அரசியல் வாதிகளின் ஒற்றுமையை விட சமூக ஒற்றுமையே தற்போது முக்கியமானது –நசீர்

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உள்நாட்டு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய சக்திகள் இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன.

 முஸ்லிம் பெண்கள் அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்கின்ற கலாச்சாரத்தை அடியோடு அழித்தொழிக்க வேண்டும். அந்த கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.

 இந்த விடயத்தை இல்லாதொழிக்க நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்தமான சக்திகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எமது சிந்தனைகள், வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எமது நாட்டிலேயே எமது பெண்களுக்கு வேலைத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றால் சகோதரி றிஸானா நபீக் மாத்திரமல்ல, இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து முஸ்லிம் பெண்மணிகளும் இந்த நாட்டிலே வேலை செய்து தங்களுடைய குடும்பத்துடன் வாழ்வதற்கு விரும்புவார்களே தவிர அரபு நாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் அல் மஸூறா இணையத்தள செய்தி சேவையின் மூன்றாவது பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கொண்டவாறு கூறினார். மஸூறா செய்தி சேவையைச் சேர்ந்த யூ.எல்.முகைதீன் பாவா தலைமையில் பிரதம ஆசிரியர் எச்.எம்.ஏ.மஜீதீன் வழிகாட்டலில் நடைபெற்ற வைபவத்தில் அதிதிகளாக ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர். எம்.சுபைர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மையில் சவுதி அரேபியாவில் மரணதண்டனைக்குள்ளான சகோதரி றிஸானா நபீக்கின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் ஊடகம் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் அது முழு உலகத்திலுமே நடாத்திக் கொண்டிருக்கின்ற நாடகம் மாத்திரமல்ல அந்த ஊடகம் உலகத்திலே நடாத்திக் கொண்டிருக்கின்ற தாக்கத்தினை நாம் அறிவோம் ஊடகம் என்று சொல்லுகின்ற போது எதையும் ஆக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று அந்த அல்லாஹ்வை மறந்து கூறாமல் இன்று பலவிதமான தாக்கங்களை சமூகத்துக்குள் உருவாக்குகின்ற ஊடகமாக இருக்கின்றது என்ற உண்மையை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் இன்று உலகத்திலே நடக்கின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பதும் ஊடகம் தான் என்ற உண்மையை ஊடகவியலாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 ஊடகவியலாளர்கள் இன்று அவர்களது கடமையை சரியான முறையில் செய்வார்களேயானால் இந்த நாட்டில் என்னுடைய பார்வையிலே, உலகத்திலே கூட, பிரச்சினைகள் குறைந்த, சமூகமாக இந்த சமூகம், இந்த நாடு மாறும், மாற முடியும் என்ற உண்மையை ஊடகவியலாளர்கள் விளங்கியாக வேண்டும். அவ்வாறான ஒரு ஊடகவியலாளர் அமைப்புகள், நிகழ்வில் கலந்து கொண்டு பேசுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

 இந்த ஊடக நிறுவனம் சமூகத்துக்கு, நீதியான முறையில் தனது பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டு என்னாலான சகல பங்களிப்புகளையும் செய்ய தயாராக உள்ளேன் என்று கூறுவதோடு நீங்கள் சமூகத்துக்கு சேவை செய்கின்ற ஒரு அமைப்பாக திகழ்வதோடு, சமூகத்தில் சரியான புரட்சிகளை ஏற்படுத்துகின்ற ஒரு அமைப்பாகவும் நீங்கள் செயற்பட வேண்டும். இது உங்களால் முடியும்.

