இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
முஸ்லிம்கடைகள், சிங்களப் பெண்களை மலடாக்கும் ஒரு ரகசியப் பொருள் கலக்கப்பட்ட மிட்டாய்களை விற்பதாகக்கூட சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஆலோசகராக இருந்த ஹரிம் பீரிஸ், இந்தப் பிரச்சாரத்தை, 1930களில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார்.
பொதுபலசேனா அமைப்பை அரசாங்க அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்றபோதிலும், அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள ஒருசில தரப்புக்களில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
பள்ளிவாசல் மீது தாக்குதல்
இதற்கிடையே கேகாலை மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
கேகாலை நகரில் இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினர், இந்த நகரின் பிரதான மசூதியை கல்லெறிந்து தாக்கியிருக்கின்றனர் என்று பொலிசார் கூறினர்.
இலங்கையில் முஸ்லீம் மற்றும் கிறித்தவ வழிபாட்டிடங்கள் சமீப காலங்களில் இது போன்றே தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. இதைச் செய்தவர்கள் புத்தமத கடும்போக்குவாதிகள் என்று தோன்றுகிறது. இவர்கள் இலங்கையின் சிங்கள பௌத்தமதத் தன்மையை வலியுறுத்துகிறார்கள். மேலும், சிறுபான்மையினர் நாட்டின் பெரும்பான்மை இனத்தையும், அவர்களின் அடையாளத்தையும் அச்சுறுத்தக்கூடாது என்றும் கூறிவருகிறார்கள்.
-BBC

Leave a comment