– காத்தான்குடி மதியன்பன்

(Mathiyanpan)
காதலர் தினம் இன்று..!
மனிதனாகப் பிறந்தவன்
காதலித்தே ஆகவேண்டும்..!
காதலிக்காதவனை
மனித இனத்தில் சேர்ப்பது பற்றி
மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆதலினால் காதலிப்போம்.!
சுகத்தை அறிந்தவன்
சும்மா இருக்க மாட்டான்.!
காதலிக்கத் தெரிந்தவன்
கடைசிவரை தோற்கமாட்டான்.
ஆதலினால் காதலிப்போம்.!
சொல்லுங்கள்…
ஒரு தினம் போதுமா
இந்த ஒப்பற்ற காதலுக்கு..?
காலமெல்லாம்
காதலிக்க கற்றுக் கொள்வோம்;..!
காதலிக்கலாம்
திருமறை குர்ஆனில்
தேன்துளிகள் நிறைந்திருக்கிறது..
தேடித் தேடிக் காதலிக்கலாம்…!
தாயவள் பாதத்தின் கீழ்
தனையனுக்கு
சுவனம் சொந்தமாயிருக்கிறது.
அவளன்பை
அதிகமதிகம் காதலிக்கலாம்.
நல்ல புத்தகத்தில்
நமக்கு
அறிவுரைகள் அடங்கிக் கிடக்கிறது.
அவற்றையெல்லாம்
ஆர்வத்துடன் காதலிக்கலாம்.
வணக்க வழிபாட்டில்
நமக்கொரு
வாழ்க்கையே தங்கியிருக்கிறது.
வாழ்நாளெல்லாம் காதலிக்கலாம்.
குழந்தைகள் சிரிப்பில்
குணமும்
குதூகலமும் குடியிருக்கிறது
கொஞ்சிக் கொஞ்சிக் காதலிக்கலாம்.
கட்டிய மனைவியைக்
கணவன்
தொட்டில் குழந்தையாய்
தூக்கி விளையாடிக் காதலிக்கலாம்.
சின்னத் திரைகளை
சிறை வைத்துவிட்டு
இயற்கையின் காட்சிகளை
இயன்றவரை காதலிக்கலாம்.
இப்படி ஏராளமிருக்க…
காதலென்ற பெயரில்
காவாலித்தனம் புரியும்
தாவும் குரங்குகளை
தள்ளிவைத்துவிடுங்கள்..!
தகாத உறவுகளுக்கு
தண்டவாளம் அமைத்து
அதிலே
பில்ம் காட்டும் மீடியாக்களை
பிரித்து வைத்து வைத்துவிடுங்கள்.
காதலென்ற பெயரில்
கற்பை களங்கப்படுத்தும்
சில்லறைத்தனமான சேஸ்டைகளை
சீக்கிரம் ஒதுக்கிவிடுங்கள்.
அந்நிய பெண்களோடு
அதிகமதிகம் உறவாடி
ஆண் பெண் புனிதத்தை
அசிங்கப்படுத்தாதீர்கள்.
பூவென்றும்.
காதலர் தின கார்ட் என்றும்
காசையும், பொருளாதாரத்தையும்
கரியாக்கி விடாதீர்கள்.
காதல் புனிதமானது
அதை
கண்டபடி கசக்கிவிடாதீர்கள்..!
Leave a comment