இங்கு தலைமையுரையாற்றிய தலைவர் கூறிய போது சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி றிஸானா நபீக்குடைய பிரச்சினையைப் பற்றி பேசக் கூடாது எனக் கூறினார். இந்த மேடையிலே அவரது தாயும் தகப்பனும் குடும்பத்தினரும் உள்ளனர். நாம் றிஸானா நபீக்குடைய பிரச்சினையைப் பற்றி பேசுகின்றோமோ, அல்லது பேசவில்லையோ என்பது ஒரு விடயம் அல்ல றிஸானா என்ற ஒரு சகோதரி இன்று எங்களை விட்டு மறைந்துவிட்டாள். ஒரு உயிர் எந்த இடத்தில், எந்த நேரத்தில் முடியும் என அல்லாஹ் தீர்மானித்திருந்தால் அது அந்த (அஜல்) உயிர் முடியும். இதற்காகத் தான் நாங்கள் பிறந்திருக்கின்றோம். இன்று நான் இந்த இடத்திலிருந்து வீடு போய் சேர்வேன் என்று எங்களுடைய உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. ஆனால் சகோதரி றிஸானாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அவர்களுக்க அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த நிகழ்விலிருந்து ஒரு பாடத்தை நாம் நம்முடைய சமுதாயம் படித்தாக வேண்டும். (நான் அடிக்கடி கூறி வருகின்ற ஒரு விடயம், இந்த நாட்டிலே எங்களுடைய முஸ்லிம் பெண்மணிகள் அறபு நாடுகளுக்கு மட்டுமல்ல வெளிறாடுகளுக்குச் சென்று வேலை செய்கின்ற கலாச்சாரத்தை அடியோடு அழித்தொழிக்க வேண்டும். அந்தக் கலாச்சாரம் ஒழிய வேண்டும். இந்த விடயத்தை இல்லாதொழிக்க நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான சக்திகள் எல்லோரும் சேர்ந்து இதனை ஒழிப்பதற்காக, எமது சிந்தனைகள் வேலைத்திட்டங்கள் அமைய வேண்டும், இந்த நாட்டிலே வாழும் எமது பெண்மணிகளுக்கு வேலைத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றால் சகோதரி றிஸானா அல்ல, இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து பெண்மணிகளும், இங்கு வேலை செய்து தன்னுடைய குடும்பத்துடன் அவர்கள் வாழ்வதற்கு விரும்புபவர்களே தவிர அறபு நாடு சென்று வேலை செய்ய விரும்பமாட்டார்கள்.

 நான் சுமார் 15 வருடங்களாக அரபு நாட்டிலே வாழ்ந்தவன் என்ற காரணத்தினால் எனக்குத் தெரியும் இங்கிருந்து செல்லும் பெண்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். எத்தனையோ கண்களிலிருந்து வடிகின்ற கண்ணீர்களும், அவர்களுடைய இதயங்கள் குமுறுகின்ற அந்தக் குமுறல்களையும் கேட்டவன் நான் என்ற அடிப்படையிலே இதனை நாங்கள் அழித்தொழிப்பதற்கு, இல்லாதொழிப்பதற்கு திட்டமிட்டு செயற்பட வேண்டும். இதை ஒரு தனி நபரால் செய்ய முடியாது. ஒட்டு மொத்த சமூகமும் அதனுடைய தாக்கத்தை விளங்கிக் அவர்களுக்கு எவ்வாறு அந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்ற சிந்தனையிலே அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டும். அதற்காக ஒட்டு மொத்தமாக சமூகம் ஒன்று பட வேண்டும்.

 இன்று சமூக ஒற்றுமை என்பது ஒரு பிரதான விடயமாக இருக்கின்றது. வெறுமனே அரசியல் தலைவர்கள் மாத்திரம் ஒற்றுமைப்படுவது என்பதல்ல, இன்று இந்த ஏறாவூரை எடுத்துக் கொண்டால் கூட நாங்கள் எத்தனையோ பிரிவுகளாக பிரிந்திருக்கின்றோம். என்ற உண்மையை நாங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். நாங்கள் எங்களுக்குள் இருக்கின்ற பலவீனத்தை, இயலாமையை , எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை, அல்லது வேறுபாடுகளை மறக்க முடியாதவர்களாக எத்தனை காலம் நாங்கள் வாழ முடியும் என்ற கேள்வியை நான் உங்களைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன். ஒன்றை மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டும். இறப்பதும் கூட மனிதனுடைய வாழ்க்கையிலே உறுதியாக ஒரு விடயமல்ல ஆனால் மரணிப்பது என்பது நாங்கள் அந்த அல்லாவை சந்திப்போம் என்ற உண்மையை நாங்கள் ஒவ்வொருவரும் விளங்கியவர்களாக வேண்டும். அது மாத்திரம் தான் எங்களுடைய வாழ்க்கையிலே உறுதியான ஒரு விடயம். அந்த மரணத்தை நோக்கி, அந்த கபுறை நோக்கி ஜன்னதுல் பிர்தௌஸை முன்னோக்கி எங்களுடைய வாழ்க்கையை தொடருவோமானால் நிச்சயமாக எமது சமூகத்தை யாராலும் அழிக்க முடியாது. எங்களுடைய ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது.

