அதிகரித்துச் செல்லும் இனவாதம்: எதிர்காலம் என்ன…? போருக்குப் பின்னரான இலங்கை

BY: PMGG
BY: PMGG

PMGG

போர் முடிவுக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குமிடையிலுமான சந்தேகப் பார்வைகள் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை.

போரை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை என்றொரு இனம் கிடையாது எனக் குறிப்பிட்டிருந்தார். அச்சமயம் ஜனாதிபதியின் இந்தக் கூற்றுக்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டன.

இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற எந்தவித வேறுபாடும் கிடையாது. அனைவரும் இலங்கையரே என்பதைதத்தான் ஜனாதிபதி கூற வந்ததாக பலரும் அதற்கு விளக்கமளித்தனர். ஆனால் உண்மையான அர்த்தம் அதுவல்ல என்பதை கடந்த மூன்று வருட காலங்களுக்குள் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு நன்குணர்த்தி நிற்கின்றன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் – முஸ்லிம் மக்களுக்கான மீள் குடியேற்றமும் நிவாரணமும் முறையாகவும், நீதியாகவும் வழங்கப்படவில்லை. வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீள் குடியேற்ற திட்டத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றார்கள். கிழக்கில் முஸ்லிம்கள் இழந்ந கிராமங்கள் இன்னும் அவ்வாறே கிடக்கின்றன. மொத்தத்தில் மீள்குடியேற்ற புணர்வாழ்வு நடவடிக்கைகளில் முழுக்கமுழுக்க புறக்கனிக்கப்பட்ட சமூகமாகவே முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.

இந்நாட்டில் நிரந்தர அமைதியை உருவாக்குமுகமாக மேற் கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை LLRC ஆணைக்குழு தெட்டத் தெளிவாக முன்வைத்திருக்கின்ற போதிலும் அரசாங்கம் இதில் இன்னும் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து அரசியல் தீர்வு பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகள் இன்று காற்றில் பறந்து விட்ட சங்கதிகளாகவே தெரிகின்றன. இருக்கின்ற அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளையும் இல்லாமல் செய்கின்ற தந்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் தெட்டத் தெளிவாக செய்து வருகிறது. அண்மையில் கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபை மாத்திரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனையும்கூட சட்டப்படியான அதிகாரங்களின் பிரகாரம் சுதந்திரமாக இயங்கவிடாமல் இந்த அரசாங்கம் தனது பிடிக்குள் வைத்திருக்கிறது. இந்த நிலையை உருவாக்கி அரசாங்கத்திடம் கையளித்தவர்கள் நமது முஸ்லிம்கள்தான் என்பது துரதிஷ்டவசமான மற்றுமொரு விடயமாகும். சுதந்திரமான சிவில் நிருவாக நடவடிக்கைகளுக்கு எதிராக இராணுவ இடையூறுகள் தொடர்கின்றன என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. பொத்துவில், திருகோணமலை மற்றும் வடக்குப் பிரதேசங்களில் இந்நிலைமை அவதானிக்கப் படுகின்றது.

சிறுபான்மை மக்களுக்கு விசுவாசமான எந்தவொரு அரசியல் கட்டமைப்பும் இருந்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது. இதன் விளைவை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமைச் சீரழிவு நிலை நிரூபிக்கின்றது.அடுத்த பக்கத்தில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கிறார்கள். இந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு நமது முஸ்லிம் அரசியல் வாதிகளில் சிலர் அரசாங்கத்தின் முகவர்களாக முன்நின்று உழைக்கிறார்கள்என்பது பெரும் துரதிஷ்டமாகும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்

இந்நிலையில்தான் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நம்மை எதிர் நோக்கியது. சிறுபான்மை மக்கள் எம்மோடுதான் இருக்கிறார்கள் என்பதை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலமாக சர்வதேசத்துக்குச் சொல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. ஏலவே சில முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தினுள் சங்கமமாகியிருந்தாலும் கூட முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தம்முடன் இணைத்துக் கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் எம்முடன்தான் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டது.

ஆனால் மறுபுறம் முஸ்லிம் சமூகமோ அரசாங்கத்தின் சிறுபான்மை விரோத போக்குகளை கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது எனும் நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. இருப்பினும் தேர்தலுக்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த இந்த உணர்வலைகளை முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணித்தே நடந்தது. பல தடவைகள் கட்சியின் உயர்பீடம் கூடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தாலும் கூட தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தான்தோன்றித்தனமாகவே முடிவுகளை எடுத்தார். தேர்தலில் அரசுடன் இணைந்து கேட்பதா? தனித்துக் கேட்பதா? எனும் இழுபறி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக கட்சியின் உயர்பீடத்தினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கூட அரசிடம் கையளிக்காது தலைவர் அதனை கிடப்பில் போட்டார். அதனை அரசிடம் கையளிக்கும் துணிவைக் கூட அவர் பெற்றிருக்கவில்லை.

இறுதிவரை அரசாங்கத்தின் சொற்கேட்டு நடக்கும் செல்லப்பிள்ளையாகவே ஹக்கீம் நடந்துகொண்டார். மு.கா. எவ்வாறேனும் அரசுடன் இணைந்துதான் தேர்தலில் போட்டியிடும் என்பது அத் தருணங்களில் வெளிப்படையாகத் தெரிந்தபோதிலும் இறுதிநேரத்தில் அம்பாறையில் தனது அரசியல் எதிரியான அதாவுல்லாவுக்கு ஒரு ஆசனத்தை அரசாங்கம் கூடுதலாக ஒதுக்கிவிட்டது என்ற அற்ப காரணத்திற்காக தமது கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார்.

