தனியார் நிறுவன த்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த விமானம் மூலமான வெளி நாட்டுத் தபால் மற்றும் பொதிகள் சேவையை தபால் திணைக்களம் நேற்றுக்காலை முதல் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டது.
தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவிக்கிறது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலும், விமான நிலையத்தின் இடைத்தங்கல் பகுதியிலும் குவிந்திருக்கும் வெளிநாட்டுத் தபால்கள் மற்றும் பொதிகள் பற்றிய அறிக்கையொன்றை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர், தபால் திணைக்களத்துக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இன்னும் ஐந்து தினங்களுக்குள் தேங்கிக்கிடக்கும் சகல வெளிநாட்டுத் தபால்களையும், பொதிகளையும் விநியோகிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
விமானம் மூலமான வெளிநாட்டுத் தபால் சேவைகளை தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தபால் சேவைகள் அமைச்சு முன்னர் முடிவெடுத்திருந்தது.
தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதன் மூலம் 75 மில்லியன் ரூபாவை மீதப்படுத்துவதுடன், நேர்த்தியான சேவையைத் தொடர்வதன் மூலம் தண்டப்பணம் அறவிடுதல், தாமதக் கட்டணம் போன்றவற்றைக் குறைத்து அதன் மூலம் மேலும் 50 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடியும் என்றும் தபால் திணைக்களம் முடிவு செய்திருந்தது.
இதன்படி வெளிநாட்டு தபால் சேவையை தகுந்த ஒரு சேவை வழங்குனர் ஒருவரைத் தெரிவுசெய்து கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று, அமைச்சரவை உபகுழுவின் ஊடாக கேள்விப் பத்திரம் கோரப்பட்டு ஒரு தனியார் நிறுவனத்திடம் கடந்த முதலாம் திகதி முதல் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிறுவனம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டுப் பொதிகள் சேவையை ஆரம்பித்தது. எனினும், தபால் சேவைகள் ஆரம்பித்த நாள் முதல் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தபால்மா அதிபர் ரோஹன அபயரத்ன மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஊடாக, குறித்த தனியார் நிறுவனம் தபால் விநியோக சேவையை கையாண்டவிதம், விமான நிறுவனங்களுடன் அவர்கள் நேரடித் தொடர்புகள் கொண்டிராமை, இடைத்தங்கல் நிலையங்களை சரிவரத் தெரிவுசெய்து கொள்ளாமை போன்ற காரணங்களினால் வெளிநாட்டு தபால் சேவைகளில் குழப்பம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தலைமையில் நேற்றுக்காலை விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது குறித்த நிறுவனத்திற்கு தொடர்ந்தும் இச்சேவையை வழங்க முடியுமா என்பது பற்றி ஆராயுமாறும், இல்லையேல் உடனடியாக அவர்களது கேள்விப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதன்படி குறித்த நிறுவனத்துக்கு மேலும் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களுடன் உள்ள நேரடித் தொடர்புகள் குறித்த ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு தபால் மற்றும் பொதிகள் சேவையை நடத்துவதற்கான அவர்களது திட்டவரைபு என்பவற்றை அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லையெனில் அவர்களுக்குரிய கேள்விப்பத்திர ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படும் என தபால் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, வெளிநாட்டு தபால் மற்றும் பொதிகள் சேவையை தபால் திணைக்களமே நேற்றுக்காலை முதல் ஆரம்பித்துள்ளது.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment