தமிழகத்தின் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு வெளியாகி இருப்பதாகவும் அதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை அணுசக்தி அதிகார சபை முழுமையாக நிராகரித்துள்ளது. இது வெறுமனே கட்டுக்கதை எனவும் இன்னும் இயங்க ஆரம்பிக்காத அணு மின் நிலையத்தில் இருந்து எவ்வாறு கதிர் வீச்சுக்கசிவு ஏற்பட முடியும் என அணு சக்தி அதிகார சபைத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜேவர்தன கேள்வி எழுப்பினார்.
கடந்த 27 ஆம் திகதி முதல் கூடங்குளம் அணு உலையில் இருந்து அணுக் கசிவு ஏற்பட்டு வருவதாக அணு சக்தி நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக வினவியதற்கு பதில் தெரிவித்த கலாநிதி ரஞ்சித் விஜேவர்தன, மக்களைப் பயமுறுத்தவே இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாகவே கூடங்குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இங்கு இன்னும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் கதிர்வீச்சு வெளியாக எந்த வாய்ப்பும் இல்லை. அவ்வாறு கதிர்வீச்சு வெளியாகியிருந்தால் அது குறித்து இந்திய அணுசக்தி நிலையத்திற்கோ சர்வதேச அணுசக்தி அதிகார சபைக்கோ தெரிந்திருக்கும். இது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. ஏதும் கசிவு நடந்திருந்தால் சர்வதேச உடன்பாடுகளின் பிரகாரம் இந்தியா எமக்கு அறிவுறுத்த வேண்டும்.
இது தவிர கதீர் வீச்சுக் கசிவு ஏற்பட்டிருந்தால் இலங்கையை சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பில் அது பதிவாகும். அவ்வாறு எந்த எச்சரிக்கையும் இடம்பெறவில்லை.
இதேவேளை கதிர்வீச்சுக் கசிவு ஏதும் இடம்பெற்றால் அதற்கு முகம் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து இது தொடர்பில் முன்னெச்சரிக்கை வழங்கப்படும்.
பாரிய கதிர்வீச்சு கசிவு நிகழ்ந்தால் அதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முகம் கொடுக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றார்.
இதேவேளை, கதிர்வீச்சுக் கசிவு தொடர்பான குற்றச்சாட்டை தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சர் மறுத்துள்ளார். ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்தால் அது குறித்து அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
– தினகரன்
Leave a comment