எமக்கெதிராக பொய் பிரச்சாரங்களை செய்யும் கும்பல்களை நம்ப வேண்டாம். இன மதபேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படுவோம் – அம்பாறையில் ஜனாதிபதி

Yourkattankudy
Yourkattankudy

அம்பாறையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான்

நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் தவறான பிரசாரம் செய்ய சில மோசமான கும்பல்கள் உள்ளனர். பொய் பிரச்சாரங்களை ஒருநாளும் நம்பவேண்டாம். இனபேதம் ,மதபேதம், மாகாண பேதம், எதுவும் இல்லாமால் நாம் ஒன்றாக சமாதானமாக ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். அது மாத்திரமல்லாமல் சம உரிமையோடும் வாழ வேண்டும். ஏனெனில் சமாதானம், சகவாழ்வு அபிவிருத்தி அதுதான் எமக்கு முக்கியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2013 தேசத்திற்கு மகுடம் ‘தெயட கிருள’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று சனிக்கிழமை மாலை 05.30மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது கிழக்கு மக்கள் கடுமையான பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்தனர்.குறிப்பாக முஸ்லிம் மக்கள் பல்வேரு கோணங்களில் கடுமையாக புலிப்பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.


1990ம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயலில் முஸ்லிம் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்ரு குவித்தார்கள். அது மாத்திரமல்ல மேலும் பல பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அந்தக் கால கட்டத்தில் நீங்கள் பட்ட கஷ்டம் துன்பம் எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் இன்று யுத்தம் இருந்த போது இருந்த இருண்ட சூழ்நிலை இப்போது இல்லை.

இன்று எல்லோரும் பயம் சந்தேகம் இல்லாமல் வாழமுடியும். அபிவிருத்தி வேலைகள் மிகவும் வேகமாக இடம் பெறுகிறது. கிழக்கில் நவோதயம் உங்கள் புதிய உதயம் உங்கள் எதிர்கால புதிய உதயம் உங்கள் பிள்ளைகளின் புதிய உதயம் இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் கிழக்கு மாகாணம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இன்னும் இன்னும் முன்னேரவுள்ளது.

இதையெல்லாம் நீங்கள் அனுபவிக்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும். நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் தவறான பிரசாரம் செய்ய சிலர் உள்ளார்கள் எனவே பொய் பிரசாரங்களை ஒருநாளும் நம்பவேண்டாம்.

இனபேதம், மதபேதம் ,மாகாண பேதம் எதுவும் இல்லாமால் நாம் ஒன்றாக வாழ வேண்டும். சமாதானமாக வாழ வேண்டும். ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். சம உரிமையோடு வாழ வேண்டும். சமாதானம் சகவாழ்வு அபிவிருத்தி அதுதான் முக்கியம். அதுதான் அவசியம். அதுதான் எமது தேவை. உங்கள் எல்லோருக்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் நிச்சயம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்தேசிய அபிவிருத்திக் கண்காட்சி 29 ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment