப்புக்கள் மீது வெறுப்பு வார்த்தைப் பிரயோகத்தை சிலர் மேற்கொண்டதையும், பலர் அதிருப்தியடைந்ததையும் அவதானிக்க முடிந்தது.
எனினும் இலங்கையில் பாரியளவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட இருக்கும் இன்றைய விசேட ஹர்த்தால் வெற்றியளிப்பின் உலக நாடுகளை மீண்டும் இலங்கையின் பக்கம் திரும்பச் செய்யும் மற்றுமொரு சிறுபான்மையினத்தின் வெற்றியாக இன்றைய ஹர்த்தால் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தும் இலங்கையில் அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் இந்த ஹர்த்தாலை எப்படியாவது தடுத்து நிறுத்த கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இன்றைய ஹர்த்தால் வெற்றி பெற்றால் இந்நாட்டு முஸ்லிம்களுக்கான உரிமைகளை எதிர்காலத்தில் தக்கவைத்துக் கொள்வதற்கு ஓர் வழியாக அமைவது மாத்திரமன்றி, உலகின் பார்வையை இலங்கையின் சிறுபான்மையினர் மீது தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வழி சமைக்கும்.
மாறாக இன்றைய ஹர்த்தால் அந்தந்த ஊரின் அரசியல்வாதிகளால் தடுத்துநிறுத்தப்பட்டு, தோல்வியடையுமானின் அரசாங்கத்துக்கும் பெரும்பான்மைக்கும் கிடைத்த பாரிய வெற்றியாக அமையும் என்பதும் தெளிவான உண்மை. வேறு எந்த எந்த மாற்றுக் கருத்துக்களையும் முன்வைக்க முடியாது என்பதும் வெளிப்படை!

Leave a comment