துரதிஷ்டவசமாக அந்தத் தருணத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய எந்தவொரு பிரச்சினைகளையும் மு.கா. கருத்திற் கொள்ளவில்லை. அவற்றை முன்னிறுத்தி அரசுடன் பேரம்பேசல்களில் ஈடுபடவுமில்லை. முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அல்லது பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பலவற்றை வரலாற்றில் ஏற்கனவே தவறவிட்டதைப்போலவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முந்தைய இந்த வாய்ப்புக்களையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவற விட்டிருந்தது. அக் கட்சி எந்தளவு தூரம் மக்களின் நலன்களில் அக்கறையற்று நடந்துகொள்கிறது என்பதை அது மீண்டும் ஒரு முறை நிருபணமாக்கியது

அதுபோலவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வெளியிலிருக்கும் அதாவுல்லாஇ மற்றும் றிஸாட் அணியினர் கூட இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் நலன்களை வென்றெடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சகல அணியினரும் ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டிடுவதன்மூலம் முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமையை ஸ்தீரப்படுத்த வேண்டும் என உலமாக்களும் சிவில் சமூகத் தலைவர்களும் வலியுறுத்தி முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அதனையும் புறக்கணித்ததில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு அதிக பங்கிருக்கிறது.

தேர்தலில் தனித்துப் போட்டி

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் எனும் மக்களின் உணர்வை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. அரசாங்கத்தை எதிர்த்து நின்று தனித்துக் கேட்பதாக அறிவித்தது. தம்புள்ளை முதல் குருநாகல் வரையான பள்ளிவாசல் தாக்குதல் சம்பவங்களை தனது தேர்தல் சரக்காகப் பயன்படுத்தி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி ஈற்றில் வெற்றியும் கண்டது. முஸ்லிம் சமூகத்தின் பெரும் காவலனாகவே மு.கா. தேர்தல் பிரசாரங்களின்போது தன்னை மீண்டும் ஒரு முறை அடையாளப்படுத்தியது.

ஆனால் இவை எல்லாம் வெறும் தேர்தலுக்கான போலி வேஷங்கள் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எடுத்துச் சொல்லியிருந்தது. ஏலவே களத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவையுமே மக்களின் விசுவாசத்திற்குரியவை அல்ல என்று நாம் பலமுறை வலியுறுத்தினோம். மக்களுக்கு விசுவாசமான புதிய அரசியல் இயக்கம் ஒன்றே காலத்தின் தேவை என்பதையும் நாம் மிகத் தெளிவாக எமது பிரசாரங்களில் எடுத்துச் சொன்னோம்.

ஆனால் அவர்கள் மக்களை ஏமாற்றும் கலையை கைவரப் பெற்றவர்களல்லவா? அதனால் மக்களை மிகக் கவனமாக ஏமாற்றி வாக்குகளைப் பெற்றார்கள். நமது மக்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் கண்டார்கள்.

எதிர்பாராதவிதமாக தேர்தல் முடிவுகளின்படி கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய தனிப்பெரும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. இது முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு முறை கிடைத்த நல்லதொரு அரசியல் வாய்ப்பாகவே (Political Opportunity) தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் கருதப்பட்டது. ஆனால் முஸ்லிம் காங்கிரசோ அந்த தேர்தல் வெற்றியை அடகு வைத்து தமது அரசியல் பிழைப்புக்கும் கட்சியின் இருப்புக்காக எதையேனும் தேடிக் கொள்ளலாமா என்றே சிந்தித்தது.’முஸ்லிம்கள் தங்கத் தட்டைக் கொடுத்தார்கள். முஸ்லிம் காங்கிரசோ அதனை பிச்சை எடுக்கப் பயன்படுத்தியது’ என அப்போது ஓர் அரசியல் விமர்சகர் இதனை தத்ரூபமாக வர்ணித்திருந்தார். அந்தளவுக்கு மக்களின் ஆணைக்கு துரோகம் இழைக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் நடந்து கொண்டது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மூலம் முஸ்லிம் மக்கள் மிகத் தெளிவானதொரு செய்தியைச் சொல்லியிருந்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து செல்லக் கூடாது என்பதே மக்கள் சொன்ன தெளிவான செய்தியாகும். அரசாங்க பட்டியலில் போட்டியிட்டவர்களை மக்கள் நிராகரித்துவிட்டு மு.கா.வுக்கு வாக்களித்ததும் இந்த நோக்கத்திற்காகவே ஆகும்.

கிழக்கு மாகாண சபை என்பது அரசாங்கத்தின் பிடியில் இல்லாத தமிழ், முஸ்லிம் மக்களின் சுதந்திரமான குரலாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த விருப்பமாக இருந்தது. ஆனால் அந்த விருப்பங்களை புறந்தள்ளியே முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சியமைக்க அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. ஆகக் குறைந்தது தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பம் என்ன என்பதைக் கேட்டறிவதற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்து ஒரு கூட்டத்தையேனும் கூட்டுவதற்கு மு.கா. தலைமையோ உயர்பீடமோ முன்வரவில்லை இதன் மூலம் தமக்கு நம்பி வாக்களித்த மக்களின் உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மரியாதையேனும் கொடுப்பதற்கு இந்த கட்சி தயாராக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது.

மறுபுறம் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மு.கா.வுக்கு தொடர்ச்சியாக அழைப்புவிடுத்த வண்ணமே இருந்தது. ‘முதலமைச்சர் பதவியையும் இன்னும் பல அமைச்சர்களை உங்களுக்குத் தருகிறோம். நமக்கிடையே உள்ள பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம் வாருங்கள்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவுமே இறங்கி வந்து அழைப்பும் கொடுத்தது ஆனால் மு.கா. அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமக்கிடையில் பேசித் தீர்வு காண வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. மட்டுமன்றி தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து அரசாங்கத்துடனும் ஏனைய தரப்புகளுடனும் பேரம்பேச வேண்டிய விடயங்களும் இருக்கின்றன. அவ்வாறான பேச்சுவார்த்தைகளும்,  பேரம்பேசல்களுக்கும் மிகப்பொருத்தமான சந்தர்ப்பமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பு அமைந்திருந்தது. அவை எவற்றையுமே மு.கா. கருத்தில் கொள்ளவில்லை. தமிழ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வருவதாக நேரத்தை ஒதுக்கி கூட்டமைப்பை காத்திருக்கச் செய்துவிட்டு மு.கா. கட்சி தலைமறைவான சம்பவமானது எவ்வளவு தூரம் தமது மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய வாய்ப்பினை முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனப்படுத்தியது என்பது தெளிவாகிறது.

மு.கா. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாயின் தமது கட்சிக்கு முதலமைச்சர் பதவியைத் தர வேண்டும் எனும் நிபந்தனையை அரசாங்கத்திடம் ஆரம்பத்தில் முன்வைத்தது. ஆனாலும் அதற்கு அரசு உடன்படவில்லை. கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு மாத்திரமே அரசாங்கத்திற்கு அவசியப்பட்டதே ஒளிய முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை மதிக்கவோ அல்லது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவோ அரசாங்கம் தயாராக இல்லை.

இறுதியில் முதலமைச்சர் பதவியானது தனது கட்சியைச் சேர்ந்தவரோ அல்லது அதற்கு வெளியில் தலைமைத்துவத்திற்கு சவாலாக வரக்கூடிய ஒருவரோ அல்லது முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஆற்றலும், தகைமையும் கொண்ட எவருமோ அந்தப் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மு.கா. தலைமை கவனமாகவிருந்தது. அதன் காரணமாகவே மு.கா. தலைவரின் ஆசீர்வாதத்துடன் நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு மு.கா. ஆதரவு வழங்குவதாக முடிவெடுத்த தருணத்திலாவது முஸ்லிம் சமூகத்தின் மிகமுக்கியமான சில பிரச்சினைகள் குறித்தாவது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை எட்டுவதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு கூட அக் கட்சி ஆர்வம் காட்டவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் மு.கா. அரசாங்கத்துடனோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ உடன்பாட்டை எட்டுவதாக இருந்தால் எவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது.

அரசாங்கத்தின் தலையீடு இன்றி சுதந்திரமான முறையில் மாகாண சபையை நடத்திச் செல்வதற்கான அனுமதியைக் கேளுங்கள் என்று நாம் அதில் பிரதானமாக வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அவற்றைக் கூட மு.கா. கவனத்திலெடுக்கவில்லை. (இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையைப் பார்க்கவும்)

திவிநெகும சட்டமூலம்

இந்நிலையில்தான் புதிய கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்விலேயே திவிநெகும சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

‘திவிநெகும’ என்பது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட இல்லா தொழிக்கின்ற சட்டமூலம் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தபோதிலும்இ ஆகக் குறைந்தது இதுபற்றி ஆராய்வதற்கான கால அவகாசத்தையாவது தாருங்கள் எனக் கேட்பதற்கான துணிவைக் கூட மு.கா. கொண்டிருக்கவில்லை.

கடந்த மாகாண சபையில் நாடு நகர அபிவிருத்தி திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது அதன் பாரதூரத்தை அறிந்து அதனை பலமாக எதிர்த்த முன்னாள் முதலமைச்சருக்கு இருந்த தைரியம் கூட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு இருக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அரசாங்கத்திற்கு விசுவாசமான ஒருவராக இருந்தபோதிலும் தனது சமூகத்தைப் பாதிக்கும் சட்டமூலம் என்பதற்காக அதனை எதிர்த்து நிற்குமளவுக்கு தைரியத்தையும் சமூக உணர்வையும் கொண்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இந்த திவிநெகும விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் சமூக நலன்களைக் கருத்திற் கொள்ளாது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதை ஒரே நோக்காகக் கொண்டே சமூகப் பொறுப்பற்றவிதத்தில் செயற்பட்டன என்பதும் இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்கத்தக்கதாகும்.

