-OIT
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருடன் 6 எம்.பிக்களும் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு பொலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
கடந்த ஆண்டு அந் நாட்டு தலைமை நீதிபதி அப்துல்லா முகம்மத் கைது செய்யப்பட்டார். அதிபராக இருந்த நசீத்தீன் உத்தரவால் அவர் கைதானார். இதையடுத்து நாட்டில் புரட்சி வெடித்தது. நசீத் பதவியிலிருந்து விரப்பட்டார்.
நீதிபதி கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நசீத் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்பார்த்திருந்த உடனடியாக நசீத் இந்தியத் தூதரகத்துக்குள் நுழைந்துவிட்டார். அவருடன் அவரது ஆதரவு எம்பிக்கள் 6 பேரும் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், இந்தியாவில் தஞ்சமடையவும் இவர்கள் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
ஆனால், இந்திய அதிகாரிகளின் யோசனையைப் பெறவே அவர்கள் தூதரகத்துக்குள் சென்றுள்ளதாக அவர்களது கட்சியினர் கூறுகின்றனர்.
இந் நிலையில் நசீதை கைது செய்யவும், அப்பகுதியில் கலவரம் ஏதும் மூளாமல் தடுக்கவும் இந்தியத் தூதரகத்தை கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
கடந்த வாரம் நசீத் இந்தியாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற அனுமதி வாங்கி இந்தியாவுக்கு வந்த அவர் 9ம் தேதி மாலத்தீவுக்கு திரும்பியிருக்க வேண்டும். 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், 11ம் தேதி தான் அவர் மாலத்தீவுக்கே திரும்பினார்.
Leave a comment