ஏன் இந்த மௌனம்??

-Special Report:

silenceசமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கப்போவதாக மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்து, அம்மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கும் எமது முஸ்லிம் அமைச்சர்கள், இலங்கையின்  முஸ்லிம்களின் இருப்புக்கும், முஸ்லிம்களின் உரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில், இவைகளைக் கண்டித்து ஓர் வார்த்தையையாவது கூற முடியாத இம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள், வாய் திறக்காமல் இருப்பதும் ஓர் உரிமையற்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இலங்கையில் இருப்பது தெட்டத் தெளிவாகின்றது. உண்மையே!

தம்புள்ளை பள்ளிவாயல் விடயமே இந்நாட்டில் தற்பொழுது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்நூற்றாண்டுக்கான அச்சுறுத்தலின் ஆரம்பமாக இருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்துக்கு மேலைத்தேய அழுத்தங்கள் வந்தபோது, அரசாங்கத்துக்கு கைகொடுத்த முஸ்லிம்களையும் அரபு நாடுகளையும் மறக்க முடியாது.

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பேரினவாத சமகால பிரச்சினைக்குரிய அமைப்பான பொது பலசேனாவுடன் சுமார் இருவாரங்களுக்கு முன்னர் தனது அலுவலகத்திற்கு அழைத்து, தாங்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக ஹலால் உணவுகளை எதிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதற்கும், சமாதானமாக இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவும் குறித்த அமைப்புடன் பேசி இருந்தார்.

இவ்வருடம் திருகோணமலையில் இடம்பெற்ற 65வது சுதந்திர தின விழாவில் கூட ஜனாதிபதி அவர்கள் தமிழிலும் உரையாடி, இந்நாட்டின் பல்லின சமூகத்தின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் இவை அனைத்தும் நடந்து முடிந்த இருவாரத்துக்குள் நேற்று மகரகமையில் பொது பலசேன அமைப்பின் முஸ்லிம்களுக்கு எதிரான மற்றுமொரு குறிப்பாக ஹலால் எதிர்ப்புப் போராட்டம் பகிரங்கமாக இடம்பெற்றது.

இலங்கைக்கு மேற்குலகில் ஏற்பட்டிருந்த அழுத்தத்தைத் தவிர்க்க, அமைச்சர் அலவி மௌலானா தரப்பில் இலங்கை காதிரிய்யா அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கொழும்பில் அரசுக்கு ஆதரவாக ஆதரவுப் பேரணியை ஏற்பாடு செய்தனர். இதேபோல், தௌஹீத் ஜமாஅத் மற்றும் குறிப்பிட்ட முஸ்லிம் ஊர்களிலும் பொதுமக்கள் இணைந்து மேற்குலகுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை பிரதமர் கூட சென்றவாரம் ஹலால் உணவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அகில இலங்கை ஜம்மிய்த்துல் உலமா, பொது பல சேன அமைப்புடன்  நேரடியாக பேசுவதற்கும், ஹலால் பற்றிய தெளிவான விளக்கத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கும் எந்த முஸ்லிம் முழு, அரை அமைச்சர்களும், பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதுவரை பலசேன அமைப்பின் ஹலால் ஒழிப்புக்கு எதிராக வாய் திறக்கவில்லை!

இதனால்தான் இந்த அமைப்பு தொடர்ந்தும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை ஆங்காங்கே ஏற்படுத்தி வருகின்றது. இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் நேற்று மஹரகமையில இடம்பெற்ற ஹலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கிலும் பௌத்த பிக்குகளும், இவ்வமைப்பின் உறுப்பினர்களும், பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டதானது, இலங்கை முஸ்லிம்களின் எதிர்கால உரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அச்சங்கொள்ள வைக்கின்றது.

தற்பொழுது பொது பலசேனாவின் ஆர்ப்பாட்டமானது ஹலால் ஒழிப்புக்கான ஓர் போராட்டமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இத்திட்டம் அவர்களுக்கு வெற்றியளிக்குமானால்…..எங்களிடத்தில் இருக்கும் ஏனைய உரிமைகளைப் பறித்தெடுக்க இவ்வாறான போராட்டங்கள் அவர்களுக்குத் தேவைப்படாது எனும் கசப்பான உண்மையையும் நாம் இங்கு உணர முடிகின்றது.

எனவே முஸ்லிம்களின் நற்பண்புகளை அறியாமல், சில விசமிகளால் தூண்டப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பொது பல சேனாவுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதையும், இனிமேலும் இவ்வாறான முஸ்லிம்களையும், இந்நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை மக்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ வழி திறக்கப்பட வேண்டும்.

இலங்கை நாட்டில் அதிமேதகு  எனும் தகுதிக்குரியவர் ஜனாதிபதியே! இருந்தும் வணக்கம் எனும் அவர்களின் சமய அனுஷ்டாணங்களின்படி அதிமேதகு தகுதியைப் பெற்றிருப்பினும், பௌத்த பிக்குகளுக்கு தலைசாய்த்தே ஆக வேண்டும். இவ்வாறிருக்க எப்படி ஓர் பொலிஸ் வீரர் அல்லது பாதுகாப்புப் படையினர் இவர்களின் போரட்டங்களைத் தடுத்து நிறுத்த அல்லது கைது செய்ய முடியும்? என்பதும் அடுத்த கேள்வி எழுகின்றது.

இவற்றுக்கெல்லாம் மருந்து எங்கள் சமூகத்தின் ஒற்றுமையே.

எனவே ஓர் சமூகத்தின் உரிமையைப் பெற்றெடுக்கப் புறப்பட்ட போராளிகளும், பிரதிநிதிகளும் இத்தருணத்தில் மென்மேலும் மௌனம் காப்பதானது, எம் சமூகத்துக்கு எதிராக தற்பொழுது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பொது பல சேனவுக்கு இவ்வளவு காலமும் இலங்கை மண்ணில் கட்டிக் காத்துவந்த எங்கள் உரிமை எனும் கோட்டைக் ககதவைத் தாங்களாகவே திறந்துவிட்டதாகப் போய்விடும்!!

Published by

Leave a comment