பொது பல சேனாவும் இலங்கை முஸ்லிம்களும்..

-MJ

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக சூழ்ந்திருந்த இனவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவரும் இன்றைய இலங்கையில், பேரினவாதத்தின் மற்றுமொரு கலவரம் முஸ்லிம்கள் மீது விரைவில் மேற்கொள்ளப்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலை தற்பொழுது தோன்றி இருக்கின்றது.

இல்லை! அப்படியொன்றுமில்லை..!! எனும் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதாக எமது நிலைப்பாடு இருந்து வந்தாலும், இப்பேரினவாத பொது பல சேனாவின் பின்னணியில் பல அரசியல் செல்வாக்குகள் இருந்து வருவதாக நம்பப்படுகிறது.

சமாதான இலங்கை, முஸ்லிம் ஒற்றுமை எனும் கோட்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இலங்கையில் காய்நகர்த்தி வந்தாலும், ‘குழந்தையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும்’ ஓர் இரட்டை தந்திரோபாய வேசத்தை கச்சிதமாக நகர்த்தி வருகின்றது.

ஏனெனில், இலங்கைக்கு பல வகையிலும் அந்நியச் செலாவணியை பெற்றுத் தரக்கூடிய மத்திய கிழக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை அரபுலகத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கையில் முஸ்லிம்கள் சமாதானமாகவும் பிரச்சினையின்றியும் வாழ்கின்றனர் என்பதையும் அரபுலகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

இதே போல் இலங்கைக்கு மேற்குலகத்தில் இருக்கும் யுத்த்திற்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இன்றியமையாதவை.

இதன் இன்னுமொரு கட்டமாக இஸ்ரேலுடனான நேரடி அல்லது மறைமுகமான ஒப்பந்தம், இஸ்ரேலை இலங்கையில் காலூன்றுவதற்குரிய ஏற்பாடுகள் போன்றனவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.

அரசாங்கத்தை குறை கூறுவதற்கு முன்னர் அல்லது அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு முன்னர் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், முஸ்லிம்களின் செயற்பாடுகளையும் அதன் நியாயங்களையும் சரி சமமாக எடுத்துப்பார்க்க வேண்டும்.

1. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

முஸ்லிம்கள் சார்பாக உரிமையைப் பெறுவதற்காச் சென்றுள்ள எமது முழு, அரை அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை பொது பல சேனாவின் முஸ்லிம்கள் மீதான உரிமை பறிமுதலுக்கு எந்த எதிர்ப்பையும் கண்டணத்தையும் வெளியிடவில்லை!
இது சம்பந்தமான விரிவான ஆக்கம் ஏற்கனவே நாம் பிரசுரித்திருந்தோம்.

2. இரட்டை வேடம்:

பொது பல சேனாவுக்கு அரசாங்க ஆதரவுகள் பல பக்கத்திலும் இருந்து வருகின்றன. உண்மையில் இவை எதிர்க்கட்சிகளின் ஏற்பாடுகளாக இருப்பின், எந்த தங்கு தடையுமின்றி எமது அமைச்சர்கள் எகிரி குதித்து கண்டங்களை தெரிவித்திருப்பார்கள். தம்புள்ளை பள்ளிவாயல் விடயத்தில் எப்படி எமது முஸ்லிம் அமைச்சர்களின் வாய்களுக்கு பூட்டுப் போடப்பட்டதோ, அவ்வாறே ஹலால் எதிர்ப்பின் மூலம் உதயம் பெற்றுள்ள பொது பல சேனாவுக்கு எதிராக வாய் திறக்க எமது முஸ்லிம் அமைச்சர்ளுக்கு பூட்டுப் போடப்பட்டிருக்கின்றது.

3. முஸ்லிம்களின் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும்:

சிங்கள, ஆங்கில மொழிகளில் வெளிவரும் இலங்கை மற்றும் உலக நாடுகளின் முஸ்லிம் ஊடகங்களில் வெளிவரும் அந்நிய மக்களுக்கெதிரான மனக் கசப்புக்கள்:

 கொகா கோலா, கே.எப்.சி. இவை போன்ற அமெரிக்கா தயாரிப்புக்களை பகிரங்கமாக எதிர்த்து, அவற்றை நுகர்வதிலிருந்தும் முஸ்லிம்களைத் தடுப்பதற்கான விளம்பரங்களும், ஹராம் எனும் பத்வாக்களும், நிராகரிப்பதற்கான உந்துகோல்களும்.

10 வீதத்துக்கும் குறைவான இன விகிதாசாரத்தில் பெரும்பான்மை மத்தியில் வாழும் நாம் எங்களுக்கு ஹராம் எது? ஹலால் எது? என்பது பள்ளிவாயல் தோரும், மத்ரஸாக்கள், இஸ்லாமிய பாடக்கல்வி மூலமாக தெட்டத் தெளிவாக நாம் தெரிந்து கொண்ட விடயங்கள். இதனால்தான் பல நூற்றாண்டுகளாக எமது முஸ்லிம்கள் தங்கு தடையின்றி மாட்டிறைச்சி விற்பதற்கும் நுகர்வதற்கும் மற்றும் ஹலால் உணவுகளை தங்குதடையின்றி நுகர்வதற்கும் உண்பதற்கும் இந்நாட்டில் அனுமதிக்கப்பட்டு வந்தோம்.

