பஸ், ரயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் தொழிலை ஒழுங்குபடுத்த அடையாள அட்டை, சீருடைகள்

SRI LANKA MAY 09 024[1]பஸ் மற்றும் ரயில்களில் ஏறி வியாபாரம் செய்யும் 2500 வியாபாரிகளினதும் தொழிலை ஒழுங்குமுறைக்குட்படுத்தும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அவர்களுக்கு விசேட அடையாள அட்டை மற்றும் சீருடைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைவாகவே அரசாங்கம் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.

பஸ் மற்றும் ரயில் பயணிகளை நம்பி தமது தொழிலை ஆரம்பிக்கும் வியாபாரிகள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இவற்றுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இத்தொழிலை ஒழுங்குமுறைக்குட்பட்டதாக மாற்றியமைக்கவுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்க மவும் தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவும் பொருளாதார அபிவிருத்தியமைச்சுடன் இணைந்து இதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடுமுழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 வியாபாரிகள் பஸ் மற்றும் ரயில் பயணிகளை நம்பி சேவை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

இவர்களின் குடும்ப அங்கத்தவர்களுள் சுமார் 17 ஆயிரத்து 500 பேர் நேரடியாகவும் 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் மேற்படி வியாபாரிகளின் ஊதியத்தை நம்பி வாழ்கின்றனர்.

இவை குறித்து நன்கு ஆராய்ந்ததன் பின்னரே இவ்வியாபாரிகள் காலம் காலமாக மேற்கொண்டு வரும் இந்த தொழிலை ஒழுங்குமுறைக்குட்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

– தினகரன்

Published by

Leave a comment