ஆகவே அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை நாங்கள் உணர்ந்து இந்த ஏறாவூர் மக்களாகிய நாங்கள் ஒரு ஒட்டு மொத்தமான சமூகமாக மாறுவதற்கு எங்களாலான பங்களிப்பை நாங்கள் செய்ய தயாராக வேண்டும். அந்த ஒற்றுமை இந்த மண்ணிலிருந்து கிளம்பட்டும். அரசியல்வாதிகள் மாத்திரம் ஒற்றுமைப்பட வேண்டும். என்று தவறாக விளங்கி விட வேண்டாம். அரசியல்வாதிகள் என்று சொன்னால் இங்கு நாங்கள் நாலு பேர் தான் இருக்கின்றோம். இந்த நான்கு பேரும் ஒன்று கூடி இன்று கூட ஒற்றுமைப்பட முடியுமாகவிருந்தால் நீங்களும் ஒற்றுமைப்பட்டு நாங்களும் ஒற்றுமைப்பட வேண்டும். என்ற உன்னதமான கருத்தை நான் இங்கு முன் வைக்கின்றேன்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் விளங்கியாக வேண்டும். எங்களை பிரித்து வேடிக்கை பார்க்க பல பேர் இன்று களத்தில் இறங்கியுள்ளனர். அந்த மனப்பாங்கிலிருந்து நீங்களும் மாற வேண்டும். நாங்கள் பிரிந்திருக்கின்றோம். பிரிந்து செயற்படுகிறோம். என்ற வார்த்தையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். என்னை தப்பாக எண்ண வேண்டாம். என்னை தப்பாக எண்ண வேண்டாம். நீங்கள் நினைத்தால் பலவந்தமாக எங்களை ஒற்றுமைப்படுத்த முடியும் உங்களால் முடியும். நீங்கள் நினைத்தாலும் நாங்கள் பிரிந்து செல்ல முடியாது. ஆகவே சமூகத்தினுடைய பொறுப்பை வெறுமனே ஒரு தலைவனுடைய தலையில் சுமத்துகின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்க முடியாது.

 சமூகத்தினுடைய பின்னடைவாக இருந்தாலும் சரி, நன்மை தீமையாக இருந்தாலும் சரி, அத்தனைக்கும் பொறுப்பு அத்தனை ஜீவன்கள் என்ற உண்மையை இங்கிருக்கின்ற ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டாக வேண்டும். அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றாக வேண்டும். (இன்று எங்களுக்கு வந்துள்ள சமகால அரசியல் பிரச்சனை எங்களுக்கின்ற அடிப்படைப் பிரச்சனை என்ற ஒற்றுமையின்மை என்ற பிரச்சனை என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் விளங்கியாக வேண்டும். எங்களுக்குள் பிரிந்திருந்து, எங்களது சமூகத்துக்குள்ளிருந்து காட்டிக் கொடுத்து கொண்டிருக்கின்ற, சமூகத்துக்குள் பிரச்சனையை ஏற்படுத்துகின்ற பல இயக்கங்கள் இயங்குகின்ற உண்மையை நீங்கள் விளங்கியாக வேண்டும். அவ்வாறான ஒரு நிலையிலிருந்து நமது சமூகம் தவிர்க்கப்பட வேண்டும். எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கின்றவர்களாக நாங்கள் மாற வேண்டும்.

 ஆகவே இன்று பொதுபல சேனா என்ற ஒரு அமைப்பு இன்று ஒரு பெரிய பூதாகரமாக இந்த நாட்டிலே வெடித்திருக்கின்றது என்று சொன்னால், நாங்கள் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமைப்படுவோமேயாகவிருந்தால் என்னுடைய பார்வையிலே முஸ்லிம்களைப் பலப்படுத்துகின்ற சக்தியாக பொதுபல சேனா இருக்கின்றதே தவிர, அது எம்மை ஒற்றுமைப்படுத்துவதற்காக வந்திருக்கின்ற சக்தியாக வந்திருக்கின்றது என்பதை என்னுடைய பார்வையிலே நான் பார்க்கின்றேன்.

நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். அவ்வாற மாறுமேயானால் பொதுபலசேனை அல்ல எந்த சேனை வந்தாலும் இந்த சமூகத்தை அழித்தொழிக்க முடியாது என்பதை நாங்கள் இந்த நாட்டுக்கு மாத்திரமல்ல முழு உலகத்துக்கும் எடுத்துக் காட்டுகின்ற ஒரு முஸ்லிம் சமூகமாக நாங்கள் மாற முடியும். அந்த ஒற்றுமையை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இதற்காக ஊடகவியலாளர்களான உங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் நினைத்தால்; எதையும் சாதிக்க முடியும் . இன்று ஒரு பொதுபலசேனை வீதியில் நின்று கொண்டு சண்டை பிடிப்போம் வாரியா என்று கூப்பிடுவது போல் ஒரு கதை சும்மா இப்படி சீண்டுவது. இன்று முஸ்லிம் கழகத்துக்கு செய்யும் வேலை அதுதான் ஆனால் நாங்கள் அடித்துக் கொள்ள வரமாட்டோம். நீங்கள் என்ன செய்தாலும் வர மாட்டோம்.

 நீங்கள் முஸ்லிம் சமூகம் ஒரே சமூகமாக ஒரே குரலில் பேசுகின்ற சமூகமாக அது மாற வேண்டும். அடித்துப் பார்க்க நாங்கள் தயாரில்லாத சமூகம், வேண்டியதை செய்து கொள்ளட்டும். நாங்கள் அவர்களது நிலைக்கு வருவதில்லை நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் மிகவும் தெளிவாக இருக்கின்றது எங்களுடைய பலவீனமும், எங்களுடைய வளங்களும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். வெறுமனே எல்லா சமூகத்தையும் பலிக்கடாவாக்கின்ற தலைவர்களாக தலைவர்கள் இருக்க முடியாது. உலமா சபை இருக்க முடியாது. அரசியல் தலைமைகள் இருக்க முடியாது.

 இன்று நீங்கள் பொதுபலசேனா என்ற இயக்கத்தை வெறுமனே இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்களவர்கள் அத்தனை பேரும் பொதுபலசேனை என்று நாங்கள் நினைத்து விட முடியாது. ஒரு குறிப்பிட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே இந்த பொதுபலசேனை அமைப்பில் உள்ளனர். இன்று ஒட்டு மொத்தமாக சிங்கள சமூகம் மிகவும் நிதானமாக இருந்திருக்கின்றது. இன்று இந்த மக்கள், சிங்கள சகோதரர்கள், படித்த கல்விமான்கள் இந்த பொதுபல சேனை அமைப்புக்கு எதிராக, அவர்களது கொள்கைகளுக்கு எதிராக பேசுகின்ற கல்விமான்களை நாங்கள் வரவேற்கின்றோம்.

 அதற்காக எத்தனையோ அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்கள் கூட பேசுகின்ற தலைவர்களை காண்கின்றோம். அவர்களும் எங்களுடைய சிங்கள சகோதரர்கள், ஆனால் வெறுமனே இந்த இனவாதத்தை தூண்டி ஒரு இனக்கலவரத்தை உண்டு பண்ணுவதற்காக முயற்சிக்கின்ற பொதுபல சேனைக்கு நாங்கள் பலிக்கடாவாகின்ற ஒரு சமூகமாக நாங்கள் ஒரு போதும் இருக்கப் போவதில்லை. எங்களுடைய அடிப்படை இஸ்லாமிய உரிமைகள், உணர்வுகள் ஈமான்களை விட்டுப் போட்டு, அதை விட்டுக் கொடுத்து வாழ்கின்ற சமூகம் அல்ல முஸ்லிம் சமூகம் என்ற உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்த வேண்டும். என்பதற்காக இன்று இஸ்ரேல் போன்ற சக்திகள் இந்த நாட்டிலே ஊடுறுவி இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்துக்குள் பிரச்சனைகளை உண்டு பண்ண வேண்டுமென்பதற்காக பலவகையான உதவிகள், பண உதவிகளைச் செய்து வருகின்றது. இவைகளை எமது சமூகம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறான சக்திகள் பண உதவிகளல்ல, கடிதங்களைக் கொடுத்தாலும் கூட இந்த சமூகத்தை ஏமாற்றி இவ்வாறான சூழலுக்கு தள்ளலாம் என்று எண்ணுவதை முறியடிப்போம். என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். அதற்காக எங்களுடைய ஈமான்களை நாங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதில்லை. இன்றைய அரசியல் சாசனத்திலே முஸ்லிம்களுக்கு சரியான உரிமைகள் உள்ளது. அவைகளை முன்னெடுக்க நாங்கள் எல்லோரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

Published by

Leave a comment