ஒரு கிரிக்கட் போட்டிக்கு குறிப்பாக இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட்போட்டிக்கு நாட்டுப்பற்று எனும் மாயையில் எமது நாட்டின் உரிமைகளை மதிக்கும் நாங்கள், குறித்த போட்டி முடிந்ததும் மீண்டும் இந்நாட்டை எதிர்க்க ஆரம்பிக்கின்றோம்.
ஏனெனில் ஓர் விடயத்தை முஸ்லிம்களுக்கு சொல்வதற்கு ஒரு விதம் இருக்கின்றது. அதனை அந்நிய மக்கள் மத்தியில் சொல்வதற்கு இன்னொரு விதம் இருக்கின்றது.

அன்னிய கலாச்சாரங்களையும், மேலைத்தேய கொண்டாட்டங்களையும், அவர்களின் உணவு வகைகளை கொள்வனவு செய்வதிலும் இந்நாட்டின் பேரின மக்களுக்கும் சுதந்திரம், ஆர்வம்; இருக்கின்றது.

இவ்வாறிருக்க, மேலைத்தேய கலாச்சாரங்களையும், அவர்களின் உணவுகளையும் ஹராம் என்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக நாம் ‘செயார்’ பண்ணுவதற்கு முன், ஓர் கட்டுரையை எழுதுவதற்கு முன், நாம் வாழும் இலங்கை நாட்டையும் எமக்கிருக்கும் சிங்கள, தமிழ் நண்பர்களையும் ஒரு கணம் யோசிக்க வேண்டும். நாங்கள் வெளியிடும் ஓர் ஆக்கம் அல்லது ஓர் புகைப்படம் இந்நாட்டில் வாழும் அந்நிய சமூகத்தினை பாதிக்குமா? என்பதையும் முதலில் சிந்திக்க வேண்டும்

இவ்வாறு முஸ்லிம் ஊடகங்களும், சமூக வலைத்தள முஸ்லிம்களும் இஸ்லாத்தை தீவிரப்படுத்தி விளம்பரப்படுத்துவதால், ஏனைய சமூகத்தினரும் அவர்களது சமயங்களை தீவிரமாப் பரப்ப, ஓர் பௌத்த நாட்டில் கால் ஊன்றி நிலைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பொது பல சேனா அமைப்பின் உதயத்துக்கு சமூச வலைத்தளங்களே அத்திவாரமிட்டன என்பதையும் மறக்க முடியாது!

4. நில அமைப்பு:

நாம் நூறு வீதம் முஸ்லிம்களைக் கொண்ட காத்தான்குடியில் இருந்து கொண்டு பொது பல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டிப்பதிலும் எதிர்ப்பதிலும் பார்க்க, சிங்கள பெரும்பான்மை ஊரில் வாழும் சிறுபான்மை முஸ்லிமாக இவ்விடயத்தை நோக்க வேண்டும்.

உதாரணமாக இரத்தினபுரியில் வாழும் முஸ்லிம்களின் நில அமைப்பு எவ்வாற இருக்கும்.

ஒரு ஜூம்ஆ பள்ளி, அதன் அருகில் பேரினத்தவரின் கடைகள், பின் பக்கத்தில் பன்சாலை, அதன் பின்னர் சிங்கள மகா வித்தியாலயம், சூழ்ந்துவர பேரினத்தவரின் வீடுகளுக்கிடையில் ஓர் முஸ்லிமின் வீடும், பன்சாலைக் கிணற்றிலும் அதன் வழியாக வரும் ஆற்றில் நீர் அள்ளி பாவனைக்கு உட்படுத்தும் முஸ்லிம்கள்…… இப்படி ஒவ்வொரு ஊரையும் வைத்து நாங்கள் இந்நாட்டில் அனைத்து மதத்தவரையும் வைத்து பொது அடிப்படையில் யோசிக்க வேண்டும்.

இப்பிரச்சினை ஓர் பாரிய அளவில் பல செல்வாக்குகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால்தான் அரசாங்கம், எமது முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் வாய் மூடி இருக்கின்றனர்.

எனவே பெரும்பான்மை முஸ்லிம் ஊர்களில் வாழும் முஸ்லிம்கள் மிக நிதானத்துடன் பொது பல சேனாவின் செயற்பாடுகளை அவதானித்து இலங்கை முஸ்லிம்களுக்கு உரிய பொதுவான அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் குறித்த அமைப்புடன் நேரில் பேசி எமது உரிமையை விட்டுக்கொடுக்காமல் உரிமைகளுக்காக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை நாம் தெளிவு படுத்துகிறோம்.

என்னதான் இருந்தாலும் நாங்கள் அரபு நாட்டில் வாழ்பவர்களோ அல்லது ஓர் இஸ்லாமிய நாட்டில் வாழ்பவர்களோ அல்ல என்பதை முதலில் மனதில் நிலை நிறுத்த வேண்டும்.

Published by

Leave a comment