தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி நாளை (23) ஆரம்பமாக உள்ளதோடு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
தேசத்துக்கு மகுடம் மாபெரும் கண்காட்சியை ஒட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.
அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 120 ஏக்கர் நிலப்பரப் பில் இடம்பெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கண்காட்சியை முன்னிட்டு இம்முறை 60,000 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் சிவில் உடையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் 115 அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
அறிவுறுத்தல்
இதேவேளை கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கண்காட்சிக்கு வரும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வீதி ஒழுங்குகளை பின்பற்றி வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் பிரிவில் வைத்து வாகனம் விபத்துக்குள்ளானால் 063-2222321 எனும் இலக்கத்திற்கோ அம்பாறை வலய போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டாரவின் 072 8366656 எனும் இலக்கத்திற்கோ அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயலத்தின் 077 2651728 இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை கண்காட்சிக்கு அழைத்து வருவதானால் அவர்களின் சட்டைப்பையில் தொலைபேசி இலக்கமோ வீட்டு முகவரியையோ எழுதிய காகிதமொன்றை வைக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
யாராவது தவறவிடப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் தகவல் பிரிவிற்கு சென்று உரிய ஆலோசனை பெறுமாறும் கோரப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படை மற்றும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசத்துக்கு மகுடம்
2013 ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி கிழக்கினரின் வியத்தகு விந்தை என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் கண்காட்சியை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள தாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கண்காட்சி நடைபெறவுள்ள 120 ஏக்கர் நிலப் பரப்பில் சுமார் 200 ற்கும் அதிகமான காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை உட்பட அதனை அண்மித்த பிரதேசங்கள் எங்கும் அலங்க ரிக்கப்பட்டுள்ளதுடன் மும்மொழிகளிலும் வாசகங்கள், விபரங்கள், பொறிக்கப்பட்ட பதாதைகள், பனர்கள், கட்அவுட்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
தேசத்திற்கு மகுடம் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள இலங்கை லொத்தர் சபையின் 20 ரூபா பெறுமதியான லொத்தர் சீட்டை பெற்றவர்கள் நுழைவுச் சீட்டாக பயன்படுத்தி கண்காட்சியைப் பார்வையிட வருகை தரமுடியும் என்றும் பாடசாலை சீருடையில் வருகை தரும் மாணவ, மாணவிகள் முற்றிலும் இலவசமாக கண்டுகளிக்க முடியும் என்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 60 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்

Leave a comment