திவிநெகும சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது அன்று காலையில் தாம் கால அவகாசத்தைக் கோரப்போவதாகச் சொன்ன மு.கா. பிரதிநிதிகள் பின்னர் மாலையில் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
கட்சித் தலைவர் வெளிநாட்டில் இருந்ததாகவும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு விரோதமாகவே கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகள் வாக்களித்ததாகவம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அச்சமயம் கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிக்கைவிட்டார். ஆனால் பின்னர் பாராளுமன்றத்தில் திவிநெகும சட்டமூலம் வாக்கெடுப்புக்கு வந்தபோது எவ்வித தயக்கமும் வெட்கமுமின்றி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு ஆதரவாக வாக்களித்தது. இதன்மூலம் திவி நெகும சட்டமூலம் தொடர்பில் சொல்லப்பட்ட அத்தனையுமே நாடகங்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதே சிறுபான்மை மக்களின் அரசியல் ரீதியான உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயாகும். அதன் அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கான அதிகார பரவலாக்கலை உத்தரவாதப்படுத்துவதற்கு இருக்கின்ற ஒரேயொரு ஏற்பாடு 13ஆம் திருத்தச் சட்டமேயாகும். 1987 ஆம் ஆண்டு முதல் 13ஆம் திருத்தச் சட்டம் இருக்கின்றபோதிலும் அது முறையாக அமுல்படுத்தப்படவில்லை. அவ்வாறு எழுத்திலேனும் இருக்கின்ற குறைந்தபட்ச உரிமைகளைக் கூட இல்லாமலாக்கும் வகையிலேயே திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

உயர்நீதிமன்றம் கூட திவிநெகும 13ஆம் திருத்தச் சட்டத்தை நேரடியாகப் பாதிக்கின்றது எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. அவ்வாறிருந்தும் நமது அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக அந்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவைக் கொண்டு கிழக்கு மாகாண சபை ஆட்சியை பிடித்துக்கொண்ட அரசாங்கம் அச்சபையின் முதலாவது கூட்ட அமர்விலேயே சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைக்கு எதிரான பிரேரனையைக் கொண்டு வந்தது. அரசாங்கத்தை எதிர்த்து கருத்துச் சொல்ல திராணியற்ற எமது முஸ்லிம் பிரதிநிதிகள் மக்களுக்கு விசுவாசமற்ற முறையில் திவிநெகும சட்டமூலத்தை அங்கிகரித்தார்கள்.

ஆக இன்று மாகாண சபை என்பது செல்லாக்காசான ஒன்றாகவே மாற்றம் பெற்றிருக்கிறது. அதன் மூலமாக சிறுபான்மை மக்களின் எந்தவொரு உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தமுடியாத நிலை தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றது.

எந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் மு.கா. உருவாக்கப்பட்டதோ அந்த உரிமைகளை அதே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அக்கட்சியிலிருந்து வளர்ந்து பின்னர் பிரிந்து சென்றவர்களும்இன்று தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள். இது நமது சமூகத்தின் அரசியல் வரலாற்றில் பாரிய துரதிஷ்டமாக எழுதப்படவேண்டிய ஒன்றாகும்.

பாராளுமன்றத்தில் திவிநெகும

கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூக்குரலிட்ட மு.கா.வின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் பாராளுமன்றத்தில் அச்சட்டமூலத்திற்கு ஆதரவளித்து வாக்களித்தனர். இதுவே அவர்கள் இந்த ஆண்டில் ஆடிய மிகப் பெரிய நாடகமாகும்.

இவ்வாறு ஆதரவளித்தமைக்குச் சொன்ன காரணம் தாம் திவிநெகும தொடர்பில் சில திருத்தங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும் அவற்றை சில மாதங்களில் உள்வாங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்பதாகும்.

ஆனால் உண்மை என்னவெனில் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வருவதற்கு முதல் நாளிலேயே மு.கா. தனது திருத்தங்களை பசில் ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தது. அதற்கு அவர் ‘நீங்கள் டூ லேட்’ எனப் பதிலளித்து அவர்களது திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

வரவு செலவுத் திட்டம் 2013

போர் முடிவுக்கு வந்தபிற்பாடு நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமானதொரு கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவு ரொக்கட் வேகத்தில் அதிகரித்ததன் காரணமாக மக்கள் அன்றாட வாழ்வுக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் வரவு செலவுத் திட்டம் என்பது நாட்டு மக்களின் பொருளாதாரச் சுமையை இறக்கி வைப்பதற்கான திட்டமாக இருக்க வேண்டுமே தவிர மக்களை மேலும் மேலும் சுமைகளுக்குள் தள்ளிவிடுவதாக அமைந்துவிடக் கூடாது.
துரதிஷ்டவசமாக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது ஆடம்பரக் கார்களுக்கான தீர்வையை இல்லாமலாக்கி கோடீஸ்வரர்களுக்கு சலுகையைக் கொடுத்ததே தவிர பாமர மக்களுக்கு எந்தவித நலன்களையும் கொண்டுவரவில்லை. இது இந்த நாட்டு மக்களின் முகத்தில் செருப்பால் அடித்ததற்கு ஒப்பானதாகும்.

ஆனாலும் நமது அரசியல்வாதிகள் இதுபற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை. ‘எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்ப்போம்…. ஆளும் கட்சியில் இருந்தால் ஆதரிப்போம்’ என்ற எழுதப்படாத அரசியல் விதிக்கொப்ப அவர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்கள்.

மட்டுமன்றி வரவு செலவுத்திட்ட விவாதத்துக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதற்குக் கூட நமது அரசியல் பிரதிநிதிகள் முயற்சிக்கவில்லை. வரவு செலவுத் திட்ட விவாத நேரத்தைப் பயன்படுத்தி ‘இது உண்னதமான பட்ஜட்’ என்று ஜனாதிபதியைத் துதிபாடி பாராளுமன்றில் கவிதை படித்தார்களே தவிர மக்களின் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தையேனும் வாய்திறக்கவில்லை.

குறித்த கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டும் இனவாதப் பிரச்சாரங்களும் முஸ்லிம்களின் வணக்கத் தலங்கள் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்த வண்ணமே இருந்தன.
ஆனால் அவை பற்றி எந்தவொரு முஸ்லிம் எம்.பி.யும் பாராளுமன்றில் வாய் திறக்கவில்லை. நமது முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கென ஒதுக்கப்படும் நிதி 35 மில்லியனில் இருந்து 15 மில்லியனாக இவ்வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டி பாராளுமன்றில் சஜித் பிரேமதாச உரையாற்றியபோது அஸ்வர் எம்.பி.யும் காதர் எம்.பி.யும் இடையூறு விளைவித்த கசப்பான வரலாறு மட்டுமே பட்ஜட் விவாதத்தின்போது பதிவுகளாக எஞ்சியிருக்கிறது.

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை விவகாரமானது உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் பாரிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருந்தது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கண்டனக் குரல்களும் ஓங்கி ஒலித்தன. ஆனாலும் நமது அரசியல்வாதிகளோ இதுபற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் விதமாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே பிரதம நீதியரசர் மீதான அரசாங்கத்தின் கோபத்திற்கு காரணமாக இருந்தது.

இன்னுமொரு வகையில் சொல்வதானால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கலை இல்லாமல் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்ததற்காகவே நீதியரசர் இத்தனை எதிர்ப்புக்களையும் சந்திக்க நேரிட்டது.

ஒரு ஜனநாயக நாட்டின் மூன்று தூண்களில் நீதித்துறையும் ஒன்றாகும். நிருவாகத் துறைக்கும் சட்டவாக்கத்துறைக்குமிடையில் முரண்பாடுகள் எழும்போது அதில் தலையிட்டு தீர்ப்புச் சொல்வது நீதித்துறையேயாகும்.
இதுவே பல்வேறு உலக நாடுகளிலும் வழக்கில் உள்ள ஒழுங்காகும். அவ்வாறுதான் இலங்கையிலும் மக்களின் இறுதி நம்பிக்கையாக இருந்தது நீதித்துறையேயாகும்.

ஆனால் இன்று அதே நீதித்துறையை அரசாங்கம் தனது அதிகார வெறியினால் சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. இங்கு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நீதித்துறையை சீர்குலைப்பதற்கு நமது வடகிழக்கு அரசியல் வாதிகள் அத்தனைபேருமே துணைபோயிருக்கிறார்கள் என்பதுதான்.

சிராணிக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணையில் நமது முஸ்லிம் எம்.பி.க்கள் 7 பேர் கையெழுத்திட்டிருந்தார்கள். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஏ.எச்.எம். அஸ்வர், ஹுனைஸ் பாரூக், எம்.எச்.எம். ஹரீஸ், அப்துல் காதர், ஏ.எல். அதாவுல்லா ஆகியோரே இவ்வாறு கையெழுத்திட்டவர்களாவர். அரசாங்கத்தின் நிகழ்சி நிரலுக்கு கட்டுப்பட மறுத்து நீதித் துறையின் சுதந்திரத்தை பேணும் உறுதியுடன் இயங்கிய முன்னாள் நீதியரசர் மீது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலவற்றை அரசாங்கம் சுமத்தியிருந்தது. செலிங்கோ வழக்கை கையாளுகின்ற நேரத்தில் அந்நிறுவனத்திடமிருந்து தொடர்மாடி வீடொன்றினை முன்னாள் நீதியரசர் விலைக்கு வாங்கினார் என்பது அந்தக் குற்றச்சாட்டில் ஒன்றாகும்.

இவ்விடயத்தில் முன்னாள் நீதியரசர் சட்டத்தை மீறும் வகையில் எதையும் செய்யவில்லை என்பது பின்னர் நிரூபனமானது. இதில் வேடிக்கை என்னவென்றால் நமது மக்கள் வழங்கிய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மனைவியின் பெயரில் ஒன்பது கோடி ரூபா சிலிங்கோ நிறுவனத்திடமிருந்து கடன் பெற்று நமது ஏழை மக்களின் பணத்தை மோசடி செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரும் நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தார் என்பதாகும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கையான நீதித்துறையையும் அதிகார வர்க்கத்தினரிடம் தாரைவார்ப்பதற்கு நமது அரசியல்வாதிகள் சோரம்போனமை முஸ்லிம் அரசியலின் சோக வரலாற்றில் எழுதவேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

மட்டுமன்றி பிரதம நீதியரசர் இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியதாகும். சாதாரண குற்றவாளிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச மரியாதையைக் கூட கொடுக்காது அவரை மிகக் கேவலமாகவே நடத்தியிருந்தார்கள்.

மறுபுறம் இதுவிடயத்தில் பாராளுமன்றில் உரை நிகழ்த்திய நீதியமைச்சர் ஹக்கீம், அண்மைக்காலமாக உயர்நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகள் அருவருக்கத்தக்கவையாக அமைந்திருந்தன எனக் குறிப்பிட்டிருந்தார். நீதியமைச்சராகவும் சிறுபான்மைக் கட்சி ஒன்றின் தலைவராகவும் இருக்கின்ற ஒருவர் அரசாங்கம் என்ன அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறானதொரு குற்றப்பிரேரணையைக் கொண்டுவருகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அருவருக்கத்தக்கவை எனக் குறைகூறுவதானது எவ்வளவு தூரம் அரசாங்கத்தின் முகவராக அவர் செயற்படுகிறார் என்பதை நிருபிப்பதாக இருந்தது. திவிநெகும சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்படும் சமுகத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை எதிர்த்து பாராளுமன்றில் பேசியிருக்க வேண்டிய ஹக்கீம், அச் சட்டமூலத்தை எதிர்த்த பிரதம நீதியரசருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தமையானது அவர் மக்களுக்காகவன்றி அரசாங்கத்திற்கே விசுவாசமாக இயங்குகின்றார் என்பதை நன்கு வெளிப்படுத்தி நிற்கிறது.

