வெளியாகிறது விஸ்வரூபம்

03-viswaroopam-65656-300[1]விஸ்வரூபம் திரைப்படம் சுமூகமான முறையில் வெளியாவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

விஸ்வரூபம் தொடர்பான சர்ச்சை நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் கோரிய சர்ச்சைக் காட்சிகளின் ஆடியோவை மட்டும் ஆப் செய்து விட கமல்ஹாசன் ஒப்புக் கொண்டார். இதை இஸ்லாமிய அமைப்புகளும் ஏற்றுக் கொண்டன.

இதையடுத்து தற்போது படத்தை சுமூகமான முறையில் வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும் தொடங்கியுள்ளது. முதலில் படம் வெளியிடுவதற்குத் தடையாக இருந்த 144 பொலீஸ் தடை உத்தரவை நீக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு போயுள்ளதாம்.

இதுதொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் போயுள்ளது. தமிழக வரலாற்றில் சமீபகாலத்தில் ஒட்டுமொத்தமாக அத்தனை மாவட்டங்களிலும் ஒரு சினிமாப் படத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்த்கது.

தடை நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு இருந்து வந்த தடையில் முதல் கட்டம் நீங்கியுள்ளது. அடுத்து உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பும், அரசுத் தரப்பும் தத்தமது நிலையை விளக்கிய பின்னர் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றமும் நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(OIT)

Published by

Leave a comment