வெப்தளத்தில் எனது பெயர் தாங்கி வந்த செய்திக்கு மறுப்பு !

‘அமைச்சர் பஷீர் சேகுதாவூத்துடன் ஒரு செவ்வி’ என்ற தலைப்பில் ஏ.எச்.ஏ. ஹுஸைன் என்ற எனது பெயரைத் தாங்கிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக சகோதர ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் எனக்கு இன்று (24.02.2013) தெரியப்படுத்தினார்.

அதனை தங்களது வெப்தளத்தில் தேடியபோது அவ்வாறே எனது பெயருடன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தை நேர்காணல் செய்திருந்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

எனது செய்தித்துறை வரலாற்றில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான விடயங்களையோ, கற்பனை கலந்தவற்றையோ, தேசிய மற்றும் சமூக நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த விடயத்தையுமோ நான் எழுதி வெளியிட்டதில்லை. அத்தோடு இனங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் விடயங்களை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஓவ்வொரு விடயத்தையும் எழுத முன்பு நின்று நிதானித்து ஆணித்தரமானவற்றையே செய்தியாகவும் கட்டுரைகளாகவும் எழுதி வெளிக்கொண்டு வந்திருக்கின்றேன். நான் எனது ஊடகத்துறை வரலாற்றில் அரசியல், மத, இன, மொழி அடிப்படையிலான காழ்ப்புணர்ச்சிகளைக் கொண்டிருந்ததில்லை.

 
மேற்படி இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் என்னையும் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களையும் சிண்டு முடிந்து விடுவதற்கும் எனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கும் யாரோ ஈனத்தனமானவர்கள் முயற்சி செய்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்தச் செய்தி மொஹமட் ஹுஸைன் husainkky@gmail.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இதனை வெளியிட முன்னர் நீங்கள் ஒப்பு நோக்கி உறுதிப்படுத்தியிருக்கவும் வேண்டும்.

இந்தச் செய்தியால் விளையக் கூடிய ஏதேனும் பாதகங்களுக்கு நான் பொறுப்பல்ல என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதோடு எனது மறுப்பை வெளியிடுமாறும் எனது பெயர் தாங்கி வெளி வந்திருக்கும் அந்தச் செய்தியை தங்களது வெப் தளத்திலிருந்து உடனடியாக அகற்றி விடுமாறும் தங்களை வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன். ஊடகவியலாளர். 25.02.2013

குறித்த செய்தியின் பெயர் மாற்றத்திற்கும் இச்செய்தியால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சகோதரர், ஊடகவியலாளர் A.H.A. ஹூஸைன் அவர்களுக்கும் எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குனர்.

Published by

Leave a comment