18ஆவது திருத்தச்சட்டத்திற்கு மு.கா. ஆதரவளித்ததன் மூலமாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இல்லதொழிக்கப்பட்டது. அதன்காரணமாகத்தான் இன்று மதவாத சக்திகள் நமக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிசாருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதிருக்கிறது. இறுதியான இந்த நாட்டில் நீதித்துறையேனும் சுதந்திரமாக இருந்தது. ஆனால் இன்று அதனையும் இல்லாமல் செய்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் துணை போயிருக்கிறார்கள்.

ஆக நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் நமது சமூகத்தின் உரிமைகளை இல்லாதொழிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக துணைபோகின்றார்களே தவிர அவற்றைப் பாதுகாப்பதற்கான எந்தவித ஆக்கபூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணையானது நீண்ட காலத்தில் தமிழ் முஸ்லிம் என்கின்ற சிறுபாண்மை சமூகங்களை எவ்வாறு பாதிக்கப்போகிறது எனும் பாரதூரத்தை அறியாதவர்களாக நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகமும் செயற்பட்டுக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும். இது நமது பிரச்சினையல்ல, ஜனாதிபதிக்கும் நீதியரசருக்குமிடையிலான பிரச்சினை என்றே மக்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது அவ்வாறு நமது மக்களை இந்த அரசியல் வாதிகள் நம்பவைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கெளுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள்

இந்த நாட்டில் சிறுபான்மையினரே கிடையாது எனும் ஜனாதிபதியின் கூற்றின் உள் அர்த்தத்தை மேலும் மெய்ப்படுத்தும் விதமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கு பௌத்த சக்திகளின் அண்மைக் கால செயற்பாடுகள் அமைந்துள்ளன.

2011 செப்டெம்பரில் அநுராதபுரத்தில் பழைமை வாய்ந்த தர்ஹா ஒன்று தகர்க்கப்பட்டது முதல் 2013 பெப்ரவரியில் காலி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.
அவற்றில் முக்கியமானவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

•    தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப் பள்ளிவாசலை அகற்றுமாறு தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்றமை

•    தெஹிவளை கல்விகாரை வீதியிலுள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தமை

•    குருநாகல் ஆரியசிங்களவத்தையில் உள்ள அமைந்துள்ள உமர் கத்தாப் குர்ஆன் மத்ரசாவில் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமை

•    தெஹிவளை பீரிஸ் மாவத்தை குர்ஆன் மத்ரசாவில் தொழுகை நடத்த வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் அங்கு தொழுகையை இடைநிறுத்துமாறு மத விவகார அமைச்சு கடிதம் அனுப்பியமை

•    குருநாகல் தெதுருஓயாகமவில் உள்ள தாருல் அக்ரம் தக்கியாவில் தொழுகை நடத்த வேண்டாம் எனக் கோரி பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தியமை

•    அநுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களை வெளியேறுமாறு வற்புறுத்தியமை

•    ராஜகிரிய ஒபேசேகரபுரவிலுள்ள ஜாமிஉத்தாருல் ஈமான் இஸ்லாமிய நிலையத்தில் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தொழுகை இடைநிறுத்தப்பட்டமை

•    வெல்லம்பிட்டி கொஹிலவத்தையில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்த இருவர் முஅத்தின் மீது தாக்குதல் நடத்தியமை

•    மஹரகம நாவின்ன ரஜமஹா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டம் ஒன்று இடம்பெற்றமை.

•    எம்பிலிப்பிட்டிய நகரில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்டதோடு அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டமை.

•    மஹரகம நோலிமிட் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை.

•    இலங்கையில் செயற்படும் முன்னணி 10 முஸ்லிம் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைப்பதாகவும் அவை பயங்கரவாதத்தைப் பரப்புவதாகவும் பொதுபல சேனா அமைப்பு குற்றம்சாட்டியமை.

•    குளியாபிட்டியவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் பன்றியின் உருவப் படத்தில் அல்லாஹ் என எழுதிய பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டமை.

•    வறக்காப்பொல கந்தளாய் மற்றும் வாரியபொல ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றமை.

•    குருநாகல் நாரம்மல ஹொரம்பாவ பகுதியில் அதிகாலையில் இரு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை.

•    நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டமை

•    மஹரகமவில் பொதுபல சேனாவினால் பாரியளவில் ஹலால் எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட்டதுடன் மார்ச் 31க்குள் ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்பட வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டமை.

•    ஹலால் சான்றிதழை சிங்கள புதுவருடத்திற்கு முன்னால் வாபஸ் வாங்காவிட்டால் பாரிய புரட்சி வெடிக்கும் என ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கைவிடுத்தமை.

•    காலி ஹிரும்புரை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்தமை.

பொது பல சேனா போன்ற அமைப்புக்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இத்தனை பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் பௌத்த பேரினவாத சக்திகள் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதிலும் அரசாங்கம் இதுவிடயத்தில் எந்தவித கரிசனையுமின்றி செயற்படுவது கவலைக்குரியதாகும்.

நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி முஸ்லிம் மக்களின் அடிப்படை மத உரிமைகளை மறுக்கும் வகையில் பௌத்த பேரினவாத சக்திகள் செயற்பட்ட போதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.

