இஸ்லாம் அனுமதித்த முறையில் பிராணிகளை உணவாகக் கொள்வோம்

மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானவற்றுள் உணவும் ஒன்று. இந்த உணவு மூன்று வழிகளில் பெறப்படுகின்றன.

1. நிலத்தின் பாகங்கள்,

2. தாவரங்கள்,

3. பிராணிகள். இம்மூவகை உணவுகளில் மூன்றாம் வகையான பிராணிகளை பொறுத்தளவில் அவற்றை உற்கொள்வதற்கு சத்திய இஸ்லாம் மார்க்கம் அனுமதித்துள்ள பிராணிகளை மட்டுமே அதுவும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் முஸ்லிம்கள் உட்கொள்ளலாம்.

பொதுவாக மீனினம், மற்றும் நீரில் மாத்திரம் வாழும் பிராணிகள், வெட்டுக்கிளி ஆகியவை அறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. உணவாக உட்கொள்ளலாம். ஆனால், நீரிலும் நிலத்திலும் வாழுகின்ற பாம்பு, முதலை, தவளை என்பன (ஹராம்) இஸ்லாம் அனுமதிக்காதவையாகும்.

ஆடு, மாடு, ஒட்டகை, குதிரை, மான், மரை, முயல், உடும்பு, தானியங்களை பொறுக்கித்தின்னும் கோழி, வாத்து, புறா போன்ற பறவைகள், தீப்பறவை, சிட்டுக்குருவி ஆகியவற்றை உரிய முறைப்படி இஸ்லாமிய ஷரீஆ சட்ட விதிகளுக்கமைவாக அறுத்த பின்பே உணவாக உட்கெள்ளலாம். அவ்வாறு அறுக்கப்படாவிடின் அவற்றை உட்கொள்ள இஸ்லாம் தடைவிதித்து (ஹராமாக்கியு)ள்ளது.

ஜீவகாருண்யத்தை போதிக்கும் இஸ்லாம் தன்னுடைய தேவை நிமித்தம், அறுக்கப்படுகின்ற பிராணிகளாயினும் அவற்றின் மீதும் இரக்கத்தோடு நடந்து கொள்ளும் படி வலியுறுத்துகின்றது. அதேவேளை மனிதனின் சிறந்த பயன்பாட்டையும், சுகாதார ரீதியிலான நலன்களையும் கருதி, பிராணிகளை அறுக்கும் விடயத்தில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் கடமையாக்கியுள்ளது.

பிராணிகளை அறுக்கும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகளாவன:

அறுக்கப்படும் பிராணியை அறுக்குமிடத்திற்கு மென்மையாக எடுத்துச் செல்லல். மென்மையாகப்படுக்க வைத்தல், தாகமிருப்பின் பிராணிக்குத் தண்ணீர் புகட்டுதல், அறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளல், ஒரு பிராணிக்கு எதிரில் மற்றொரு பிராணியை அறுப்பதைத் தவிர்த்தல், அறுக்கப்படும் பிராணிகளின் கண்களில் படும் வகையில் அவற்றுக்கெதிரில் கத்தியைத் தீட்டாதிருத்தல் ஆகியவை பேணப்பட வேண்டிய பண்புகளாகும்.

மேலும் அறுக்கப்படும் பிராணியின் கழுத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி அறுப்பவரும் கிப்லாவை முன்னோக்கியிருந்தவாறு அறுப்பதை இஸ்லாம் விரும்புகின்றது.

கண்டிப்பாக பிராணியை அறுத்த பின் தாராளமாகத் துடிக்க இடம் கொடுக்க வேண்டும் முற்றாக உயிர் பிரிய முன்னர் கழுத்தைத் துண்டிக்கவோ, தோலை உரிக்கவோ கூடாது. அறுக்கையில் பிராணியின் உணவுக்குழாயும் சுவாசக்குழாயும் சிறிதளவும் விடுபடாமல் முழுமையாக அறுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இவ்விடயத்தில் சிறிதளவு தவறினாலும் அப்பிராணி உண்பதற்கு அனுமதிக்கப்படாத (ஹராமான) தாகிவிடும்.

பிராணியின் கழுத்திலுள்ள குரல் வளையை அதன் தலைப்பக்கம் வரக்கூடியதாக ஆக்கி கழுத்தின் இரு பக்கத்திலுமுள்ள இரு பெரும் நரம்புகளும் அறுபடும் வகையில் மேற் கூறியவாறு அறுப்பதே மிகச்சிறந்ததும் இலகுவான முறையுமாகும். பிராணியின் உயிர் இலகுவாகப் பிரிவதற்கும் இம்முறை வழிவகுக்கும்.

அறுக்கும் போது இடையில் நிறுத்தி நிறுத்தி அல்லது கத்தியை உயர்த்தி உயர்த்தி அறுக்கலாகாது. அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணி செத்ததாகவே கருதப்பட்டு உண்பதற்கும் (ஹராமான) அனுமதியற்றதாகி விடும்.

எனவே, கூரிய கத்தியால் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து ஒரே முறையில் அவசரமாக அறுப்பது அவசியமாகும். அறுப்பதற்கு அரபியில் “தப்ஹ்” எனப்படும். பிராணியை பருவ வயதையடைந்த ஆண், பெண் இருபாலாரும் அறுக்கலாம். ஆண்கள் மட்டும் தான் அறுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பொதுவாக அனுமதிக்கப்பட்ட பிராணிகளாயினும் தனக்குப் பழக்கமில்லாதவற்றை உண்ணாமலிருப்பது நல்லதென்றே இஸ்லாம் ஆலோசனை கூறுகிறது.

அறுப்பவர் முஸ்லிமாயிருத்தல், அல்லாஹ்வின் பெயரை மட்டும் சொல்லியறுத்தல், வேறு எவரினதும் பெயரைச் சொல்லியறுக்காமலிருத்தல் அவசியமாகும்.

 -மெளலவி எம்.எஸ்.எம். தஸ்லீம்

பிரதம இமாம்
கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Published by

Leave a comment