கிழக்கில் ஆசிரியர் நியமனங்களில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை

z_p09-Teacher[1]கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள சகல ஆசிரியர் நியமனங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆசிரிய ஆளணியை கணக்கிடுவது தொடர்பாக நேற்று முன் தினம் சனிக்கிழமை (09) மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செயலமர்வில் அவர் இதனை குறிப்பிட்டார். இச் செயலமர்வு கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் கடமை யாற்றும் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்காக நடத்தப்பட்டது.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஆசிரியர் நியமனங்களின் போது வெற்றிடமுள்ள மாவட்டங்களுக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் போட்டிப் பரீட்சை அடிப்படை யில் நியமிக்கப்படுவார்கள். நியமிக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னரே பல்வேறு செல்வாக்குகளை செலுத்தி தமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று விடுகின்றனர். இதனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மாகாண கல்வி நிருவாகம் முகம் கொடுத்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக் களப்பு மேற்கு மத்திய கல்வி வலயம், கற்குடா கல்வி வலயம், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, திருகோணமலை வடக்கு ஆகிய கல்வி வலயங்களிலேயே கூடியளவு ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வெற்றிடங்களை அம்பாறை மாவட் டத்தைச் சேர்ந்தோர் தற்போது ஓரளவு நிவர்த்தி செய்துள்ளனர். எனினும், இவர்களுள் பெரும்பாலோனோர் இட மாற்றம் பெற்று தமது சொந்த மாவட் டத்திற்கு செல்லவே விரும்புகின்றனர்.

எனவே, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெற் றிட எண்ணிக்கையை பொறுத்தும், நிய மனம் செய்யப்படுவோரின் எண்ணிக்கை யையும் பொறுத்து, அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து விட்டு அவ்வெற்றிடங்களுக்கு திருகோண மலை, மட்டக்களப்பு மாவட்டத்தை வதிவிடங்களாக கொண்டோருக்கு புதிய நியமனங்களை ஏப்ரல் மாதம் வழங்குவதற்கு ஆளுநர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவோர் மாவட்டத்தில் வெற்றிட மாக காணப்படும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர். இது தொடர்பான இடமாற்றக் கொள்கை ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கருத்து பெறப்பட்டு தயாரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள வாழ்க்கைச் செலவு ஏனைய பொருளாதார காரணிகளைக் கருத்திற் கொண்டு எந்த ஒரு ஆசிரியரும் மனம் முறியாவண்ணம் திருப்தியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment