இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்த்தபடியே சுமூகமான ஓர் முடிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் விடயத்தில் இன்று பகிரங்கமாக தனது முடிவை அறிவித்திருக்கின்றது.
இந்த செய்தியாளர் மாநாட்டின் பின்னர் ‘இனிமேல் ஹலால் முத்திரை இலங்கையில் பொறிக்கப்பட மாட்டாது’ என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்திருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து ‘ இது இந்நாட்டுக்கு கிடைத்த வெற்றி’ என பொதுபல சேனாவின் சிரேஷ்ட பிக்குவான விமரரத்ன தேரர் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கள பிரதேசங்களில் சில இடங்களில் பட்டாசுக்கள் கொளுத்தி எறியப்பட்டன.
அ.இ.ஜ.உ வின் தலைவர் அஷ்செய்ஹ் ரிஸ்வி முப்தி அவர்கள் ஹலால் சம்பந்தமான இப்பிரச்சினைக்கு நாட்டின் நலன் கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் வாய் திறக்காத, இலங்கை முஸ்லிம்களின் மிக முக்கியமான உரிமைகளுக்கு எதிராக தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு குரல்கொடுக்காத இத்தகைய முஸ்லிம் அமைச்சர்களுக்கு அப்பால் தனித்து நின்று, இம்முடிவை அ.இ.ஜ.உ. தெரிவித்திருக்கின்றது.
ஆனால் உணவுப் பொருட்களில் ஹலால் முத்திரை பொறிக்கப்படாவிட்டாலும், உணவுப் பொருட்களின் பட்டியலில் வழங்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து முஸ்லிம்கள் அடையாளப்படுத்தி அவற்றை உண்ண முடியும் எனவும் ரிஸ்வி முப்தி அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் கூறியிந்தார்.
இது நடைமறைக்கு சாத்தியப்படுமா?
இத்தகைய ஹலால் குறியீடு அகற்றப்படுமானால் இலங்கையில் உள்ள வெளிநாட்டு உணவகங்கள் குறிப்பாக ‘மெக் டொனால்ட்ஸ்’, ‘கே.எப்.சி’, ‘பீஸா’ போன்ற நிறுவனங்களின் பொருட்களை முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
இதே போல், நட்சத்திர ஹோட்டல்கள், விமான சேவைகள் போன்றவற்றின் உணவுகளிலும் சிக்கல்கள் ஏற்படும். இது சம்பந்தமான விரிவான ஆக்கத்தை ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம்.
உள்ளுர் உணவுப் பொருட்களில் ஹலால் முத்திரை இடம்பெறாவிட்டால் முஸ்லிம்கள் எந்த நம்பிக்கையில் அவற்றை கொள்வனவு செய்து உண்ண முடியும் என்ற பாரிய சந்தேகங்களும் சிக்கல்களும் ஏற்படும்.
உதாரணமாக, கோழி இறைச்சியால் செய்யப்பட்ட ஓர் உணவைக் கொள்வனவு செய்யும் போது உணவுப் பட்டியலில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கும்.
கோழி இறைச்சி, மிளகாய், உப்பு, சிட்ரிக் அசிட்….
இவற்றுள் கோழி இறைச்சி ஹலாலா? ஹராமா? என்ற கேள்வி எழும்.
அப்போது மேற்படி உணவுப் பட்டியலில்
‘ஹலால் கோழி இறைச்சி’ என்று எழுதுவார்களா?
அல்லது இந்த உணவை உண்ண முடியும் என்பதற்கு யார் பொறுப்பு?
உரிமை பறிக்கப்பட்டுவிட்டது
எங்களது உரிமைகளில் ஒன்று எமது முஸ்லிம் அமைச்சர்களின் முன்னாளேயே இன்று களைந்தெறியப்பட்டிருக்கின்றது. இத்தகைய பொம்மை அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதால் அ.இ.ஜ.உ. இற்கும் மேற்கொண்டு எதனையும் செய்ய முடியாத நிலையில் இத்தகைய உரிமை ஒன்று பறிக்கப்ட்டிருக்கின்றது.
