எமது தாய் நாடாகிய இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். அவ்வாறே பல்வேறு சமயங்களும் பின்பற்றபடுகின்ற இந்நாட்டில் சகல இனத்தவரும் ஐக்கியமாகவும், சகவாழ்வுடனும் வாழவே விரும்புகின்றனர். இந்நிலையில் இன நல்லுறவைப் பாழ்படுத்தச் செய்கின்ற காரியங்கள் எதனையும் இந்நாட்டு மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஹலால் விவகாரத்தை மையப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக உருவாக்கப்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவனத்தில் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு சில ஒழுங்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் பற்றி இலங்கை வர்த்தக சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த உயர்பீட பௌத்த பிக்குகள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்களை வர்த்தக சம்மேளனம் வெளியிட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடன்பாட்டோடு இன்று (2013-03-11) கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளின் சுறுக்கம் பின்வருமாறு :
1- ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் உடனடி தயாரிப்புப் பாவனைப் பொருட்கள் (Fast Moving Consumer Goods) உற்பத்தி செய்யும் படிமுறையில் முன்னரோ, பின்னரோ சமய சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் உள்ளடங்குவதில்லை.
2- ஒரே உற்பத்திப் பொருளில் ஹலால் இலட்சினை சேர்த்தும், அது இல்லாமலும் சந்தைப்படுத்துவதானது நுகர்வோருக்கு குழப்ப நிலையை ஏற்படுத்தலாம்.
3- உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு அந்த இலட்சினை போடப்பட வேண்டுமென்பது கட்டாயமல்ல் அது விருப்பத்துக்குரியதே. இருப்பினும் வழமைபோல் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளுக்காக ஹலால் சான்றிதழைப்
பெற்றுக் கொள்ளலாம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலவசமாக அச்சான்றிதழை வழங்கும்.
4- வெளிநாட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள விசேட விற்பனை நிலையங்களில் ஹலால் இலட்சினையுடன் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யலாம்.
5- அனைத்து உற்பத்தியாளர்களிடத்திலும் கணிசமான அளவில் பூர்த்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களும், ஹலால் இலட்சினை அச்சிட்ட பொதியிடும் பொருட்களும் கையிருப்பில் இருப்பதாலும், அவை முற்றாக வெளியேற கணிசமான காலம் தேவைப்படும். எனவே பூர்த்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களும், ஹலால் இலட்சினை அச்சிடப்பட்ட பொதியிடும் பொருட்களும் முடியும் வரை ஹலால் இலட்சினையுடன் இவ்வுற்பத்திப் பொருட்கள் சந்தையில் காணப்படும்.
6- சந்தையில் ஹலால் இலட்சினையற்ற உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதற்கு உற்பத்தியாளர்கள் உடனடியாக பொதியிடளை மாற்றும் படிமுறையை ஆரம்பிப்பார்கள்.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
-ACJU
Leave a comment