பேரினவாதத்தின் இரட்டை வேடத்தில் ஏமாறும் முஸ்லிம் சமூகம்!

BY: MJ
BY: MJ

MJ

ஜனநாயக சோசலிசக் குடியரசாக இருங்கும் இலங்கையில் மூன்றாவது சமூகமாக இருந்துவரும் முஸ்லிம்கள், இன்று சிங்கள பேரினவாத இயக்கங்களின்  பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருவதானது உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது.

பள்ளிவாயல்களில் கைவைத்து வெற்றியைக் கண்டுகொண்ட இப்பேரினவாதக் குழுவின் ஆர்வத்தின் காரணமாக முஸ்லிம்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகக் களைவதற்கு ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

பொது பல சேனா அமைப்பு இலங்கையில் மேற்கொண்டு இன்னும் முஸ்லிம்கள் விடயத்தில் பல விடயங்களை ஆராய இருப்பதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

“காக்கிச்சட்டை போடாத பொலிஸ்” எனவும்,  “முயன்றால் கைவைத்துப் பார்” எனவும், “காவி உடை தரித்த பொலிஸ் நாங்கள்” எனவும் தங்களை எதிர்ப்போரின் மூக்கில் கைவைத்துச் சொல்கின்றது இவ் அமைப்பு!

குறுகிய காலத்துள் அதி மதத் தீவிரவாத கொள்கைகளை விதைத்து, நாட்டில் பலமான ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அரசாங்கத்தின் கள்ளக் குழந்தையையாக செயற்பட்டு வரும் பொது பல சேனாவின் பின்னணியையையும் அதன் நிகழ்ச்சி நிரல்களையும் பின்வருமாறு சுருங்கக் கூறலாம்.

* இலங்கையை முழுமையான பௌத்த நாடாக்குதல்

* பௌத்த மதத்தை திசைதிருப்பும் அல்லது அதன் வளர்ச்சையைத் தடுக்கும் காரணிகள் எவை என்பதை அடையாளங்கண்டு, அவற்றை களைதல்.

*பௌத்த சமயம், சிங்கள கலாச்சாரங்களை விட்டும் விலகியிருந்த மக்களை விகாரைகள் மற்றும் இரகசிய, பரகசிய பேச்சுக்கள் மூலமாக பொது பல சேனாவில் இணைத்து, பௌத்த இலங்கையை பெற்றுக்கொள்ள போராடுதல்.

* பிறமத பிரச்சாரங்கள் ஊடாக குறிப்பாக இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பிரச்சாரங்களையும், அதன் மூலம் ஏற்படும் மதமாற்றங்கள் அல்லது, பௌத்த சமயத்தை விட்டும் விலகிச் செல்லும் விகிதத்தைக் கட்டுப்படுத்தல்.

* பலம் பொருந்திய அமைப்பின் இருப்பை இந்நாட்டில் உறுதி செய்வதுடன் அதற்காக இளைஞர் படையணியை அமைத்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மதப்பிரச்சார வேலைகளில் பயன்படுத்துதல்.

*எதிர்கால அரசியல்

மேற்கொண்ட அடிப்படைக் காரணிகளைக் கொண்டியங்கும் பொது பல சேனாவுக்கு இலங்கை அரசாங்கம், நோர்வே மற்றும் இஸ்ரேல் போன்ற அமைப்புக்கள் ஆதரவு இருப்பதாகவும் சில ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்தி இருந்தன.

குறுகிய காலத்துல் அதிக உறுப்பினர்களைக் கொண்டு முன்னேறிச் செல்லும் பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகளாலும், அவ் இயக்கத்திற்கு இருக்கும் மறைமுகமான அரசாங்க ஆதரவுகளாலும், பல வருடங்களாக அரசியல் செய்துவரும் ஜே.வி.பி, ஹெல உறுமய போன்ற கட்சிகள் இன்று அதிர்ச்சியடைந்திருக்கின்றன.

சிங்கள மக்களின் உரிமைக்காக, இந்நாட்டில் பௌத்த மதத்தின் உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ள வெளிக்கிளம்பிய ஹெல உறுமய இன்று பொது பல சேனாவின் வளர்ச்சியில் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

எதிர் கால அரசியலில் பொது பல சேனா உள் நுழைந்தால், சில ஆயிரம் வாக்குகளைக் கொண்டு பாராளுமன்றத்தைத் தக்கவைத்துக்கொண்ட தங்களது அரசியல் கனவு பறிபோய்விடும் என்பதை உணர்ந்து, இக்கட்சியின் உறுப்பினர்கள் பொது பல சேனாவின் அடக்கு முறைக்கு எதிராக இன்று குரல் கொடுத்து வருகின்றனர்.

‘ஆடு நனைகிறதே’ என கவலைப்படும் ஓநாய் இன் கதையை அறியாத நாங்கள், அறியாமையில் ‘அவர் அப்படி கூறி இருக்கிறார்’ இவர் இப்படி கூறி இருக்கிறார்’ ‘முஸ்லிம்களின் அபாயா களைவதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்’ என்பதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதுதான் எங்களின் முதலாவது ஏமாற்றம்!

“எனக்கு வாக்களியுங்கள் உங்கள் உரிமைகளுக்கு நான் பொறுப்பு” என உத்தரவாதம் தந்த அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை விடவா இவர்கள் எங்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருபவர்கள் என்பதை சிந்திக்க வேண்டும்!

இவை முஸ்லிம்களுக்கு ஆதரவுகளாக அல்லது ஆறுதலாக இருக்கலாம். எனினும் முஸ்லிம்கள் இவ்வாறான மாய வலைகளில் சிக்குண்டு போகாமல், நடப்பு விடயங்களை அவதானமாக கையாள வேண்டும்.

இதே போல் இவர்களின் சண்டைகள் எங்களின் உரிமை விடயங்களில் எவ்வித இலாபத்தையும் பெற்றுத்தரப் போவதில்லை!

வாய் மூடிய எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் காரணமான இன்று ஓர் பௌத்த மத குரு அல்லது  பௌத்த பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு குரல் கொடுக்கின்ற நிலை இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரை இது கேவலமானது! அல்லது வெட்கித் தலை குணிய வேண்டியவை!

தனது சிறு தகறாருகளுக்கும், தேவையில்லாப் பிரச்சினைகளுக்கும் பொலிஸ் நிலையத்தையும் நீதி மன்றத்தையும் நாடும் முஸ்லிம் தனி நபர்கள், எமது சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிராக இலங்கை-ஜனநாயக நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பொலிஸ் நிலையத்தையோ, நீதி மன்றத்தையோ நாடுவது கிடையாது.

இதன் பின்னால் பாரிய அரசியல் சதித்திட்டங்கள் இருப்பதால் முஸ்லிம் அமைப்புக்கள் பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிட தயங்கி வருகின்றன. குரல் கொடுக்க வேண்டிய முதலாவது இடம் பாராளுமன்றம் ஆகும். அங்கு எமது சமூகத்தின் கண்கள் உறங்குவதால் வெளியிலும் மக்கள் உறங்குகின்றனர். இதன் காரணமாக அச்சம் கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் திட்டமிட்டு நசுக்கப்படும் போது அதனை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். குரல் கொடுங்கள் என்றால் வீடுகளை எரிப்தோ, ஹர்த்தால் போடுவது, ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதோ அல்ல. சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுங்கள். அரசாங்கத்துக்கு இது விடயமாக மகஜர் அனுப்புங்கள். இலங்கையில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லை என்றால் ஹலால் இல்லாத இலங்கை போன்று முஸ்லிம்கள் இல்லாத இலங்கைகைய உலகுக்குக் காட்டுவார்கள்.

அவைதான் முஸ்லிம்களின் அடையாளங்கள் களையப்படுவது அவற்றுள் பல திட்டமிடப்பட்டிருக்கின்றன.

எனவே ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் முஸ்லிம் அமைப்புக்கள் இருக்கின்றன. மாவட்ட ரீதியாக ஒன்றிணைந்து, எமது

உரிமை க்கு ஆபத்து இருப்பதை உலகுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.

1983ல் இந்நாட்டில் ஏற்பட்டிருந்த ஜூலைக் கலவரம் உலக மக்களை ஈர்த்தது. இதனால்தான் இன்றும் இலங்கைத் தமிழர்களுக்கு உலகில் வரவேற்பிருக்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சினை என்றால் மேற்கத்தேய நாடுகளோ அல்லது இந்தியாவோ குரல் கொடுப்பதற்கோ அல்லது தமிழர் பிரச்சினையை நம்புவதற்கோ காரணம் அப்போதிருந்த தமிழ் தலைவர்களின் குரல்களும் ஊடகங்களுமே என்றால் மிகையாகாது. துரித ஊடக வளர்ச்சயற்றிருந்த அக்கால கட்டத்தில்கூட தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழ் அமைப்புக்கள் இருந்தன.

இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பிரச்சனை என்றால்… பிரச்சினையா? அவர்கள் எப்போதும் அரசாங்கத்துடன் சார்ந்து போகும் இனமே? அவர்களுக்கா இந்நிலை? என வியப்புடன் கேட்கும் வெளி உலகின் கேள்விகளுக்கு எங்களிடம் விடைகள் இல்லை!

இறுதிநாட்களின் அடையாளங்களுள் ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள், அழிவுகள். எனவே இத்தகைய அழிவுகள் பலஸ்தீன் முஸ்லீம்களுக்கு மாத்திரமே உலகம் அழியும்வரை இருக்கும் என்பது அல்லது.

எனவே, எமது முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் சம்பந்தப்பட்டவர்கள் குரல் கொடுக்க முன்வர வேண்டும். தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் என்ன? முழம் என்ன? 

Published by

Leave a comment