ஜனாதிபதிக்கு அதிகம் அத்தர் பூசுகின்றனர்: முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

மத்தல விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமயத்தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமைக்கு மதவாதம் மட்டுமல்ல சமயத்தலைவர்களின் அதிகப்படியான காக்காய் பிடிக்கும் குனமுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 மத்தள விமான நிலைய திறப்பு விழாவில் பௌத்த மதம் தவிர ஏனைய சமய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக வந்த செய்தியில் ஹசன் மௌலானா, ஜனாதிபதியின் இஸ்லாமிய சமய விவகார ஆலோசகர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உண்மைத்தன்மையை அறிந்திருக்கும் நாம் அதனை கூறாமல் விடுவது தவறான செய்தியை நாமும் ஆதரிப்பதாக ஆகி விடும் என்பதற்காக இதனை சொல்ல வேண்டியுள்ளது.  
 
 மேற்படி விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமயத்தலைவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என ஹசன் மௌலானா பின்னர் மறுத்திருந்த போதும் அச்செய்தியில் உண்மை உள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனாலும் ஹசன் மௌலானா நல்ல நண்பர். அவர்  ஒரு மௌலவியாக இல்லாத போதும் ஜனாதிபதியின் ‘முஸ்லிம் விவகார இணை இணைப்பாளராக’ நியமிக்கப்பட்டுள்ளாரே தவிர சமய விவகார ஆலோசகர் அல்ல. இதே பதவியிலேயே மறைந்த நியாஸ் மௌலவியும் கடமை புரிந்தார். அவரையும் ஆலாசகர் என்றே ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டன.
 
2005ம் ஆண்டு எமது உலமா கட்சியினதும் ஆதரவுடன் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல் சமயத்தலைவர்களையும் தனது நிகழ்வுகளில் இடம்பெற வைக்கும் நல்ல தன்மையை கடைப்பிடித்தார். அதன் போது நானே அதில் முதலாவதாக கலந்து கொள்ளக்கூடியவனாக இருந்தேன். அதன் பின் 2007ம் ஆண்டு முதல் சகோதரர் நியாஸ் மௌலவி ஜனாதிபதிக்கு ஆதரவாக மாறியதிலிருந்து அவருக்கும் சிறந்த இடம் வழங்கப்பட்டது. எமக்கொரு பதவி வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கேட்காததன் காரணமாக நியாஸ் மௌலவிக்கு ஜனாதிபதியின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவரும்  சில வேளைகளில் ஓவராக இருந்தாலும்- மிக அழகிய முறையில் தனது பதவிக்குரிய கௌரவத்தை காப்பாற்றினார். அவரோடு இணைந்து நிகழ்வுகளில் பங்கேற்றக்கிடைத்தது சிறப்பாக இருந்ததோடு அவர் இல்லாத குறை இன்று பெரிதாகவே தெரிகிறது.
 
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்பு ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகள் வேறு பட தொடங்கின. ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு புதிதாக ஒட்டியவர்களின் ஆக்கிரமிப்பும், பௌத்த மதத்துக்கு மாத்திரம் அதிக இடம் கொடுக்கும் செயற்பாடுகளையும் காண முடிந்தது.  நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் கலந்து கொள்வதையே விரும்பினேன். அதனால் இது பற்றி; அலட்டிக்கொள்ளவில்லை.
 
இப்போது மத்தள விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமய தலைவர்கள் ஒதுக்கப்பட்டமை இவற்றின் தொடரான சங்கதியாகும். ஆனாலும் இங்கு ஒரு விடயத்தை நான் அவசியம் தொட்டுக்காட்டத்தான் வேண்டும். ஜனாதிபதி கலந்து கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பௌத்த தேரர்கள் மிக அமைதியாக தமது சமய அனுஷ்டானங்களை மட்டும் செய்வார்கள். அத்துடன் போய்விடுவார்கள். ஆனால் ஏனைய சமயத்தலைவர்களோ (கிறிஸ்தவ இணைப்பாளர் சரத் ஹெட்டி ஆராச்சி தவிர)  மற்றவர்கள் அந்த இடத்திலும் பொன்னாடை, அத்தர், தேவைக்கதிக சத்தம், ஊடகங்களுக்கு காட்ட வேண்டுமென்றே அலட்டிக்கொள்வது போன்ற விடயங்கள் பலராலும் மோசமாக குசு குசுக்கப்பட்டதை அறிவேன்.  
 
தம்புள்ள சம்பவத்துடன் நாம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்கத்திலிருந்து ஓரமாகிவிட்டாலும் இனவாதிகள் கை ஓங்கி ஏனைய சமயங்கள் ஒதுககப்படும் நிலை வருமென நாம் எதிர் பார்த்த ஒன்றுதான். அந்த வகையில் மத்தளவில் ஏனைய சமய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தாலும் சமயத்தலைவர்களுக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்.

Published by

Leave a comment