
பழுளுல்லாஹ் பர்ஹான்
மன்னம்பிட்டியில் அபாயா அணிந்திருந்த முஸ்லிம் பெண் தாக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிப்பதடன் இதற்குரிய முழு பொறுப்பையும் உலமா சபையின் தற்போதைய நிர்வாகமும், அரசுக்கு ஆதரவு தரும் முஸ்லிம் உறுப்பினர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
ஹலாலை விட்டுக்கொடுத்தால் ஏனைய அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டி வரும் என நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதனையும் மீறி அவசரக்குடுக்கையாய் அதனை விட்டுக்கொடுத்ததால் இறுமாப்பு ஏற்பட்ட சிங்கள பேரினவாதம் இன்று முஸ்லிம் பெண்ணின் ஆடையில் கைவைத்துள்ளது. ஹலால் விடயத்தில் உலமா சபையும், அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளும்; தீர்மானமிக்க செயற்பாட்டில் இருந்திருந்தால் இத்தகைய நிலை இத்தனை சீக்கிரம் வந்திருக்காது.
பெண்களின் அபாயாவுக்கு ஆபத்து வந்தால் உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்குவோம் என கூறும் பெண் அரசியல்வாதிகள் இப்போது மன்னம்பிட்டியில் அபாயா அணிந்த பெண் அவமானப்படுத்தப்பட்டுள்ளதை எதிர்க்கு முகமாக குறைந்தது அரசுக்கு ஆதரவு வழங்கி பாராளுமன்றில் மௌன விரதம் கடைப்பிடிக்கும் தமது தலைவரை பகிரங்கமாக கண்டிக்க முன்வரவேண்டும்.
பௌத்த சீருடை அணிந்த தேரர் தமிழ் நாட்டில் தாக்கப்பட்டதற்காக ஜாதிக ஹெல உறுமய பகிரங்கமாக கண்டித்துள்ளது. ஆனால் இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பும் ஆடையை அணிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அபாயா அணிந்த பெண் தாக்கப்பட்டமையை கண்டிக்க பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் முன் வரவேண்டும். அறிக்கை விடுவதை சாதாரணமானதாக நினைப்பவர்கள் குறைந்தது இது விடயங்களில் அரசின் பொடுபோக்கை கண்டித்து ஒரு அறிக்கை விடுவதற்குக்கூட அச்சப்பட்ட கோழைகளாக இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் பேரின கட்சிகளில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களால் சுதந்திரமாக சமூகத்துக்காக குரல் எழுப்ப முடியாது எனபதனால்த்தான் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை கட்டி எழுப்பினோம். இன்று அதை விட கேவலாமான நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சுயநல ஆசைகளும் பதவி வெறியும், ஏமாற்று அரசியல்வாதிகளின் மோசடிகளுக்கு சோரம் போன பொது மக்களுமாகும். இத்தகைய ஏமாற்றுக்கட்சிகளால் முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மையை விட தீமைகளே மிக அதிகம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
Leave a comment