இலங்கை விவகாரம்- தமிழக எம்.பிக்கள் ஆவேசம்- லோக்சபா ஒத்தி வைப்பு

22-lok-sabha5342-300[1]ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையைக் கண்டித்து தமிழக எம்.பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை லோக்சபா கூடியதும் திமுக, அதிமுக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அமெரிக்காவின் தீர்மானத்தை வலுவானதாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதேபோல் தனித் தெலுங்கானா மாநிலம் கோரி ஆந்திர மாநில எம்.பிக்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபையை பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடிய போதும் அமளி தொடரவே நாள் முழுவதும் சபையை ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். அதிமுகவினர், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்துடனான பதாகைகளை ஏந்திய படி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் சபை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

(OIT)

Published by

Leave a comment