
பழுலுல்லாஹ் பர்ஹான்
யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மன்னம்பிட்டிய புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டடத்திற்காக 12.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் அந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் 25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹிங்குராங்கொட மாவட்ட நீதிமன்ற கட்டடம் மற்றும் 12.8 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பகமுண புதிய சுற்று நீதவான் நீதிமன்ற கட்டடமும் திறந்து வைக்கும் வைபவத்தின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்காக தேவையான வசதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. கடந்த காலம் முழுவதிலும் நிலவிய யுத்தம் காரணமாக இப் பிரதேசத்தின் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். அதன் காரணமாக இங்கு நீதிமன்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்பட்டன. ஆனாலும் இங்கு இன்று அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
சுங்காவில தொடக்கம் பொலநறுவை வரை மிக நீண்ட தூரம் உள்ளது. அதற்கிடையே நீதிமன்றமொன்று இல்லாதிருப்பதனால் மக்கள் பொலநறுவைக்கு வரவேண்டியுள்ளது. அதனால் புலஸ்திகம பிரதேசத்தில் புதிய சுற்றுலா நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதைப்பற்றி அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவும் தெரிவித்தார்.
நேற்று திறந்து வைக்கப்பட்ட மன்னம்பிட்டிய நீதிமன்றத்தில் சுமார் இரண்டாயிரம் வழக்குகள் காணப்படுவதாக குறிப்பிட்டார். இதனை நோக்கும்போதே இங்கு பெரிதளவிலான வழக்குகள் இருப்பது தென்படுகின்றது. எதிர்காலத்தில் மனம்பிடிய நீதிமன்றத்தை நீதவான் நீதிமன்றமாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. அதற்காக நீதிமன்றத்திற்கு முன்னால் பொலிஸ் நிலையமொன்றையும் அமைக்கவுள்ளமை தெளிவானது.
கடந்த காலப்பகுதியில் நீதிமன்றம் பற்றிய வெவ்வேறுபட்ட பரபரப்பான நிலைமைகள் ஏற்பட்டது. வழக்கு தாமதம் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந் நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாம் செயலாற்றுவதுடன், வழக்கு தாமதங்களை குறைப்பதற்காக பிரதம நீதியரசருடன் பேச்சுவார்த்தை நடாத்தி புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி ஆகியோருடன் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சிலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.


Leave a comment