பொது பல சேன மற்றும் சிங்கள் ராவய போன்ற இனவாத சக்திகளின் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்கிறது என்பதனை அவர்களின் பாரபட்சமான இரட்டை நிலைப்பாடுகள் அம்பலப்படுத்துகின்றன.

பொது பல சேனா போன்ற அமைப்புக்களால் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக நடாத்தப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு அனுமதியும் புரண பாதுகாப்பு வழங்கும் பொலிசார் இது போன்ற இனவாத நடவடிக்கைகளை கண்டிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகின்றனர்.

உதாரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கண்டித்து துண்டுப்பிரசுரங்களை வினியோகித்த சம உரிமை இயக்கத்தினரை தடுத்து நிறுத்திய பொலிசார் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஹலால் பற்றிய விளக்கமளிப்பதற்காக முன் அனுமதியடன் அண்மையில் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கினை பொலிசார் பலாத்காரமாக தடுத்து நிறுத்தினர். காரணம் கேட்ட போது மேலிடத்து உத்தரவு என பதில் சொல்லியிருக்கின்றனர். இங்கு குறிப்பட்டு சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் ஹலால் விளக்க கருத்தரங்கு காத்தான்குடியில் தடுத்து நிறுத்தப்பட்ட அதே தினத்தில்தான் மஹரகமவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் கக்கும் பேரணியும் பொதுக்கூட்டமும் பொது பல சேனாவினால் நடாத்தப்பட்டது. இதற்கான முழு பாதுகாப்பையும் அனுமதியையும் பொலிஸார் வழங்கியதை அவதானிக்க முடிந்தது.

அது போலவே இந்த இனவாத நடவடிக்கைகளை பற்றி எதுவுமே பேசாமல் அரச ஊடகங்கள் அமைதி காக்கின்றன. ஆனாலும் இவற்றை கண்டித்து பேசிய மங்கள சமரவீர போன்ற அரசியல்வாதிகளை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை அரச தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் கச்சிதமாக செய்து வருகின்றன. மேலும் தலைநகரில் பாதைகள் மறிக்கப்பட்டு இனவாதப் பேரணிகள் நடாத்தப்படுவதற்கு அனுமதி அழிக்கும் பொலிசார் முன்னாள் நீதியரசர் சிராணி பண்டார்நாயக்க அவர்களை பேட்டிகாண்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம் என விரட்டி அடித்தனர். மேலும் இத்தனை சர்ச்சைகளை கிளப்பி வரும் பொது பல சேனா காரியாலயம் கூட பௌத்த சாசன அமைச்சின் கீழ் இயங்கும் கொழும்பிலுள்ள பௌத்த கலாச்சார கட்டடத்தில் அமைந்திருக்கிறது என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது.

மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல் சம்பவங்கள் பல (மேலே பட்டியலிடப்பட்டது போல) ஆதாரபூர்வமாகப் பதிவாகியுள்ள போதிலும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எவையுமே தாக்கப்படவில்லை என அரசாங்கம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. அதைவிடவும் வேதனை என்னவெனில் அரசாங்கத்தின் இந்த அறிக்கை தமது கரிசனையுடன்தான் தயாரிக்கப்பட்டது என தனித்துவக் கட்சியின் தலைவர் பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாகக் கூறுவதேயாகும்.

இத்தனை பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோதிலும் தமது மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்ட போதிலும் ஆளும்தரப்பு முஸ்லிம் எம்.பி.க்கள் எவருமே பாராளுமன்றத்தில் ஒரு நிமிடமேனும் வாய்திறந்து பேசாமலிருப்பதன் மர்மம் என்ன என்பதுதான் புரியாத புதிராகவிருக்கிறது.

நமக்காகப் பேச வேண்டிய முஸ்லிம் காங்கிரசும் தேசிய காங்கிரசும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும் மௌனமாக இருக்கையில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும்தான் நமக்காகக் குரல் கொடுத்தன. இது முஸ்லிம் அரசியலுக்கே மாபெரும் வெட்கக் கேடாகும். மட்டுமன்றி அவர்களின் உரைகளுக்கு இடையூறு விளைவித்து பேசவிடாது முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்தமை அதைவிடவும் வெட்கக் கேடானதாகும்.

சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்காகப் பேசியபோது அஸ்வர் எம்.பி.யும் காதர் எம்.பி.யும் அவரது உரைக்கு இடையூறு விளைவித்தார்கள். ரணில் விக்ரமசிங்க முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றியபோது அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறுக்கீடு செய்தார். பள்ளிவாயல்கள் எதுவும் இனவாத சக்திகளால் தாக்கப்படவில்லை என்று அரசாங்கம் பாராளுமன்றத்தில் உத்தயோகபுர்வமாக அறிவித்த வேளை முஸ்லிம் பெயர் தாங்கிகளான நமது அரசியல்வாதிகள் அத்தனை பேரும் மௌனமாக இருந்து அதனை அங்கிகரித்தனர் இதற்கு ஒரு படி மேலே சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசாங்கத்தினுடைய அறிக்கையை தயாரிப்பதற்கு தாமே உதவியதாகவும் தெரிவித்தார்.

இதுதான் முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் கைமாறாகும்.

எதிர்காலம் என்ன…?

