ஆப்கானிஸ்தானை யாருமே இவ்வளவு அழகாக காட்டியதில்லை!
-OIT
விஸ்வரூபம் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலேயே குடும்பத்தோடு பார்த்து ரசித்தார். படமாக்கத்தையும், கமல்ஹாசனின் நடிப்பையும் அவர் வெகுவாகப் புகழ்ந்தார்.
விஸ்வரூபம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் விழாக் கோலம் பூணடு படத்தைப் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று திரையுலகினருக்காக படத்தைப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். இதில் கமலுடன் சேர்ந்து திரையுலகமே திரண்டு வந்து படம் பார்த்தது.
ஆதரவே தராத சரத்குமாரும் வந்து பார்த்தார்
கமலுக்கு விஸ்வரூபம் மூலமாக பிரச்சினை எழுந்தபோது ஒரு ஆதரவையும் தராத, எதையும் பேசாமல் கமுக்கமாக இருந்தவரான நடிகர் சங்கத் தலைவரான சரத்குமாரும் நேற்று படம் பார்க்க வந்திருந்தார்.
வீட்டில் வைத்து ரஜினி பார்த்தார்
தனது நண்பரான ரஜினிக்கு வீட்டிலேயே இருந்து குடும்பத்தோடு படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் கமல்ஹாசன். இதனால் ரஜினி தனது குடும்பத்தோடு வீட்டில் இருந்தபடி படத்தைப் பார்த்து ரசித்தாராம். மேலும் படமாக்கமும், கமலின் நடிப்பும் பிரமாதம் என்றும் பாராட்டினாராம்.
ரஜினி குறித்து கமல் பெருமிதம்
மிரட்டி வி்ட்டார் கமல் – குஷ்பு
படம் பார்த்த நடிகை குஷ்பு கூறுகையில், இன்னும் நான் மிரட்சியிலிருந்து மீளவி்ல்லை. ஹாலிவுட்டையும் தாண்டிப் போய் விட்டார் கமல். பிரமாண்டம் என்றால் இதுதான். மிரட்டி விட்டார் கமல். இதில் நடிக்காமல் போய் விட்டோமே என்று வருத்தப்படுகிறேன். இதன் தொடர்ச்சியில் நடிக்க வைப்பார் என்று நம்புகிறேன்.
தவறாக எதுவும் இல்லையே
இப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் வகையிலான காட்சி எதுவும் இல்லை என்பது எனது கருத்து. ஆப்கானிஸ்தானை யாருமே இவ்வளவு அழகாக காட்டியதில்லை. முஸ்லீம்களை சரியான முறையில்தான் காட்டியுள்ளார் கமல் சார். நான் ஒரு முஸ்லீம். நீங்கள் எதையும் பார்ப்பதில்தான் இருக்கிறது என்றார் குஷ்பு.
அருமையான படம் -மும்தாஜ்
நடிகை மும்தாஜ் கூறுகையில், மிகவும் அருமையான படம். அருமையான கேமரா. படத்தில் முஸ்லீம்களைத் தவறாக சித்தரித்து ஒரு காட்சி கூட இல்லை. நான் ஒரு முஸ்லீம். உண்மை என்னவோ அதை காட்டியுள்ளார் கமல் சார் என்றார்.
கமல்ஹாசனின் பெரிய முயற்சி – சரத்குமார்
கமலுக்குப் பிரச்சினையின்போது ஆதரவு தராமல், படம் மட்டும் பார்க்க வந்த சரத்குமார் கூறுகையில், இது மிகப் பெரிய முயற்சி. ஆங்கிலப் படம் பார்ப்பது போலவே இருந்தது. பெஸ்ட் ஆப் லக் என்றார்.
அருமையான படம் – ராதிகா
கமலுக்குப் பிரச்சினை வந்தபோது அவரது வீடு தேடி வந்து ஆறுதலாக பேசிய ராதிகா கூறுகையில், மிகவும் அருமையான படம். கமல்ஹாசன் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டார். முஸ்லீம்கள் குறித்து ஒரு தவறான காட்சி கூட இல்லை என்றார்.
சந்தோஷமாக காணப்பட்ட கமல்
சில நாட்களுக்கு முன்பு உணர்ச்சிகரமாக காணப்பட்ட கமல்ஹாசன், தனது திரையுலக சகோதரர்கள் படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டித் தள்ளியதைக் கண்டு சந்தோஷமான முகத்துடன் காணப்பட்டார்.
கமல் எனும் மகா நடிகன்
படத்தில், சர்ச்சைகளை கொஞ்சம் மறந்துவிட்டு பார்த்தால், கமலின் புதிய பரிமாணம் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. ஒரு இயக்குநராக ஹேராமிலேயே தனது ‘க்ளாஸ்’ஐ நிரூபித்துவிட்டவர் கமல். அவரது நடிப்புக்கு புதிதாக சான்றிதழ் தேவையில்லைதான்.
ஆனால் விஸ்வரூபத்தில் அந்த கதக் கலைஞராக வரும் முதல் 30 நிமிடங்களைப் பார்க்கும் எந்த சக கலைஞரும் கமலை நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவு மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் கமல்.
குறிப்பாக ‘உன்னைக் காணாத..’ பாடலின் வரிகளுக்கு, இசைக்கு கமல் தரும் பாவங்கள் இருக்கிறதே.. அந்த கதக் மாஸ்டரே எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டியதாக வந்த செய்திகளில் கொஞ்சமும் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கமல்ஹாஸன் நடையை எத்தனையோ படங்களில், எத்தனையோ விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க வீதிகளில் ஒரு நடனப் பெண்ணின் நளினத்தோடு நடந்து செல்வார் பாருங்கள்… ஏபிசி என அத்தனை க்ளாஸ் ரசிகர்களின் அப்ளாஸ்களையும் அள்ளும் நடிப்பு அது.
முதல் 30 நிமிடங்கள் ஒரு நாட்டியக் கலைஞனாகவே மாறிவிட்டார் கமல். போனை எடுக்க வரும்போது ஒரு நடை நடக்கிறார், சாலையில் ஓடும்போது, பேசும்போது காட்டும் முகபாவம், குரல், விரல்களால் முடியைக் கோதும்போது, கண்களில் நளினம் காட்டும்போது என மிக நுண்ணியமான விஷயங்களில் மிக மிக பிரயாசைப்பட்டு தனக்கு நிகர் ஒரு நடிகன் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
அதே போல நாட்டியக் கலைஞன் என்ற மறைப்பிலிருந்து அவர் உண்மையிலேயே யார் என்பதை வெளிக்காட்டும் சூழல், அதை அவர் உணர்த்தும் விதம்… நடிப்புக்கு தனி இலக்கணமே சொல்கிறது.
மென்மை நடிப்பு மட்டுமல்ல… மிரளவைக்கும் ஆக்ஷனிலும் தனது நடிப்பு உலகத் தரம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கமல். ஜேம்ஸ்பாண்ட், இங்கிலாந்து துப்பறியும் நிபுணர் போல… இந்திய சினிமாவுக்கு கமல் ஒரு உதாரண கேரக்டரை உருவாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல.
இந்த விஸ்வரூபத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கமல் எனும் அற்புதமான நடிகனே என்பது ரசிகர்களின், விமர்சகர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு!
Leave a comment