– முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக்
பழுலுல்லாஹ் பர்ஹான்

உள்நாட்டு மக்களுக்கு ஹறாமும், வெளிநாட்டினருக்கு ஹலாலும் என்ற உலமா சபையின் முடிவை வாபஸ் பெற அல்லது ஹலால் சான்றிதழ் வழங்குவதை முற்றாக நிறுத்த முடியாவிட்டால் தற்போதைய ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத்தினர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவரும் கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை உப தலைவருமான முபாறக் மௌலவி கோரியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு இல்லாத ஹலால் சான்றிதழை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் ஜம்இய்யத்துல் உலமா பற்றிய தப்பபிப்பிராயமே தொடரும். ஜம்இய்யத்துல் உலமாவை கைவிட்ட அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு துணை போக வேண்டிய தேவை உலமா சபைக்கு இல்லை. இந்நாட்டு முஸ்லிம்களை சாக்கடைக்குள் தள்ளிவிட்டு வெளிநாட்டினரை சுத்தப்படுத்தும் முயற்சியில் உலமா சபை இறங்கியுள்ளமை கவலைக்குரியதாகும். இத்தகைய செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் வெட்கித்து தலைகுணிந்த நிலையில் உள்ளது என்பதை ஜம்இய்யததுல் உலமாவின் அங்கத்தவன் என்ற வகையில் நாம் உரிமையுடன் வெளிக்காட்ட வேண்டியுள்ளது.
வெளிநாட்டு பொருட்களுக்கு இலவசமாக ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையானது ஜம்இய்யத்துல் உலமாவை அரசாங்கத்தின் ஆயுள் கைதியாகவே வைத்திருக்கும் நிலைக்கே இட்டுச்செல்லும். ஏற்கனவே ஜம்இய்யத்துல் உலமா அரசின் எடுப்பார் கைப்பிள்ளை என்ற நிலையில் உள்ளதான தோற்றமே உள்ளது. இது இப்படியே போனால் நமது மூதாதையர்கள் பாடுபட்டு கட்டிக்காத்த உலமா சபையின் கௌரவம் முஸ்லிம்களிடம் இல்லாது போய்விடும் நிலை ஏற்படும்.
உலமா சபை அழுத்தம் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக உலமா சபையின் தற்போதைய நிர்வாகிகளுக்கே அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன என்பதே முக்கியமானதாகும். இந்த நிலையில் அவர்கள் தமது பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வதன் மூலம் இத்தகயை அழுத்தங்களிலிருந்து விலகிக்கொள்ள முடிவதோடு ஜம்இய்யத்துல் உலமாவையும் பாதுகாக்க முடியும். அதன் பின் நாடு பூராவுமுள்ள உலமா சபையின் பிராந்திய தலைவர்கள், செயலாளர்கள், உபதலைவர்களை அழைத்து ஜனநாயக முறையிலானதாய்ச்சபையின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்து அவர்கள் ஹலால் முறையை மீண்டும் நமது நாட்டில் கொண்டு வர வேண்டும் அல்லது முற்றாக அதனை நிறுத்த வேண்டும் என கோருகின்றோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
Leave a comment