எம்மை சூழ்ந்து வரும் இந்த நிலைமைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் அபாயகரமாக தோன்றுகிறது வடகிழக்குக்கு வெளியில் தான் இந்த இனவாத முன்னெடுப்புகள் தற்போது மையம் கொண்டிருந்தாலும் இவற்றின விளைவுகள் இலங்கை முஸ்லிம்கள் அத்தனை பேரையுமே பாதிக்கப்போகின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மட்டுமன்றி நாம் எல்லோரும் முஸ்லிம் உம்மத் என்ற கட்டமைப்பின் அங்கங்கள் என்ற வகையில் நாட்டின் ஒரு பகுதியில் நமது மக்கள் பாதிக்கப்படுகின்ற போது அவர்களுக்காக குரல் கொடுப்பதும் தோள் கொடுப்பதும் நமது சமுகக்கடமையும் மார்க்கக்கடமையுமாகும்.
 

கடந்த காலங்களில் வடகிழக்கு முஸ்லிம்கள் யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் நமது தென்னிலங்கை சகோதரர்கள் ஓடோடி வந்து நமக்காக செய்த உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். அந்த வகையில் தற்போது தென்னிலங்கையில் முஸ்லிம்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் நமது வடகிழக்கு முஸ்லிம்கள் காட்டுகின்ற கரிசனை போதுமானதாக இல்லை. எங்கோ வெளிநாட்டில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்ப்பது போன்றுதான் தென்னிலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இனவாத அச்சுறுத்தல்களை நாம் வெறும் செய்திகளாக பேசிவிட்டு மறந்து விடுகிறோம்.

அம்மக்களுக்கான கடமையினை நமது பிரதேச அரசியல்வாதிகள் செய்யத்தவறியிருப்பதையிட்டு கிழக்குப் பிரதேச முஸ்லிம் மக்களோ அல்லது சமூகத் தலைவர்களோ அவ்வளவாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கின் அரசியல் பலத்தின் தளம் கிழக்கு மாகாணமே என்பதன் அடிப்படையில் நாம் அத்தனை பேரும் இவ்விடயத்தில் தீவிர பங்களிப்பினைச் செய்தாகவேண்டும்.

வேகமாக வளர்ந்துவரும் இனத்துவேசத்தைக் கட்டுப்படுத்துவதில் அசமந்தப்போக்கினைக் காட்டும் அரசாங்கத்தையும் அதற்குத் துணைபோகும் நமது அரசியல்வாதிகளையும் கண்டிப்பதிலும் அழுத்தம் கொடுப்பதிலும் நாம் முன்னிற்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூகக் கட்டமைப்புக்கள் அனைத்தும் இதில் தீவிர பங்களிப்பினை நல்க வேண்டும்.

பயங்கரமான இச்சூழ்நிலைகளை தேசிய அளவில் கையாள்வதில் முஸ்லிம் கவுன்சிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் செய்துவரும் பங்களிப்புக்கள் மிகவும் பாராட்டத்தக்கதாகும். உண்மையில் சமூகத்தின் நன்மைக்காக தமது சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் இவர்கள் தமது பங்களிப்பைச் செய்துவருகிறார்கள் என்பது போற்றப்படவேண்டிய விடயமாகும்.
கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு அவசியமான பலத்தை வழங்கியது நமது முஸ்லிம் கட்சிகள் என்ற அடிப்படையில் வகையில் அந்த பலம் இவ்விடயத்தில் முழுமையாகப் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். பெயரளவிலான பிரேரணையொன்றை மாத்திரம் நிறைவேற்றுவது மாத்திரம் இதற்குப் போதுமானதல்ல.

இனவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திஇ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற கடமையை அரசாங்கம் உடனடியாகச் செய்யாவிட்டால் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டி வருமென நமது முஸ்லிம் கட்சிகள் பிரகடணமொன்றைச் செய்திருக்குமானால் அது கடுமையான அதிர்வுகளை அரசாங்கத்திலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்தியிருக்கும். சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது குவிந்திருக்கும் இத்தருணத்தில் உடனடித் தீர்வு நடவடிக்கைகளை மெற்கொள்ளவேண்டிய கட்டாயத்தினை அது ஏற்படுத்தியிருக்கும். இதற்கான வாய்ப்பை நமது முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தவறவிட்டுவிட்டார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொண்டு நம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு புதிய அணுகுமுறையொன்று தேவைப்படுகின்றது. நமக்கென்று இருக்கின்ற அரசியல் பலமும் கூட செல்லாக்காசாகிவிட்ட நிலையில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்தஇ ஓரணிப்படுத்திய ஒரு புதிய அணுகுமுறை பற்றி சிந்திக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.

அரசியல் தரப்புக்கள், மார்க்கத் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள், துறைசார் புத்தி ஜீவிகள் என அத்தனை பேரையும் பிராந்திய ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் ஒருங்கிணைத்து ஓரணிப்படுத்திய புதிய தலைமைத்துவக் கட்டமைப்பொன்று முஸ்லிம்களுக்கு அவசியப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களின் சகல விவகாரங்களையும் நிதானமாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டு உரியவர்களைக் கொண்டு அவற்றை அமுல்படுத்தக்கூடியதொரு சமூக அங்கிகாரம் மிக்க கட்டமைப்பாக இது உருவாக்கப்படல் வேண்டும். இதற்கான முயற்சிகளை நாம் உடனடியாக மேற்கொண்டேயாக வேண்டும்.

சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட அத்தனை பேருமே சிந்திக்கவேண்டிய, செயற்படவேண்டிய முதன்மைக் கடமையாக இன்றைய நெருக்கடியயன சூழ்நிலையில் இதுவே இருக்கின்றது.

Published by

Leave a comment