பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவகரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது.
இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்கடிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன.
தரைக்கு கீழும் கூட பனி! வடக்கில் 66.33 அட்சர ரேகைப் பகுதிதான் ஆர்க்டிக் வட்டம் எனப்படுகிறது. இங்கு ஓர் அதிசயத்தைக் காணலாம். நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசிக்கொண்டிருக்கும். இது ஜூலை மாதம் நடக்கும். ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பத்தின் அளவு அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். ஆர்க்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர்காலத்தில் சூரியனையே காண முடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் உள்ள மறையாத பகலும் காணப்படும்.
வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி.மீ. வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் காணப்படும். இங்கு சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தெரியும். பின்லாந்தின் கால்பகுதி வட ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது.
எனவே, அதன் வடக்கு முனையில் கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகரவோ மறையவோ மாட்டார். நோர்வேயின் சவால்பார்ட் என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 நாட்கள்) 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக் கொண்டு காட்சி அளிப்பார். அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.
-தினகரன்
Leave a comment