கலாநிதி ஹஸன் மெளலானா
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இந்நாட்டுக்கும், இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் ஆற்றிவரும் சேவைகளை எவரும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்று ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இஸ்லாம் மனித ஆரோக்கியத்திற்கு உகப்பான உணவுப் பொருட்களையே உண்பதற்கு அங்கீகாரம் (ஹலால்) வழங்கி இருக்கின்றது. அதேநேரம் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களையே தடை (ஹறாம்) செய்திருக்கின்றது.
இவை இரண்டுக்குமிடைப்பட்ட நிறையப் பொருட்கள் உள்ளன. அவை தொடர்பாக சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு உண்பதற்கும் பாவிப்பதற்கும் பொருத்தமான பொருட்களுக்கு உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்குகின்றது. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கும், இதர சமூகங்களுக்கும் சிறந்த சேவை கிடைக்கப் பெறுகின்றது. அத்தோடு உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கை உற்பத்திகளை மனத்திருப்தியோடு பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனை எவரும் மறுக்க முடியாது.
இவ்வாறான நிலையில் உலமா சபையின் இச் சேவைக்கு சிலர் எதிர்க்குரல் எழுப்புகின்றனர் அவர்களுடன் இணைந்து கொண்டவர்கள் போன்று உலமா சபையின் சேவையை விமர்சிப்பது கவலை தரக்கூடியதாக உள்ளது.
கடந்தவருடம் ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது அமெரிக்கா இலங்கைக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டு வந்தது. அப்பிரேரணைக்கு எதிராக ஜெனீவா சென்று எட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பெற்றுக்கொடுத்து இந்நாட்டு முஸ்லிம்களின் ஒருமித்த நாட்டுப்பற்றை மீண்டும் ஒரு தடவை பகிரங்கப்படுத்திக் காட்டியது. அத்தோடு இரு நாடுகளை நடுநிலைமை வகிக்கவும் செய்தது. இதேபோல் தேவைப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாயகத்தின் மீதான அன்பையும் பற்றையும் வெளிப்படுத்த இந்நாட்டு உலமா சபையும், முஸ்லிம்களும் ஒருபோதும் பின்நின்றது கிடையாது. இந்நிறுவனம் ஒரு பக்க சார்பற்ற நிறுவனம்.
இவ்வாறான சூழலில் ஹலால் சான்றிதழ் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கும், ஐயங்களுக்கும் உலமா சபையினர் மிகத் தெளிவான முறையில் உரிய நேர காலத்தில் பதில்களை அளித்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களது சேவையை விமர்சிப்பது கவலை தரக்கூடியதாக உள்ளது. அவர்கள் எவரும் கடைக்குச் செல்பவர்கள் அல்லர்.
ஹலால் சின்னம் இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கும் ஒன்றல்ல. இச்சின்னம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளில் கூடப் பயன்படுத்தப்படுகின்றது.
ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விரும்பியவர் வாங்கலாம். விரும்பாதவர் வாங்காது விடலாம். அது அவரவருக்குரிய உரிமை என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.
ஆகவே மூன்று தசாப்த காலமாக நாட்டில் தலைவிரித்தாடிய குரூர பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அச்சம் பீதியின்றி சமாதானமாகவும், அமைதியாகவும் வாழக் கூடிய சூழலை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டுக்கு பெற்றுத் தந்திருக்கின்றார். இதனைக் குழப்பி அற்ப அரசியல் இலாபம் பெறுவதற்குச் சில தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-தினகரன்
Leave a comment