வேதனைகள்:
* இன்றிலிருந்து பிறக்கும் ஓர் முஸ்லிம் குழந்தைக்கு இனிமேல் இந்நாட்டில் ‘ஹலால்’ என்றால் என்ன என்பதை, அப்போது மூதாதையர்களாக இருக்கப்போகும் நாங்கள் சொல்லிக் கொடுக்கவேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்ற கசப்பான உண்மையை இலங்கை முஸ்லிம்கள் உணர்ந்தாக வேண்டும்.
* அ.இ.ஜ.உ இத்தகைய ஹலால் முத்திரையை பகிரங்கமாக நீக்குமிடத்து, மேற்கொண்டு ஹலால் விடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் மூக்கை நுழைக்க முடியாது. ஐ.நா இற்கும் மகஜர் அனுப்ப முடியாது. அரபு நாடுகளிடமும் இனிமேல் எடுத்துக் கூற முடியாது.
எனவே ஹலால் முத்திரைதான் அகற்றக்கட்டிருக்கிறதே தவிர ஹலால் இந்நாட்டில் பேணப்படும் என்பது ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற ரீதியில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்.
ஹலால் முத்திரைதானே எடுக்கப்பட்டிருக்கிறது. உரிமை பறிக்கப்படவில்லைலே என்று நினைப்பதால் தான், முஸ்லிம் பெண்களின் அபாயா விடயத்தில் அடுத்து பொது பல சேனா கை வைக்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது.
அபாயா விடயத்தில் பொது பல சேனா கைவைத்தால், எமது சமூக தலைவர்களும், வாய்மூடிய முஸ்லிம் அமைச்சர்களும் ஒரே ஒரு விடயத்தையே எங்களுக்குச் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான்
அபாயாவைக் களைந்தால் சல்வார் இருக்குத்தானே, சாரி-பிடவை இருக்குத்தானே….
எமது முன்னோர்கள், தாய்மார்கள் எல்லோரும் அபாயா அணிந்தார்களா? என்றெல்லாம் எங்களுக்கிடையில் கேள்வி கேட்பார்கள். சமாதானப்படுத்துவார்கள்.
நேற்றைக்கும் இன்றைக்குமே இத்தகைய விடயங்கள் எங்களுக்குப் பெரிதாகத் தோன்றும். தேர்தல் வந்தால் மறைந்து விடும். எமது முஸ்லிம் சமூகம் தமது சமயத்தை மதிப்பதிலும் பார்க்க, தேர்தலையே இந்நாட்டில் மதித்து வருகின்றனர். இதனால்தான் மீண்டும் மீண்டும் இத்தகையவர்களை 50 வருடங்களாக தேர்வு செய்து பாராளுமன்றம் அனுப்புகிறோம்.
எனவேதான் ஹலால் உரிமை முஸ்லிம்களுக்குரியது. இன்று எமது நாட்டில் தெட்டத் தெளிவாக பறிக்கப்பட்டிருக்கின்றது. அல்லது பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றது. பறிக்கப்பட்ட எமது உரிமைக்கு எவ்வாறாறெல்லாம் மெழுகு பூசி, மறைத்து, மழுப்புகிறோமோ, அன்றிலிருந்து இலங்கை முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை ஒவ்வொன்றாக இழக்கின்றனர் எனபது வெளிப்படை!
அ.இ.ஜ. உலமா மிக கண்ணியமான முறையில் தங்களது தவிர்க்க முடியாத இத்தீர்மானத்தை மனித நேயத்துடன் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தது. இதற்குப் பின்னால் வாய் மூடிய அரசியல் அழுத்தங்கள் இருந்ததாகவும் தெரியவருகிறது. அல்லாஹ் அறிந்தவன். அல்லாஹ் எங்களுக்கு பொறுமையைத் தருவானாக!
![SAY-NO-TO-HALAL-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/say-no-to-halal-logo1.jpg?w=143&h=150)
Leave a comment