ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்கள் எந்த போட்டியிலும் விளையாட முடியாது!

SRI LANKA CRICKET LOGO[1]வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத கிரிக்கெட் வீரர்களை எந்த ஒரு போட்டியிலும் விளையாட அனு மதிக்கப்போவதில்லையென உறுதியாக இருந்ததையடுத்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்ட நிலையிலும் முதல்தர வீரர்கள் 8 பேருக்கும் வருடாந்தம் தலா 48 மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் காணப்படும் ஏகபோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர், கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் தடுக்க பின்னணியில் இருந்தவர்கள் யாரென தனக்கு தெரியும் எனவும் கூறினார். விளையாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதையடுத்து தேசிய அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தனர். கடந்த வருடமும் இவ்வாறு மறுத்தனர். ஆனால் இம்முறை இந்த பிரச்சினை வர முன் நாம் இரண்டாவது அணியை தயார்படுத்தி வைத்திருந்தோம்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்குக் கிடைக்கும் பணத்தில் 95 வீதம் தேசிய கிரிக்கெட் அணியை நிர்வகிக்கவே செலவிடப்படுகிறது. 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட அணிக்கு எதுவும் செய்ய முடிவதில்லை.

இம்முறை நாம் உறுதியாக இருந்த நிலையில் வீரர்கள் கைச்சாத்திட முன்வந்தனர். பங்களாதேஷ் அணியுடனான போட்டிக்கு சிபார்சு செய்யப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் ஒரு வீரர் மட்டும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லை. அவரது பெயரை நீக்கி ஏனையவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் பின்னர் கையொப்பமிட்டதால் அவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டது.

2015 இல் உலகக் கிண்ணத்தை வெல்லும் வகையில் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் ஒழுங்கு கடுமையாகப் பேணப்படுகிறது. விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீட்டுக்கு இடமில்லை.

-தினகரன்

Published by

Leave a comment