கொழும்பு- சென்னை விமான சேவைகள் அரைவாசியாக குறைந்தன

srilankanஇந்தியாவில் தமிழகத்தில் நடந்துவருகின்ற போராட்டங்கள் மற்றும் சில சம்பவங்களின் பின்னணியில், தமிழகத்துக்கான விமான சேவைகளை இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரைவாசியாகக் குறைத்துக்கொண்டுள்ளது.

இலங்கைக்கும் சென்னைக்கும் இடையில் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவுக்கு வரவேண்டியேற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி டி. ஜெயசீலன்  தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 4 விமான சேவைகள் என்ற நிலையிலிருந்து 2 சேவைகள் என்ற அளவுக்கு தமது சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நிலைமைகளை தொடர்ந்தும் அவதானித்துவருவதாகவும் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்ப அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் ஜெயசீலன் தெரிவித்தார்.

பிக்குகள் போராட்டம்

இதேவேளை, தமிழகத்தில் அண்மையில் பௌத்த பிக்குகள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பியூசிஎல் என்ற இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்பு கண்டித்திருக்கிறது.

இதற்கிடையே, புத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக இலங்கையில் பிக்குகள் இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘ராவண பலய’ என்ற பெயரில், அதாவது இராவணனின் சக்தி என்ற அமைப்பு கொழும்பு காலி முகத்திடலிலில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.

தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு இந்திய துணைத்தூதுவர் கவலை தெரிவித்துள்ளதாகவும் இனிமேல் அப்படியான சம்பவங்கள் நடக்காது என்று உறுதியளித்துள்ளதாகவும் ராவண பலய பிக்குகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் இட்டகடே சத்ததிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

-BBC/Tamil

Published by

Leave a comment