மாட்டிறைச்சிக்கு பதிலாக பன்றி, குதிரை இறைச்சி விநியோகம்: மற்றுமொரு அதிர்ச்சியில் பிரித்தானிய அரசு!

BY: MJ
BY: MJ

-MJ

குறிப்பிடப்பட்ட இறைச்சி வகைகளில் குறிப்பிடப்படாத வேறு பிராணிகளின் இறைச்சிகளை கலந்து அல்லது திணித்து உணவுப் பண்டங்களை வழங்கும் ஏமாற்று உணவு நிறுவனங்களால் தற்பொழுது பிரித்தானிய அரசும் மக்களும் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

மாட்டிறைச்சியை (Beef-Frozen) அடிப்படையாகக் கொண்டு உணவுப் பண்டங்களைத் தயாரித்து பிரபல சுப்பர் மார்க்கட்களில் சந்தைப்படுத்தும் குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் திட்டமிட்ட மோசடிகளால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

கடந்த மாதம் அயர்லாந்து சுப்பர் மார்க்கட்டில் வாடிக்கையாளரால் கொள்வனவு செய்யப்பட்ட கோழி பேர்கரில், கோழி அல்லாத வேறு இறைச்சி இருந்ததை அறிந்த வாடிக்கையாளர், உரிய சுப்பர் மார்க்கட் முகாமையாளரிடம் குறித்த பண்டம் பற்றி  அதிருப்தி தகவலைத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் அது குதிரை இறைச்சி என்பதாக தெரிவிக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு மன்னிப்புக் கோரப்பட்டதுடன் குறித்த உணவுப் பண்டங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டிருந்தன.

அதன் பின்னர் உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (FSA) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ‘டெஸ்கோ’ சுப்பர் மார்க்கட்டில் இவ்வாறான குதிரை இறைச்சி உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு இருந்ததை கைப்பற்றினர்.

இவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிரித்தானிய பாடசாலை ஒன்றுக்கு வழங்கப்பட்ட காலை மற்றும் இரவு உணவுகளில் (Meal) மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி (Horse Meat) பொதிசெய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டிருந்தது.

சுவையிலும், தன்மையிலும் ஏற்பட்ட மாற்றத்தையறிந்த பாடசாலை நிர்வாகம், உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு அறிவித்து, குறித்த உணவுகளை பரிசோதனைக்குட்படுத்தியது. இதன்பின்னர் மாட்டிறைச்சி என பெயரிப்பட்ட உணவுப் பொதிகள் அனைத்தும் 100 வீதம் குதிரை இறைச்சி என்பதை குறித்த நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இதன்பின்னர் எழுந்த உணவுப்பண்டங்களின் புரளியை அடுத்து மாட்டிறைச்சி மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்ட்டுள்ள, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அத்தனை உணவுப் பண்டங்களையும் (Beef, Mince, Lasagnes, Burger) உணவு தரக்கட்டடுப்பாடு நிறுவனம் பிரித்தானியாவில் உள்ள அனைத்து சுப்பர் மார்க்கட் மற்றும் உணவு சாலைகளுக்கு, குறித்த பண்டங்களை விற்பனை செய்யவேண்டாம்  என வலுக்காட்டாயமாக அறிவித்திருந்தது.

இதன்படி குறித்த பண்டங்கள் விற்க முடியாது. ஏற்கனவே விற்கப்பட்டிருப்பின் வாடிக்கையாளர்களை உடன் திருப்பித் தரும்படியும், விற்பனைக்கு மற்றும் இருப்பில் இருக்கும் அத்தனை மாட்டிறைச்சி உணவுப் பண்டங்களையும் விற்பதிலிருந்து வாபஸ் பெறும்படியும் உத்தரவிட்டிருந்தது.

Environment Secretary Owen Paterson
Environment Secretary Owen Paterson

“இது ஓரு கவலையான மோசமான செய்தியாகும். இத்தகைய உணவுப்பண்டங்கள் அனைத்தும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். ஏமாற்று நிறுவனங்கள் சர்வதேச கிரிமினல்- குற்றத்திற்கு இணங்க தண்டிக்கப்படுவர்” என பிரித்தானிய சுற்றுச் சூழல் செயலாளர் ‘ஓவன் பெடர்ஸன்’  நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

உணவுப் பண்டங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களுக்கு உணவின் தரம், வெப்பநிலை, அறிவுறுத்தல், உணவின் மூலப்பொருள், காலாவதி திகதி, உண்ணபதற்கு உகந்தவை என்பதற்கான காரணங்கள் மற்றும் இதர கட்டாய விதிகளை பிரித்தானிய அரசு உணவு நிறுவனங்களுக்கு பட்டியலிட்டிருக்கின்றன. ஏனைய நாடுகளை விடவும் உணவுப் பண்ட தயாரிப்பு விதிமுறைகளில் பிரித்தானியா அதிக கவனம் செலுத்தி வருவதும் இங்கு நோக்கத்தக்கது.

இவைகளை மீறி எவ்வாறு மாற்று உணவு பரிமாற்றம் இடம்பெற்றது என்பதை தற்பொழுது அரசாங்கம் துருவி துருவி ஆராய்ந்து வருகின்றது. மேலதிக புலனாய்வு நடிவடிக்கைக்காக ‘ஸ்கொட்லாந்து யார்ட்’ பொலிஸ் பிரிவும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் ‘டெஸ்கோ’, ‘லிடில்’, ‘ஐஸ்லாண்ட்’, மற்றும் ‘அல்டி’ உட்பட ஏனைய அனைத்து சுப்பர் மார்க்கட்டிலும் மாட்டிறைச்சி உணவுகள் விற்பதிலிருந்து வாபஸ்பெறப்பட்டிருக்கின்றன.

நேற்று 400,000 அரைத்த மாட்டிறைச்சி உணவுகளும், பல மில்லியன் ஏனைய மாட்டிறைச்சி பொதிகளும் பிரபல சுப்பர் மார்க்கட்டிலிருந்து  உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, பரிசோதணைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

குதிரை, ஏனைய விலங்குகளைப் பார்க்கிலும் பெறுமதியானது. ஓர் மாட்டை அறுத்து இறைச்சி பெறுவதிலும் பார்க்க ஓர் குதிரையை வாங்கி அறுத்து இறைச்சி பெறுவது என்பது பல மடங்கு செலவானதாக, விலை உயர்வானதாக இருக்கின்றது. இப்படி இருக்கையில், எவ்வாறு குதிரை இறைச்சி மாட்டிறைச்சி என்ற பண்டங்களில் பொதிசெய்யப்பட்டன என்பது ஓர் கேள்வியாக இருக்கின்றது.

களவாடப்பட்ட குதிரைகளின் இறைச்சியாக அல்லது செத்து மடிந்த குதிரைகளின் இறைச்சியாக இவை இருக்கலாம் எனவும் தற்பொழுது சந்தேகத்தின் பேரில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் இத்தகைய உணவு தயாரிப்பு நிலையங்களை மோசடியின் பேரில் இரத்து செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதுமாத்திரமன்றி குறித்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடிவக்கைகளும், முழுமையான வியாபார தடைகளும் மேற்கொள்ளப்படும்.

கடந்த வாரம் முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட மாட்டிறைச்சி பொதியில் மாட்டிறைச்சிக்குப் பதிலாக பன்றியின் இறைச்சி பொதி செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment