ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகதகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது பற்றி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி- ஜுன் -ஜுலை மாதங்களில் நடைபெறவிருந்த ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அரசு மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாக இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட போட்டிகளை கொழும்பில் நடத்துவதாக ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இந்த போட்டி மே மாதம் 12ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கை வீரர்கள் தமிழ் நாட்டுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தhலும் இந்திய வீரர்கள் இப்போட்டிகளில்;கலந்துகொள்வதற்காக இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கும்.
நிச்சயமாக நாங்கள் அவர்களை வரவேற்போம். அதில் எந்த தடையும் இல்லை. எம்மைத் தடுத்தவர்கள் இங்குவரக் கூடாது என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வைராக்கியத்துடன் செயற்படுவதில்லை. செயற்படவும் மாட்டோம். சகல விடயமும் சுமுகமான முறையிலும் இராஜதந்திர மட்டத்திலும் மேற்கொண்டே வருகின்றோம்.
ஒருவர் தவறு விடுகின்றார் என்பதற்காக அதே தவறை நாம் செய்ய கூடாது. தவறை சுட்டிக்காட்டி சரியானவற்றின் மூலம் அத்தவறை இல்லாமல் ஆக்கவேண்டும்.
எது எவ்வாறாயினும் சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய தடகள போட்டிகள் கொழும்புக்கு மாற்றியமை இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment