
– ரைஸ்
பின்தங்கிய பிரதேசமான சம்மவச்ச தீவு பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி தலைமையில் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ‘சைகா’ நிறுவன ஊழியர்கள் ஒத்துழைப்புடன் நேற்று சம்மவச்ச தீவு அஸ்ஸபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூபின் ஏற்பாட்டில் அனர்த்த நிலைமையின் போது கலந்துரையாடப்பட்டதன் நிமிர்த்தம் குறித்த இலவச மருத்துவ முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெள்ள மற்றும் அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் மக்களுக்காக இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமுக்கு அமானா தகாபுல் இன்சுரன்ஸ், ஹட்டன் நெசனல் வங்கி, சம்பத் வங்கி ஆகியன அனுசரணையினை வழங்கியிருந்தார்கள்.
இலவச மருத்துவ முகாமின் போது வைத்தியர்களாக கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி, கிண்ணியா தளவைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் கே. நளீம், தம்பலகாம வைத்தியசாலை கடமையாற்றும் டொக்டர் ஏ. நௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சம்மவச்ச தீவு, நெடுந்தீவு, சல்லிக்கிளப், பூவரசன் தீவு மற்றும் ஆலங்கேணி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்களது நோய்களுக்கான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளையும் இதன்போது பெற்றுக்கொண்டனர்.
இப்பாரிய சமூக நல உதவியால் பல ஏழை நோயாளர்கள் இலவச சிகிச்சை பெற்று பெரும் பயனடைந்தனர்.
Leave a comment