புதிதாக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சினை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் வழங்கியமையானது இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி சிறுபான்மை சமூகத்திற்கு பெற்றுத்தந்த மிகப்பெரிய கௌரவமாகும் என நேற்று புதிதாக பதவியேற்ற பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தன்கைவசம் வைத்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் பதவியை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதியான முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியுள்ளதனால் வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றலாம்.
கடந்த முப்பது வருட கால பயங்கரவாத யுத்தத்திற்கு பின்னர் நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய ஒரு தேவைப்பாடு உள்ளது. இந்தத்தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுடன் இணைந்து பூர்த்திசெய்ய முடியும்.
முதலில் இப்படியான பாரிய அமைச்சின் பிரதியமைச்சர் பதவியை எனக்கும் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நாடு முழுவதும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மக்களை மேம்படுத்தி வறுமையை ஒழித்து தனியார் முதலீடுகளை இட்டு உல்லாசத்துறையை விரிவு படுத்தி ஏனைய உற்பத்திப்பொருட்களை உற்பத்திசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து இந்த நாட்டை சிறந்த நாடாக குறித்த அமைச்சினூடாக மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவர் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சராகவும் தொலைத்தொடர்பு சேவைகள் பிரதியமைச்சராகவும் மற்றும் பல பொறுப்புக்களிலும் ஏற்கெனவே கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

![n41[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/n4111.jpg?w=125&h=149)
Leave a comment