– பழுலுல்லாஹ் பர்ஹான்

உள்ளுராட்சி சட்டத்திற்கமைய இந்த தனிநபர் பிரேரனை தொடர்பான விவாதங்கள் அடுத்த அமர்வில்- ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் சபையில் அறிவிப்பு
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மாதந்த அமர்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் எறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
வழமை போன்று சபைக்கு வருகை தந்த எறாவூர்பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. ஸித்தீக், ‘ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளரின் முறைகேடான செயற்பாடுகள்’ எனும் தனிநபர் பிரேரனையை முன்வைத்த போது, அதற்கு கேள்வி எழுப்பிய பிரதேச சபை தவிசாளர், ‘நீங்கள் குறித்த பிரேரனையை எப்போது சமர்ப்பித்தீர்கள்’ என்று வினவிய போது, அதற்கு பதில் அளித்த ஸ்ரீ.ல.மு.கா பிரதேச சபை உறுப்பினர், கடந்த 23ம் திகதி சமர்பித்ததாக கூறினார்.
அதற்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் ‘உள்ளுராட்சி சட்டத்திற்கமைய சபைக்கு சமர்பிக்கப்படுகின்ற பிரேரனைகள் ஏழு நாட்களுக்கு முன் பிரதேச சபையின் செயலாளரிடம் கையளிக்க வேண்டும் என்றும், அடுத்த அமர்வில் அந்த பிரேரனை தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் கூறினார்.
அதற்கு மீன்டும் கருத்து தெரிவித்த ஸ்ரீ.ல.மு.கா பிரதேச சபை உறுப்பினர், வழமையாக மாதாந்த அமர்வு 30ம் திகதி நடைபெறுவதால்தான், தான் 23ம் திகதி சமர்ப்பித்ததாகவும் கூறினார். அதற்கு மீண்டும் கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர், குறித்த திகதியில் பிரதேச சபை உப தவிசாளருக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், அதனால்தான் 30ம் திகதி நடைபெறுகின்ற மாதாந்த அமர்வை நேற்று 28 ஆம்திகதி நடத்தியதாகவும் கூறினார்.
அந்த தனிநபர் பிரேரனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
‘ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளரினால் மேற்கொள்ளப்படும் (மேற்கொண்ட) சில செயல்கள்’ எனும் தலைப்பில் 6 ஆறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவையாவன:
1) 2012ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, வெள்ளத்தினால் அள்ளுண்டு, சவுக்கடி கடலில் ஒதுங்கிய பெறுமதிமிக்க மரங்களை, பிரதேச சபை வாகனங்களில் ஏற்றி, தனது வீட்டிலும் சபை வளவிலும் இறக்கி (பொது மக்களின் பார்வைக்காக) வைத்திருந்தார். பின்பு சபை வளவில் இறக்கப்பட்ட அத்தனை மரங்களும் மீண்டும் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்பணத்தின் வரவுகள் எதுவும் பிரதேச சபைக்கு சமர்பிக்கப்படவில்லை.
2) ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட எல்லைப் பகுதிப் பிரதேசங்களில், கைவிடப்பட்ட பழைய இரும்புகள், உடைந்த பழைய வாகனங்களின் பகுதிகளை பிரதேச சபை வாகனத்தைக் கொண்டு ஏற்றி சேமிக்கப்பட்டு, பின்பு அவைகளை சபைக்கும், சபை உறுப்பினர்களுக்கும் தெரியாமல் அவைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
3) சபை கூட்டறிக்கையில் உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமலும், அவர்களினால் முன்மொழியப்படாததுமான விடயங்களை (சேர்ப்பிப்பது) இணைத்துக் கொண்டு, பல மோசடியான செயல்களைச் செய்கின்றார். இனிவரும் கூட்டங்களில் தங்களின் பிரதிநிதியாக ஒருவர் கலந்துகொள்ள உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
4) ஏறாவூர்பற்று பிரதேசங்களில் இயங்கி வரும் அரிசி ஆலைகளுக்கு தவிசாளர், தான் விரும்பியவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கி வருகின்றனர். அனுமதிப் பத்திரம் வழங்கும் போது, சூழல் மாசடைவது, சுகாதாரம் எதனையும் கவனியாது தான் விரும்பியவாறு செயல்படுகின்றார்.
5) (ஜே.ஸி.பி.) பெக்கோ வாகனத்தைக் கொண்டு, மண் அகழப்படும் போது, அவ்வாகனம் வேலை செய்யும் நேரங்களை கூட்டிக் களித்து சம்பளம் பெறுவதன் மூலம், பிரதேச சபைப் பணத்தை வஞ்சிப்பது. உதாரணமாக 11 மணி 20 நிமிடம் வேளைசெய்த பெக்கோ இயந்திரத்திற்கு 55 மணித்தியாலங்களாகக் கூட்டி, கூலியைப் கொடுப்பதாக சபைக்கு காட்டுவது.
6) பிரதேச சபை வாகன சாரதிக்கு (23.01.2013) அடித்து காயப்படுத்தியுள்ளார்.
போன்ற இவ்வாறான விடயங்கள் அந்த தனிநபர் பிரேரனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரேரனையின் பிரதிகள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.



Leave a comment